சிங்களத் தலைவர்களின் வெற்றிக்கும், தமிழ்த் தலைவர்களின் தோல்விக்கும் கட்டியம் கூறும் ஐ.நா.மனிதவுரிமை ஆணையரின் பிரகடனத்தின் பின் தமிழ்த் தலைமைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
“அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு இல்லை என்பது இப்போது சர்வதேச விதியாகிவிட்டது” ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் 7-2-2016 அன்று யாழ்ப்பாணத்தில் வைத்து வடமாகாண முதலமைச்சர் திரு.சி.வி.விக்னேஷ்வரனிடம் நேரடியாக தெரிவித்தார்.
• “வெளிநாடுகளுடன் இணைந்த கலப்பு விசாரணை என்ற ஒன்றுக்கு இடமில்லை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியமை.
• “சமஸ்டிமுறையிலான தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு வாரங்களுக்கு முன் கூறியமை.
• “காணாமற் போனோர், காணாமல் ஆக்கப்பட்டோர் என்று எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை” பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொங்கல் தினத்தன்று கூறியமை.
புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மேற்படி நான்கு விடயங்களும் சுமூகமாக தீர்த்து வைக்கப்படும் என்று தேர்தல் காலத்தின் போது ரணில்-சிறிசேன அணியினராலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் பதவிக்கு வந்ததும் முதல் செய்த வேலை சர்வதேச போர்க்குற்ற விசாரணையில் இருந்து ராஜபக்ஷ குடும்பத்தினரையும், தளபதி பொன் சேகாவையும் பாதுகாத்தனர்.
அதேவேளை கலப்பு விசாரணை என்று பொய் கூறி ஏமாற்றியதுடன் தற்போது இனப்படுகொலை புரிந்த தலைவர்கள் மட்ட விசாரணைக்கு முற்றுப்புள்ளி வைத்து சிப்பாய்கள் மட்ட உள்நாட்டு விசாரணையைப் பற்றி பேசுகின்றனர். அத்துடன் அதுவும் காலகதியில் உரிய ஆதாரங்களுடன் நிருபிக்கப்படவில்லை என்று கூறி அவர்கள் மீதான விசாரணைகளும் குற்றத் தீர்ப்பின்றி, தண்டனைகள் இன்றி முடிவடைந்துவிடும்.
அடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பதவிக்கு வந்து 100 நாட்களுக்குள் நிகழும் என்று வாக்குறுதி அளித்து தமிழ் மக்களின் வாக்குக்களால் வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்த பின்பு அரசியற் கைதிகள் என்று எவரும் இல்லை அனைவருமே கிறிமினல் குற்றவாளிகள்தான் என்று கூறியதுடன் பொதுமன்னிப்பு என்ற வாக்குறுதியையும் கைவிட்டனர்.
தற்போது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் வாயால் பொதுமன்னிப்பு என்ற ஒன்று இனிமேல் சர்வதேச அரங்கில் இருக்காது என்று கூறச்செய்து அதற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
தமிழ் அரசியற் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருந்த காலத்தில் பொதுமன்னிப்பு என்பது நடைமுறையில் இருந்தது. எனவே பொதுமன்னிப்பு என்பது இல்லை என்று இப்போது தீர்மானிக்கப்படுமேயானால் இனிமேல் செய்யப்படும் “குற்றங்களுக்காக” கைதாகுபவர்களுக்குத்தான் அது பொருந்துமே தவிர ஏற்கனவே செய்யப்பட்ட “குற்றங்களுக்கோ” அல்லது அதன் பேரில் ஏற்கனவே கைதானவர்களுக்கோ அது பொருந்தாது என்பது நீதி நெறிமுறையாகும். அந்த நீதி நெறிமுறைகூட ஈழத்தமிழ்க் கைதிகளின் விடயத்தில் அர்த்தமற்று இருக்கிறது. இது ஒரு வெறும் சாட்டுப் போக்கான விளக்கம் என்பதை புரிந்து கொள்ள இது போதுமான உதாரணமாகும்.
