
ஜக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையில் தமிழீழ மாநில அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் கிளிநொச்சி வாழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை காலை 9 மணியளவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் நிகழ்வில் கலந்துகொண்ட பொதுமக்களே கூட்டாக மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளனர்.
ஜக்கிய இலங்கைக்குள் இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் தீர்வு காணப்படல் வேண்டும். இதன் மூலம் உருவாகும் இணைந்த வடக்கு கிழக்கிற்கு தமிழீழ மாநில அரசு என பெயர் வைக்கப்படல் வேண்டும் என பொதுமக்கள் தமது கருத்தை வலியுறுத்தி முன்வைத்துள்ளனர்.
மேலும் மாநில அரசுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும். அரச நிர்வாக மொழியாக சிங்களம், தமிழ் இரண்டும் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்படல் வேண்டும், அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வரையறுக்கப்படல் வேண்டும். பன்மைத்துவ சமூகங்கள் வாழ்கின்ற இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் உரிமைகள், நலன்கள், மதங்கள் என்பன பாதுகாக்கின்ற விடயங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும்.
ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படல்வேண்டும். மலையக, முஸ்லிம் மக்களுக்கு சம அந்தஸ்துடன் வாழ கூடிய வகையில் ஏற்பாடுகள் கொண்டுவரப்படல் அவசியம் போன்ற கோரிக்கைகள் புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்துப் பதிவின்போது குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சமஷ்டி என்பது பிரிவினை வாதம் அல்ல எனவும், இந்தியாவில் உள்ளது போன்று மாநில அரசு போன்ற முறைமைக்கு அமைவாக இருக்க வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.குறித்த கருத்துப் பதிவில் கலந்துகொண்ட பொதுமக்கள் வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துப்பதிவில் மக்கள் தயக்கமின்றி தங்களுடைய கருத்துக்களை முன் வைக்க வேண்டும் எனவும் இவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துக்கள் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு அரசியலமைப்புச் சீர்திருத்தம் மேற்கொள்ளுகின்ற குழுவிடம் வழங்கப்படும் என புதிய அரசியலமைப்பு சீர்திருத்த குழுவின் உறுப்பினர் சி. தவராஜா தெரிவித்தார்.
இதேவேளை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் சம்பந்தமான கருத்துப்பதிவினை கலாநிதி விஜேசந்திரன், சி.தவராஜா, சி.இளங்கோவன், ஆகியோர் அடங்கிய குழு முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.