தமிழ்தாய்மாரின் கண்ணீரை மகிந்த இப்போதாவது புரிந்துகொள்வாரா?

தமிழ்தாய்மாரின் கண்ணீரை மகிந்த இப்போதாவது புரிந்துகொள்வாரா?ஏரிக்கரைப் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் ஆதங்கம்!

தமிழ் தாய்மார் சிந்தும் கண்ணீரை தனது புத்திரனின் கைதால் கண்ணீர் சிந்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இனியாவது புரிந்துகொள்வரா என்று இலங்கை  ஏரிக்கரைப் பத்திரிகை தினகரன் தன்னுடைய ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

குறித்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

யோசிதவுக்காக கண்ணீர்


தனது மகன் கைதாவதை அறிந்து நீதிமன்றத்திற்கு ஓடோடி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவர் கைது செய்யப்பட்டு கைகளில் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை நேரில் பார்த்ததும் கண்ணீர் விட்டழுதுள்ளார். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல இந்த நாட்டின் தலைவராக இருந்து உலக நாடுகளே பார்த்துக் கலக்கம் அடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக அழித்து நாட்டில் சமாதானம் நிலவ முக்கிய காரணகர்த்தாவான ஒரு தலைவன் தனது சொந்த இரத்தம் ஒன்று சிறை செல்வதைக் கண்டு கண்ணீர் விட்டதை தொலைக்காட்சிகளில் பார்த்த பலரும் ஒரு கணம் அதிர்ந்துதான் போயினர்.

கண்ணீர் சிந்தும் விடயமல்ல

ஆனாலும் இவரது மகன் குற்றம் சாட்டப்பட்டு ஒரு சந்தேக நபராக மட்டும்தான் சிறை செல்கிறார். இன்னமும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்டாலும் அவருக்குச் சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அவ்வளவுதான். இதற்குத்தான் முன்னாள் ஜனாதிபதி கண் கலங்கி நிற்கிறார். இதே ஜனாதிபதியின் ஆட்சியில் விடுதலைப் புலிகளை ஒழிப்பதாகக் கூறி எத்தனை தமிழ் இளைஞர்கள், யுவதிகள், குடும்பஸ்தர்கள், குடும்பப் பெண்கள் எனப் பலரும் கொல்லப்பட்டும் காணாமலாக்கவும் பட்டனர் என்பதை நினைத்துப் பார்க்கையில் இவர் மகனுக்காக கண் கலங்குவது ஒன்றும் பெரிய விடயமாகப்படவில்லை என்றே கூற வேண்டும்.

போரில் துடிக்கப்பதைக்க கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? இவர்களது மறைவினால் சொந்த உறவுகளை இழந்து இன்றுவரை கண்ணீர் விட்டழுது கொண்டிருக்கும் உறவுகள் எத்தனை பேர் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கையில் உண்மையில் இவர் மகனுக்காக கண் கலங்குவது ஒன்றும் பெரிய விடயமாகப்படவில்லை என்றே கூற வேண்டும். இது ஒருவர் துன்பப்டும்போது சுட்டிக்காட்டப்படும் வார்த்தைகள் அல்ல. எனினும் உறவுகளின் பிரிவால் ஏற்படும் வலியை ஒருவர் உணரும் போதாவது தன்னால் தொலைக்கப்பட்ட உறவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிடுகின்றோம்.

பொதுமக்கள் கொலை பிழை

உண்மையில் இவரது மகன் மீது ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, அது குறித்து விசாரணைகளை நடத்துவது அவசியம். ஆனால் குற்றம் எதுவுமே செய்யாத பச்சிளம் குழந்தைகள் முதல் எழுந்து நடக்க முடியாத முதியவர்கள் வரை இறுதி யுத்த காலத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தை நாம் நினைத்துப் பார்க்கத்தான் வேண்டும். விடுதலைப் புலிகளை அழித்தமை குறித்து நாம் எதுவும் பேசவில்லை. தமிழ் மக்களது உரிமைகளுக்காகப் போராடிய அவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதி இல்லாதொழித்தமை வேறு விடயம். ஆனால் பொது சனங்களைக் கொன்று குவித்தமையை மறந்துவிட முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது.

காணாமல் ஆக்கப்பட்ட கொடுமை


அதற்காக அவர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சதான் கொன்றார் எனக் கூறவில்லை. ஆனால் அன்று நாட்டின் தலைவராக இருந்த அவரால் நிச்சயம் இதனைத் தடுத்திருக்க முடியும். பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் எனச் சர்வதேச மற்றும் உள்ளூர் பொது அமைப்புக்கள் பல கூறிய எதனையும் கவனத்திலெடுக்காது புலிகளை அழித்தொழிக்கும் ஒரே நோக்கத்தில் பொதுமக்கள் கொல்லப்படவும் மஹிந்த ராஜபக்ச காரணமாக இருந்தார் என்பதை மறுதலிக்க முடியாது. அதுமட்டுமல்லாது யுத்தத்தின் பின்னர் படையினரிடம் சரணடைந்த பல அப்பாவி இளைஞர்கள், யுவதிகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர். இதற்கும் அவரது தலைமையிலான ஆட்சியே காரணமாக அமைந்துள்ளது.

