மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வன்னியில் இராணுவம் பிரசாரம் - குளோபல் தமிழ் செய்தியாளர்கள்

(வடக்கில் பொது எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் இல்லை)
மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வன்னியில் இராணுவம் பிரசாரம் - குளோபல் தமிழ் செய்தியாளர்கள்:-


தற்போதைய ஜனாதிபதி மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு இலங்கை இராணுவத்தினர் வன்னியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வன்னிப் பிராந்திய குளோபல் தமிழ் செய்திகளின் செய்தியாளர்கள் தமது அறிக்கைகளில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மகிந்தவுக்கு வாக்களிக்குமாறு வன்னி மக்களை பல்வேறு வகையிலும் இராணுவம் நிர்பந்தித்து வருவதாகவும் எமது செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை காணாமல் போனவர்களை மகிந்த ராஜபக்ச விடுவிப்பார் என்றும் சில இடங்களில் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ரணிலா? மகிந்தவா என்பதை தீர்மானிக்குமாறும் ரணிலே புலிகளிடமிருந்து கருணாவைப் பிரித்தவர் என்றும் அவர் வந்தால் மீண்டும் யுத்தம் தொடங்கும் நீங்கள் இடம்பெயர நேரிடும் என்றும் இராணுவத்தரப்பினர் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை தருவார் என்றும் நீங்கள் இழந்த எல்லாவற்றையும் திருப்பித் தருவார் என்றும் கூறும் இராணுவம் மைத்திரிபால உங்களுக்கு எதையும் தரமாட்டார் என்றும் பிரசாரத்தில் ஈடுபடுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை அண்மையில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வடக்கு கிழக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார். வடக்கி் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிற்கும் சென்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்.

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளின் கோட்டையான முல்லைத்தீவில் ஜனாதிபதி பிரசாரம் என்றும் விடுதலைப் புலி பயங்கரவாதிகளின் தலைநகரம் இப்போது அபிவிருத்தி - ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் எனவும் மகிந்த டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

கிழக்கில் பொது எதிரணியின் மகிந்தவுக்கு எதிரான சில கூட்டங்கள் நடைபெற்றபோதும் வடக்கில் பொது எதிரணியின் எந்தவிதமான தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் நடைபெறவில்லை. இந்த சூழலைப் பயன்படுத்தி இராணுவம் பிரசாரத்தில் ஈடுபடுகின்றது.

பார்க்கும் இடமெல்லாம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரசார பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை இராணுவத்தரப்புட் தொடர்ந்தும் சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்து வருகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னமும் அறிவிக்காத நிலையில் மக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான குழப்ப நிலமை நீடிப்பதாக அரசியல் அவதானி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இந்த சூழலைப் பயன்படுத்தி இராணுவமும் ஆளும் கட்சியும் வடக்கில் தமிழ் மக்களின் வாக்கை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை பல விதமாக முன்னெடுத்து வருவதாக குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்து வருகின்றது.

குளோபல் தமிழ் செய்தியாளர்கள்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila