சிவராத்திரிக்கு கோவிலுக்கு சென்ற எனது கணவரை இராணுவ புலனாய்வு பிரிவினரே கூட்டிச்சென்றனர் என வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெற்று வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பெண்ணொருவர் சாட்சியமளித்தார்.
வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கையிலேயெ இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர், எனது கணவரும், எனது சகோதரியின் மகனுடன் ஒருவரும் சிவராத்திரி பூசைக்காக எமது வீட்டிற்கு அண்மையில் இருந்து கோவில் ஒன்றுக்கு சென்றிருந்தோம். இவ் வேளையில் நாம் சென்ற வீதியில் மின் விளக்குகள் ஒளிராத நிலை காணப்பட்டது.
அப்போது பற்றைக்குள் மறைந்திருந்த சிலர் எனது கணவரைப் பெயர் சொல்லி அழைத்திருந்தனர். சிற்று நேரத்தில் நால்வர் அங்கு வந்து எனது கணவரின் காதினுள் ஏதோ சொல்லி சுட்டிச்சென்றனர். அன்றிலிருந்து அவருக்கு என்னநடந்தது என்று எனக்குத் தெரியாது. கணவர் காணாமற்போவதற்கு முன்னரும், பின்னரும் எமது வீட்டை இராணுவத்தினர் தொடர்ச்சியாகக் கண்காணித்துவந்தனர். எனது வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனவும் வீட்டுக்குள் வந்து அறைகளை திறந்து விடுமாறும் கோருகின்றனர்.
ஆனால் நான் வீட்டுக்குள் போகாது திறப்பை கொடுத்து சோதனை செய்யுமாறு கோருவேன். அதன் பின்னர் நான் அவரை கூட்டிச்சென்றவர் தொடர்பில் அறிந்தேன். அவர் தந்திரிமலை இராணுவ முகாமைச்சேர்ந்த துசார என்ற பெயருடைய புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்.
எனது கணவர் காணாமற்போன சமயம் துசார என்ற அதிகாரியை நான் சந்திக்க முற்பட்டவேளை அவர் என்னைச் சந்திக்கவில்லை. கிராமிய அபிவிருத்திச் சங்கத்தில் இருந்த எனது கணவர் பொது வேலைகளை ஆர்வமாகச் செய்துவந்தவர். இதன் காரணமாக குறித்த இராணுவ முகாமைச் சேர்ந்தவர்களே எனது கணவரைக் கடத்திச் சென்றனர் என சாட்சியமளித்தார்.