காணாமல் போனவர்கள் பயங்கரவாதிகளா?


யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் நிறைவு பெறவுள்ள நிலையிலும் காணாமற்போன தமது உறவுகள் மீளவும் வருவார்கள் எனும் நம்பிக்கையில் அவர்களது புகைப்படங்களுடன் ஆர்ப்பாட்டங்களை நடத்திவரும் தமிழ் மக்களைப் பார்க்கையில் கல்நெஞசுடையோரது மனங்களிலும் சிறிது கசிவுவரும். ஆனால் இதற்கெல்லாம் காரணமாகவிருந்த ஆட்சியில் தலைமைப் பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ச ஐந்து வருடங்களாக அதனைச் சிறிதளவும் பொருட்படுத்தாது செயற்பட்டு வந்தமையானது அவர் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. மனதில் காயங்களுடன் அலைந்து திரியும் அம்மக்களை ஆசுவாசப்படுத்துவதற்காகவது ஓர் ஆறுதலை அவர் கூறியிருக்கவில்லை. இறந்தவர்கள், காணாமற்போனவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் எனும் நிலைப்பாட்டில் அவரது ஆட்சி இருந்தது.

இத்தகைய காரணங்களினாலேயே இன்று அவர் தனது மகனுக்காக கண்ணீர் சிந்துவதை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. சுமார் ஆறு ஏழு வருடங்களாக உண்ணும் உணவைக் கண்ணீராகச் சிந்தி வரும் தமிழ்த் தாய்மாரின் கண்ணீரைக் கண்டு கொள்ளாது ஆட்சி நடத்தியவர் எவ்வாறு அதிகாரமில்லாது பதவியிறக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டாரோ அதேபோன்று கண்ணீர் சிந்தும் நிலைக்கும் வந்துவிட்டார். இவை அவரை நோகடிப்பதற்காகவோ அல்லது வஞசம் தீர்ப்பதற்காகவோ எழுதப்படும் எழுத்துக்கள் அல்ல. அவரது தவறை உணர்த்தவே இங்கு பதிவிடப்படுகிறது.

தெய்வம் நின்றறுக்கும்

உண்மையில் அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்பது இன்றைய நவீன சூழலில் பொய்யாகிப் போயுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. அந்தளவிற்கு கண் முன்னே கால தாமதமின்றி ஒருவரது தவறை அவருக்கு அதே வடிவத்தில் உணர்த்த இறைவன் நல்ல சிலர் மூலமாக மனித ரூபத்தில் அவதாரம் எடுத்துள்ளார். அந்தளவிற்கு தான் செய்த தவறுகளை உணர்ந்து கொள்ள இறைவன் மனிதருக்கு தண்டனைகளையும் வழங்கி வருகிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும் கூறலாம். இதனை நாட்டு மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்திய உலக நாடுகளின் பல தலைவர்களிடம் நாம் கண்டு வந்தோம். இப்போது எமது நாட்டிலும் அது நேரிடையாக நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது.

தமிழ்தாய்மார் கண்ணீரை துடைத்திருந்தால்?

எது எவ்வாறிருப்பினும் ஒருவர் துன்பப்டும்போது அதில் பிறர் இன்பம் காண்பது என்பது அநாகரிமான செயற்பாடு. மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் குற்றமிழைக்காவிடின் அவர் தண்டனை எதுவுமின்றி விடுவிக்கப்படுவார். அதுவரை அவர்கள் சார்ந்த உறவினர்களிடம் ஒருவித பதற்றம், ஏக்கம், கவலை என்பன காணப்படவே செய்யும். இந்த ஏக்கத்தையும், கவலையையும் அவர்கள் பதவிகளில் இருக்கும்போது பிறருக்காக எண்ணிப் பார்த்து நடந்திருந்தால் இன்று அவர்களுடன் அவர்களது சோகத்தில் பங்கேற்க அனைவரும் திரண்டிருப்பர்.

பதவியில் இருக்கும்போது அப்பதவி அதிகாரம் கண்களை மறைத்தமையால் இன்று பதவி இல்லாத நிலையில் கண்ணீர் சிந்தும்போது திரும்பிப் பார்க்க எவரும் இல்லாத நிலை காணப்படுகிறது. தமிழ்த் தாய்மாரின் கண்ணீரை அன்று அவர் துடைத்திருந்திருந்தால் இன்று அவருக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது. இன்றாவது அவர் அதனை நினைத்து அவர்களது வலியைப் புரிந்து கொள்வாரா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila