ஆளுங்கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பாதுகாப்பாக 2 ஆயுதம் ஏந்திய பொலிஸார் வழங்கப் பட்டிருப்பதாக வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டத்தில் விவசாய அமைச்சு மீதான குழுநிலை விவாதம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா, விவசாய அமைச்சருக்குக் காயம் ஏற்பட்டுள்ளமையும், அதனால் அவருக்குச் சுகவீனம் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் தான் கவலை அடைவதாகத் தெரிவித்தார்.
இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், 'அடி வாங்கின எங்கடயாக்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு தரவில்லை. உங்களுக்கு பொலிஸ் பாதுகாப்புத் தந்துள்ளார்கள்' என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, இந்தச் சம்பவம் காரணமாகத் தனக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை எனவும், ஆளும் கட்சியின் தேர்தல் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்குப் பாதுகாப்பாக இரண்டு பொலிஸார் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.