காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நம்பகத்தன்மை குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் கேள்வி எழுப்பியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படக்கூடிய, உண்மையைக் கண்டறியக்கூடிய யதார்த்தமான ஓர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
உரிய தரத்தில் விசாரணைகள் நடத்தப்படாமை மூலம் உள்ளக விசாரணைப் பொறிமுறைமையின் பலவீனம் வெளிப்பட்டுள்ளதாகவும், சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை உணர்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
நம்பகமான உள்ளக விசாரணைகளை நடத்தக் கூடிய ஓர் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் கட்டமைப்பு ரீதியில் பலவீனமானதும், வலுவற்றதுமாக காணப்படுகின்றது என மாற்றுக் கொள்கைகளுக்கான கேந்திர நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
நிதி ஒதுக்கீடு, நியமனம் உள்ளிட்ட இந்த விசாரணைக் குழுவின் ஒட்டு மொத்த செயன்முறைகளும் நிறைவேற்று அதிகாரத்தை தங்கி நிற்கும் வகையில் அமைந்துள்ளமையே மிகப் பெரிய பலவீனம் எனவும், இவ்வாறான பொறிமுறைமையின் மீது சர்வதேச ரீதியில் நம்பகத்தன்மை ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளது.


