மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழ்த் தலைமைகள்!

ஈழத் தமிழ் மக்களை சிங்களத் தலைவர்கள் மட்டும் ஏமாற்றவில்லை, தமிழ் தலைவர்களும் ஏமாற்றியே வருகிறார்கள்.என்பதற்கு இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிப்பதென்ற முடிவே ஆதாரமாகும்
ஒரு நாட்டு மக்களின் பிரச்சினைக்கான முடிவை அந்த நாட்டு மக்கள் தான் எடுக்க வேண்டும். வேறு நாடுகள் எடுக்க முடியாது. இதற்கு சாட்சியாக இனப்பிரச்சினைகளுக்கு உள்ளாகி விடுதலை பெற்ற பல்வேறு நாடுகளின் வரலாறுகள் எம் முன்னால் உள்ளன.
தமிழ் மக்களுக்கான முடிவைத் தமிழ் மக்கள்தான் எடுக்க வேண்டும். தந்தை செல்வாவும், தலைவர் பிரபாகரனும் அப்படித்தான் வாழ்ந்து காட்டினார்கள். தமிழ் மக்களின் தலைமைகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்ற தலைவர் பிரபாகனின் எண்ணத்தில் உருவானதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
இத் தலைவர்கள் தந்தை செல்வாக்குப் பின் சொந்தக்காலில் நிற்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்களால் பல்வேறு தடவைகளில் கூறப்பட்டது. அதற்கு அவர்களின் நடைமுறைகளே சாட்சியாக இருந்தன.
இராசதந்திரம் என்பது தனது இனத்தை அடகு வைப்பதற்கு பாவிப்பதல்ல ,மாறாக தனது இனத்தை விடுதலை செய்வதற்குப் பாவிப்பதே உண்மையான இராசதந்திரமாகும்.
சிங்களத் தலைவர்களை தமிழ் மக்கள் நம்ப முடியுமா?
1919ல் இருந்து, இந்த 96 வருடங்களில் நம்பிக்கை தரக்கூடிய ஒரு வேலையச் சரி சிங்களத் தலைமைகள் செய்திருக்கிறார்களா? தங்களுக்கு ஆமாம் சாமி போடும் சில மனிதர்களுக்கு பணமும் பதவிகளுமே இவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இது காட்டிக் கொடுப்பதற்கான ஊதியமாகவே இருந்திருக்கிறது.
இலங்கையின் விடுதலைக்காக ஒரு தமிழனின் தலைமையில் தமிழ் சிங்களத் தலைவர்களால் முதன் முதலாக உருவாக்கிய கட்சியே “இலங்கைத் தேசிய காங்கிரஸ்” அதன் தலைவரே சேர். பொன். அருணாசலம் ஆவார்.
1919ல் உருவாக்கிய இக் கட்சியில் தமிழ் மக்களின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டதால் மனம் வருந்திய நிலையில் அதிலிருந்து விலகி 1921ல் தமிழருக்கென “தமிழர் மகா சபை “என்ற கட்சியை ஆரம்பித்தார்.
அன்றில் இருந்தே இனப்பாகுபாடும், இன ஒடுக்குமுறையும் ஆரம்பித்து விட்டன.. அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட 96 வருடங்களாகியும் இந்த நிலை மாறவே இல்லை.
இதன் வளர்ச்சியாகவே தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும் காலாத்துக்கு காலம் நடந்தேறி அதன் உச்ச கட்டமான முள்ளிவாய்க்கால் படுகொலையும் நடந்தேறியுள்ளது.
இன்று பல தமிழ் கிராமங்கள் சிங்களக் கிராமமாக மாற்றப்பட்டதோடு சிங்கள மாவட்டங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன.
1958 தமிழ் மக்கள் மீதான படுகொலை
1977 தமிழ் மக்கள் மீதான படுகொலை
1983 தமிழ் மக்கள் மீதான படுகொலை
2009 தமிழ் மக்கள் மீதான படுகொலை

இவைகள் குறிப்பிடத்தக்க படுகொலைகளாகும்
ஒற்றுமையாக இருப்பதற்காகவே உருவாக்கப்பட்ட ஒப்பத்தங்களான
பண்டா செல்வா ஒப்பந்தம்
டட்லி செல்வா ஒப்பந்தம்
ரணில் பிரபா ஒப்பந்தம்

