ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கான தேர்தல் பிரச்சாரத்தை நேற்று ஆரம்பித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இராணுவத்தினரின் தியாகம்,ஜனாதிபதியின் திறமை மற்றும் அரசியல் உறுதிப்பாடு மூலமாக கிடைத்துள்ள அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு போன்றவற்றை சர்வதேச அழுத்தங்கள் மற்றும் அரசியல் நலன்களுக்காக விட்டுகொடுக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உறுதியான அரசாங்கமொன்று காணப்படுவது அதன் இறைமையை பாதுகாப்பதற்கு அவசியம். இது குறித்து இலங்கையின் சகல தரப்பும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும், உறுதியான அரசாங்கம் காணப்பட்டாலே சர்வதேசசதி முயற்சிகளை எதிர்க்கலாம்,என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கையின் செல்வாக்குள்ள பிரமுகர்கள் சிலரே தெரிவித்துள்ளது துரதிஸ்டவசமானது என குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவர்களில் ஒருவர் சனல் 4 இல் வெளியான விடுதலைப்புலிகளின் பிரச்சார படத்தை பார்த்தபின்னர் தனது பிள்ளைகள் தாங்கள் சிங்களவர்கள் என சொல்வதற்கு வெட்கப்படுவதாக குறிப்பிட்டவர் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர், சர்வதேச விசாரணையொன்றிற்காக விடுதலைப்புலிகளும், அவர்களது ஆதரவாளர்களும் போலியான ஆதாரங்களை உருவாக்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இன அடிப்படையிலான கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவரிடமிருந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கையெழுத்துடன் வெற்று படிவமொன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மூன்றாவது தரப்பொன்றினால் நிரப்பட்ட பின்னர் இந்த படிவங்கள் ஐக்கிய நாடுகள் விசாரணையாளர்களிடம் சமர்பிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
சர்வதேச விசாரணைகுழுவால் அறிவிக்கப்பட்ட காலஎல்லை முடிவடைந்த பின்னர் வந்து சேரும் ஆதாரங்களை நிராகரிக்கப்போவதில்லை என மனித உரிமை ஆணையாளர் அலுவலக பேச்சாளர் குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ள கோத்தா.இலங்கை குறித்து சர்வதேவிசாரணயை மேற்கொள்ளவேண்டும் என்ற வேகத்தில்.அடிப்படை கொள்கைகள் கைவிடப்படுவதை இது காண்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.