தமிழ் மக்கள் நீதி மறுக்கப்பட்ட அரசியல் அனாதைகளாகிவிட்டனர். அவர்களுக்கு என்று தலைவர்களும் கிடையாது, அவர்களுக்காக நீதி பேசவும் யாரும் கிடையாது.
அடுத்து போர்க்குற்றம் பற்றிய விசாரணை ஆட்சியில் இருந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதும் அமைச்சர்கள் மட்டத்திலும், தளபதிகள் மட்டத்திலும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிப்பாய்கள் மட்டத்தில் மட்டும் விசாரணை என்பது நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் புலிகள் மட்டத்திலும் விசாரணை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு உண்மையான இனப்படுகொலையாளர்கள் அனைவரும் விசாரணைக்கு முன்பே விடுதலையாகிவிட்டனர் என்று சொல்வதைவிட அவர்கள் தமிழ் மக்களின் வாக்குக்களைக் கொண்டு விடுதலையாக்கப்பட்டுவிட்டனர் என்பதே உண்மை. இதற்கு நிகரான சுத்தமான ஏமாற்று வரலாற்றில் வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவும் தமிழ்த் தலைமையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் துணையுடன் இதனை நிறைவேற்றி உள்ளார்கள். இது இனப்படுகொலை புரிந்த சிங்கள அரசுக்கு உலக அரங்கில் கிடைத்த மாபெரும் அரசியல்-ராஜதந்திர வெற்றியாகும்.
மேலும் புலிகள் மட்டத்தில் சில குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதனைக் காட்டி சிங்கள சிப்பாய்கள் புரிந்த இனப்படுகொலையை சாதாரண தவறுதல் குற்றங்களாகக் காட்டி சமப்படுத்துவார்கள். இறுதியில் சிங்கள சிப்பாய்களின் குற்றம் சமன் புலிகளின் குற்றம் என்றும், புலிகளின் குற்றச் சமன் சிங்களச் சிப்பாய்களின் குற்றம் என்றும் ஒரு சமன்பாட்டைச் சொல்லி ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை அச்சமன்பாட்டின் முன் மூடி மறைத்து இறுதியில் எல்லாம் நல்லிணக்கத்தால் மேன்மை பெற்றுவிடும் என்று கூறி அனைத்து இனப்படுகொலைக்கும் முற்றுப்புள்ளி வைத்து இனப்படுகொலையாளர்களை காப்பாற்றி தமிழ் மக்களுக்கான நீதியை புதைத்து விடுவார்கள்.
ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் ரணில்-சிறிசேன தலைமை தமக்கான அனைத்து வெற்றிகளையும் சாதித்து விட்டது. தமிழ்த் தலைமையின் சாதனை என்ன? சிங்கள இனவாதத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தமைதான்.
இப்போதைய கேள்வி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இனியும் என்ன செய்யப் போகிறது என்பதுதான் அல்லது தமிழ் மக்கள் இனியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பப் போகிறார்களா என்பதுதான்.
2016ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் வரலாறு முழு ஏமாற்றத்துடனும், தோல்வியுடனும் தொடங்கியிருக்கிறது. இது தோல்விக்கான கட்டியமா அல்லது வெற்றிக்கான பாதையை தமிழர் புதியதோர் வழியில் தேடவேண்டும் என்பதற்கான ஆணையா என்பதை தமிழ் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஓர் ஆண்டுக்கு முன்பு சர்வதேச அரங்கில் ஈழத்தமிழரின் அரசியல் பலமுற்று இருந்தது. சர்வதேச அரங்கில் சிங்கள அரசு அவமானப்பட்டு தலைகுனிந்து நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது. ஆனால் கடந்த ஓராண்டுகால சிங்கள அரசியல் ராஜதந்திர நகர்வுகளின் விளைவாக தமிழரின் குரல் ஓரங்கட்டப்பட்டு பரிதாபகரமாக அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்டவர்களாக உள்ளனர். அதேவேளை சிங்கள அரசு உலக அரங்கில் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கிவிட்டது.