இவைக்கு என்ன நடந்தது என்பது முழுத் தமிழ் மக்களுக்கும் தெரியும்.
சிங்களத் தலைவர்கள் தமிழ்த் தலைவர்களை எப்போதும் ஏமாற்றியே வந்திருக்கிறார்கள் என்பதே வரலாறு. இந்த நிலையில் சிங்களத் தலைவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்க முடியுமா?
தமிழர்களை ஒடுக்குவதிலும், கொலை செய்வதிலும் சிங்களத்தலைவர்கள் காலம்காலமாக ஒன்றுபட்டே இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள் என்பதே உண்மை. அதே ஒற்றுமை தமிழ் தலைவர்களிடம் இருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தான் உண்மையில் ஒற்றுமையாக செயல்படவேண்டும்.
ஆனால் இங்கு இது மாறி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. ஒடுக்குவோன் ஒற்றுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். பாதிக்கப்படுவோன் பிரிந்து நிற்கிறான்
தமிழ் மக்களின் சாபக்கேடு காலத்துக்கு காலம் விரல்விட்டு எண்ணக் கூடிய விலை போகின்ற தமிழ் தலைவர்களும் இருந்து கொண்டே வருகிறார்கள் என்பதுதான்.
என்றும் இல்லாதவாறு இன்று கொலைகார ராஜபக்ச இனம் காணப்பட்டு உலக அரங்கில் நிறுத்தப்பட்டிருக்கிற நிலையில், உலக நாடுகளே தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், அதைத் தணிக்கிற அல்லது தடுத்து நிறுத்தி சிங்களத் தலைவர்களுக்கு உதவுகின்ற வேலையையே தமிழ் கூட்டமைப்பின் முடிவு காட்டிநிற்கிறது.
60 வருடங்களுக்கு மேலாகியும் உலக நாடுகள் எவையும் எமக்கு உதவ முன்வரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயங்கள் உலக நாடுகள் தங்களின் நலன்களை மையப்படுத்தியே இராசதந்திர நகர்வுகளை மேற்கொள்கின்றன.
இன்று அவர்களின் நலனும், தமிழ் மக்களின் நலனும் ஒரே கோட்டில் சந்திப்பதாலேயே இன்று எமக்கு உதவ முன்வந்திருக்கின்றன. அது மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கும் வரைதான் எமக்கு சாதகமாக இருக்கும்.
மேற்குலக நாடுகளின் சார்பான மைத்திரி பாலா பதவிக்கு வந்தால் எமது பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டு இறுதியில் இன்றைய நிலையை விட மோசமான நிலைக்கே நாம் தள்ளப்படுவோம்.
இதை நன்றாகப் புரிந்துகொள்கிற மாதிரிச் சொல்வதானால் மைத்திரிபால பதவிக்கு வரும் நிலையில் இன்று எம்மை ஆதரிக்கிற மேற்குலக நாடுகளின் நலனும் சிங்கள மக்களின் நலனும் ஒரே கோட்டில் வந்து விடும். இதுதான் யதார்த்தமாகும். கடந்த காலங்கள் இதைத்தான் எமக்கு காட்டி நிற்கின்றன.
இதே மைத்திரிபால சிறிசேனா தான் கடைசி இரண்டு கிழமை பாதுகாப்பமைச்சராக இருந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்தை நடத்தினார் என்ற உண்மை எம் மக்கள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
கடைசி இரண்டு கிழமை ராஜபக்ச வெளிநாடு சென்றிருந்த போது பாதுகாப்பு அமைச்சராக இருந்து மிகக் கொடூரமான யுத்தத்தை நடாத்தியவர் இந்த மைத்திரிபால சிறிசேனவேயாகும்.
எம்மைக் கொல்வதில் சிங்களத் தலைவர்கள் அனைவரும் ஒன்றாகவே இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
சிங்களத் தலைவர்கள் எக்காலத்திலும் எம்மோடு ஒற்றுமையாக இருக்கப் போவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் தங்களின் பிரதிநிதி ஒருவரை வேட்பாளராக நிறுத்தி சிங்களத் தலைமைகளை நாம் நிராகரிக்கிறோம் என்ற உண்மையை மீண்டும் நாம் உலகுக்கு சொல்லி இருக்க முடியும். ஆனால் இது இப்போது செய்ய முடியாது காலம் கடந்து விட்டது
மாறன்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila