முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளில் கடற்படையினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமது நிலங்களை அபகரித்து தம்மை நிலமற்ற அகதிகளாக்கி விட்டு தமது நிலத்தில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்குப் பெயர் பாதுகாப்பா என்றும் அப் பிரதேச மக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த காணிகளை கடற்படையினர் தமது வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலை அவர்களின் காணிகளில் இராணுவத்தினர் மரக்கறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு தமது பசியை போக்கி வருகின்றனர். இதுவா நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை என்று வட்டுவாகல் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை இந்தப் பகுதியில் உள்ள பனைமரங்களை கடந்த சில வாரங்களாக அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். பனைமரங்களையும் வடலிகளையும் தறித்து நெருப்பு வைத்து எரியூட்டும் நடவடிக்கை வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் வீதியால் செல்லும் மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.
போரினால் இப் பகுதியில் உள்ள பனை மரங்கள் பலவும் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது எஞ்சியுள்ள பனைமரங்களையும் படையினர் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப் பகுதியின் நிலம் மற்றும் சூழல் பாதிக்கப்படும் என்றும் வட்டுவாகல் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோத்தபாய கடற்படை முகாமை விஸ்தரிக்கும் நோக்கிலும் கடற்படையினர் மேலும் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடவுமே இவ்வாறு பனை மரங்களும் வடலிகளும் அழிக்கப்படுவதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமது காணிகளின் மர வளங்களை படையினர் அழிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை நல்லாட்சியில் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்று கோரி காத்திருக்கும் நிலையில் அதனை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கில் கடற்படையினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளுவது பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக வட்டுவாகல் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை கோத்தபாய கடற்படை முகாமை அகற்றி தமது காணிகளை தம்மிடம் மீள ஒப்படைத்து தம்மை மீள்குடியேற்றி இழந்த வாழ்வை மீண்டும் பெற அரசும் உரிய அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம் மக்கள் கோருகின்றனர்.