| அமைச்சர்களின் ஊடக மாநாடு ஒன்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கண்டி வீதியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் நடைபெறும் என வவுனியா ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார அலுவலகம் முன் ஊடகவியலாளர்கள் சென்று காத்திருந்தனர். அப்போது ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் தான் ஊடகவியலாளர்களை சந்திப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அங்கும் ஊடகவியலாளர்கள் சென்று காத்திருந்தும் அமைச்சர்கள் வரவில்லை. இதனையடுத்து வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் ஊடக சந்திப்பு என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இணைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டது. குறித்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் பல மணித்தியாலங்களாக காத்திருந்தனர். எனினும் பிற்பகல் 4.30 மணியளவிலேயே இரு அமைச்சர்களும் அங்கு வருகை தந்தனர். அமைச்சர்களை சந்திப்பதற்கு பொது மக்களும் காத்திருந்தனர். அமைச்சர்களுக்கான வரவேற்பு, மக்கள் சந்திப்பு கலந்துரையாடல்களை என்பவற்றை ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுத்தனர். அதன் பின் மக்கள் மத்தியில் இருந்து தமது தேர்தல் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் கட்சி பிரமுகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த. அப்போது ஊடக சந்திப்பு தொடர்பில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பிரத்தியேக செயலாளர் ஒருவரிடம் சகோதரமொழி ஊடகவியலாளர் ஒருவர் வினவினார். அவர் அமைச்சரிடம் அது தொடர்பில் தெரியப்படுத்த அமைச்சர் அந்த ஊடகவியலாளரை வருமாறு அழைத்து கோபத்துடன் திரும்பி பார்த்து இப்ப இல்லை என்று கூறி துரத்தியதுடன் புகைப்படம் எடுத்தது போதும் வெளியில் செல்லுங்கள் என்று கூறி ஏனைய ஊடகவியளாளர்களையும் மக்கள் முன்னிலையில் கடும் தொனியில் விரட்டினார். அமைச்சர்கள் மற்றும் கட்சி தொடர்பான செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் அழைக்கப்பட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் காத்து நின்ற நிலையில் ஊடகசந்திப்பு நடத்தாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதன் போது அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் சுமதிபால, வடமாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரட்ன, சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா, ஜனாதிபதியின் இணைப்பாளர் சிவநாதன் கிசோர் மற்றும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி பிரமுகர்களும் உடன் இருந்தனர். |
ஊடகவியலாளர்களை வெளியே போ என்று விரட்டிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!
Add Comments


