அன்றைய ஆட்சியும் இன்றைய ஆட்சியும் என்று ஒப்பிடுகை செய்யப்பட்டால் பல்வேறு வித்தி யாசங்களை இரண்டு காலத்திலும் கண்டு கொள்ளலாம்.
அன்று மன்னர்கள் நீதியை நிலைநாட்டுவதே தம் பெரும் பணி என்றிருந்தனர். மக்கள் படும் துன்பங்களை அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதில் மன்னர்கள் கொண்ட மன உறுதியை இன்று எந்த ஆட்சியிலும் கண்டறிய முடியாது.
யானைப்படை, குதிரைப்படை புடைசூழ தேரில், பல்லக்கில் பவனி வந்த மாமன்னர்கள் மாறுவேடத்தில் திரிந்து மக்களின் குறைகளை அறிந்து கொண்டனர்.
ஆனால் இன்று ஆட்சியில்-அரசியல் பதவியில் இருக்கக்கூடிய எவரும் தங்களின் பகட்டான வசதிகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுத்தது கிடையாது.
சுருங்கக் கூறின் மக்கள் படும் அவலங்களை அறிவது தங்களுக்குத் தேவையற்ற இடைஞ்சல் என்று நினைக்கின்ற அளவிலேயே சமகால அரசியல்வாதிகளின்-ஆட்சியாளர்களின் மனநிலை உள்ளது.
மனுநீதிச் சோழன் என்ற மன்னனின் ஆட்சியில் நடந்த கதை இது. மன்னன் மனுநீதியின் அரண்மனையில் ஆராய்ச்சி மணிகட்டப்பட்டுள்ளது.
மக்கள் தங்கள் குறைகளை மன்னனுக்குத் தெரியப்படுத்துவதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. எனினும் ஆராய்ச்சி மணி ஒலித்தது கிடையாது. குறைகள் இன்மையே மணி அடிக்கப்படாமைக்குக் காரணம்.
இருந்தும் ஒருநாள் பசுமாடு ஒன்று மனுநீதிச் சோழனின் அரண்மனை நோக்கி வேகமாக வருகிறது. வந்த பசு ஆராய்ச்சி மணியை தன் கொம்பினால் இழுத்து அடிக்கிறது. மன்னனின் மாளிகை அதிர்கிறது. அந்தோ! ஆராய்ச்சி மணி ஒலிக்கிறதே! யாருக்கு என்ன குறை நடந்ததோ என்ற ஏக்கம் எங்கும் பரவுகிறது. மன்னன் மனுநீதி, நிலைமை என்னவென்று மந்திரியிடம் கேட்கிறான்.
மன்னா! தங்கள் மகன் வீதிவிடங்கன் தேரில் செல்லும் போது பசுவின் கன்றை தேர்க்காலால் மிதித்துக் கொன்று விட்டதன் குறை பகிரவே அப் பசு மணி அடித்தது என்று மந்திரி பதில் அளிக்கின்றான்.
மன்னன் மனுநீதி தாங்கொணாத் துன்பம் அடைகிறான். தன் பிள்ளையை இழந்து பரிதவிக்கும் அந்தப் பசுப்போல நானும் என் மகனை இழந்து பரிதவிப்பதே நீதி என்று உணர்ந்து தன் மகன் வீதிவிடங்கனை தேர்க்காலில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றுகிறான். இது மனுநீதிச் சோழ மன்னனின் தீர்ப்பு.
அட! இந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நீதி எத்தன்மையது என்றால்,
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தன் மகன் யோஷித ராஜபக்ச கைதானதும் மகிந்த ராஜபக்ச வெகுண்டெழுந்தார்.விடமாட்டேன் என்று துடித்தார். மகிந்தவின் குடும்பத்தை அரசு பழி தீர்க்கிறது என்று கர்ச்சித்தார். பாடம் புகட்டுவேன் என்று சூளுரைத்தார்.
நேற்றைய தினம் தன் மகனின் விடுதலைக்காக நீதிமன்றம் சென்று சட்டத்தரணியாக நின்று வாதிட்டார். என் பிள்ளைக்கு பிணை தருக என்று கேட்டார்.
அன்று மனுநீதி சோழனின் நீதி அது. இன்று மகிந்தவின் நீதி இது. தன் மகன் தெரியாமல் செய்த பிழைக்கும் மரண தண்டனை கொடுத்த மனுநீதியையும்;ஊழல் புரிந்த மகனுக்கு விடுதலை கேட்கும் மகிந்தவையும் ஒப்பிடுவது பாவம் ஆயினும்; அன்றைய ஆட்சியினையும் இன்றைய ஆட்சியினையும் வேறுபடுத்துவதற்கான ஒப்பிடுகை என்ப தால் இதை ஏற்றிடுக.