நெருக்கடிக்கு உள்ளான சிங்கள அரசை சர்வதேச அரசியல் தலைநிமிர வைத்த பெருமை தமிழ்த் தலைமையைச் சாரும். அதேவேளை தமிழ் மக்களை கதியற்றவர்களாக்கிய அபகீர்த்தியும் தமிழ்த் தலைமையைச் சாரும். சிங்கள அரசியலுக்கு பெருமையையும், தமிழ் அரசியலுக்கு சிறுமையையும் ஏற்படுத்திய தலைவர்கள் என்ற பெயர் வரலாற்றில் இன்றைய தமிழ்த் தலைவர்களுக்கு அமையப்போகிறது என்பது உண்மை. இதற்காக அவர்கள் கவலைப்படவோ, வெட்கப்படவோ மாட்டார்கள். ஏனெனில் இதனை தெரிந்தே அவர்கள் செய்கிறார்கள்.
சிங்களத் தலைமை நெருக்கடியில் இருக்கும் போதுதான் தமிழ் மக்கள் தமக்கான நலனை சாதிக்க முடியுமே தவிர சிங்களத் தலைமையை நெருக்கடியில் இருந்து விடுவித்துவிட்டு தமிழர்கள் எதனையும் அடைய முடியாது. இந்த இலகுவான சூத்திரத்தை புரிந்து கொள்ளாமல் சிங்களத் தலைமையை அதன் நெருக்கடியில் இருந்து விடுவித்துவிட்டு ஆப்பு இழுத்த குரங்காய் வாலை மாட்டிக் கொள்ளும் நிலையே ஏற்பட்டுள்ளது.
எந்தத் தமிழ் மக்களை சிங்கள அரசு இனப்படுகொலை செய்ததோ அதே தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்று தன்னை சிங்கள அரசு சர்வதேச அரங்கில் இருந்து விடுவித்துவிட்டது,
.நா.மனித உரிமைகள் அணையரின் மேற்படி கூற்று இதனை தெளிவாக நிருபித்து இருக்கிறது. முன்னைய குற்றங்களுக்கு பின்னைய சட்டம் செல்லுபடி ஆகாது என்ற நீதிக் கோட்பாட்டுக்கு மாறாக ஐ.நா.ஆணையாளரின் சிங்கள அரசு சார்பு கூற்று அமைந்திருக்கிறது. தற்போது ஐ.நா.ஆணையரின் மேற்படி கூற்றை தமிழ் அரசியல் கைதிகளுக்கு தெரிவிக்கப் போவதாக வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். அவர்களுக்கு உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்க வேண்டியது சரிதான். ஆனால் அதைத் தாண்டியும் அவசியமானது அவர்களின் நீதிக்காகவும், விடுதலைக்காகவும் எப்படி இனி யார் போராடுவது? தமிழ் மக்களின் நீண்ட எதிர்கால விடிவுக்காக எத்தகைய திட்டங்களின் அடிப்படையில் யார் எப்படி போராடப் போகிறார்கள்?
எக்கட்சிகள் பதவியில் இருந்தாலும் சிங்கள அரசுடன் ஒத்தோடுதல் தவறு என்பதை கடந்து ஓராண்டு நிருபித்துவிட்டது. அடுத்தது என்ன? அறிக்கைகளும், கண்டனங்களும் போராட்டம் ஆகாது. ஒரு முழுநீளத்திட்டத்தின் கீழ், போதிய சர்வதேச வியூகத்துடன் தமிழ் மக்களுக்கான போராட்டம் எப்படி முன்னெடுக்கப்படப் போகிறது என்பதை இப்போது களத்தில் உள்ளவர்கள் குறைந்தபட்சம் சுயவிளக்கம் அளிக்க வேண்டும். இது ஒத்தோடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அப்பால் தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசும் நியாயமான அனைவருக்கும் பொருந்தும்.
இதற்கான முதல் அடியை வடமாகாண முதலமைச்சர் முனைப்புடன் எடுத்து வைப்பார் என நம்புவோமாக! இந்த நம்பிக்கை காற்றில் கரையாது வேர்விட்டு விழுதுடன் விருட்சமாய் மிளிரும் நாட்கள் விரைவில் தோன்றுமென தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.