தற்கொடை செய்த போராளிகள் தற்கொலை செய்யும் அவலம்!-யார் பொறுப்பு

தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.
எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை.
நேற்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மனைவியும் முன்னாள் போராளியே!
இவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு?
இவர்களின் தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு? என்றால் இவர்களின் தற்கொடைகளுக்கு பொறுப்பாக இருந்தவர்களே இவர்களின் தற்கொலைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு வீரவணக்கம் செலுத்துபவர்களே புலம்பெயர் தேசத்தில் இருந்துகொண்டு கோடி கோடியாய் செலவு செய்து மாவீரர்தினம் செய்பவபர்களே புலம்பெயர் தேசத்தில் இருந்து போராட்டத்தை நடத்துவதற்கு பணம் வழங்கியவர்களே புலம்பெயர் தேசத்தில் புலிகளின் பணத்தை வைத்துக்கொண்டு வயிறு வளர்க்கும் பிணாமிகளே நீங்கள் அனைவருமே இவர்களின் தற்கொலைகளுக்கு பொறுப்பானவர்கள்.
போராளிகளின் தியாகத்தில் வயிறு வளர்த்தவர்களே, போராளிகளின் தியாகத்தால் பதவிவகித்தவர்களே போராளிகளின் தியாகத்தால் வாழ்ந்துகொண்டிருப்பவர்களே, ஒரு கனம் சிந்தியுங்கள்.
தமிழ் இனத்தின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த இந்த வீரர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன? புலம்பெயர் தேசத்தில் நீங்கள் எதற்காகவோ எல்லாம் ஒன்று கூடி பேசிய நீங்கள் இந்த முன்னாள் போராளிகளின் வாழ்வாதார திட்டங்களுக்காக ஒருதடவையாவது ஒன்று கூடி பேசியுள்ளீர்களா?
ஆறு வருடங்களாக தங்களின் துன்பங்களையெல்லாம் அடக்கி வைத்துக்கொண்டிருக்கும் இந்த தியாகிகளின் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது செயற்திட்டங்களை உருவாக்கியுள்ளீர்களா?
நாங்கள் அறிந்தவகையில் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக தாயகதேசத்திலோ அல்லது புலம்பெயர் தேசத்திலோ எவரும் ஒன்று கூடி ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை.
மூச்சுக்கு முன்நூறு தடவை விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் என்று கோசம்போடும் தலைவர்களே இந்த விடுதலைப்புலிகள் எங்கிருந்துவந்தவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று ஒருமுறையாவது சிந்தித்துள்ளீர்களா?
தமிழினம் மரணிக்க கூடாது என்பதற்காக இரவு பகலாக பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் எல்லையில் காவல்காத்த இந்த காவல் தெய்வங்கள் இன்று ஒரு பிடி உணவுக்கு வழியின்றி தற்கொலை செய்கின்ற அவலம் நடைபெற்று கொண்டிருக்கின்றது என்றால்.
இனி இந்த தமிழ் சாதியை யார் காப்பாற்ற முடியும் பாவித்து விட்டு தூக்கியெறியும் குணம் கொண்ட தமிழினமே நீ விடுதலைபெற தகுதியான இனமா? என்பதை ஒருதடவை ஆய்வு செய்துபார்.
தமிழா விடுதலைக்கா உழைத்தவர்கள் பிச்சை எடுக்கையில், விடுதலைக்காக உழைத்தவர்கள் விபச்சாரம் செய்கையில், அவர்களைப்பற்றி சிந்திக்க தவறிய உனது விடுதலைக் கோசம் எந்தவகையில் நியாயமானது.
ஒரு விடுதலைப்போராளி தனது குருதியை சிந்தி விடுதலைபெறலாம். ஆனால் ஒரு விடுதலைப்போராளி விபச்சாரம் செய்து விடுதலைபெறலாமா? இன்று தமிழின விடுதலை விபச்சாரமாக மாற்றப்பட்டுள்ளது. இது தமிழினத்தின் சாபக்கேடு.
பிணங்களுக்கு பின்னர் உங்கள் பணங்களை கொண்டுவந்து என்ன செய்யப்போகின்றீர்கள். இறந்தவனுக்கு பணம் வழங்கும் பண்பாட்டில் வளர்ந்த இனம் எம் தமிழினம் அல்லவா?

ஒருவன் இறந்தால் ஒன்பதுபேர் வருவார்கள் உதவுவதற்கு அவன் உயிருடன் இருக்கும்போது ஒருவர் கூட திரும்பிப்பார்ப்பதில்லை.
மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள். இனியொரு முன்னாள் போராளியின் தற்கொலை எம்தேசத்தில் இடம்பெறக் கூடாது. மரணங்களுக்கு மாலையிடுவதை நிறுத்திவிட்டு மரணங்களை தடுப்பதற்கு முயற்சிசெய்யுங்கள.
வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்துகொண்டிருக்கின்றது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு. தியாகத்திற்கு பின்னால் இருக்கின்ற சொத்துக்களை சுருட்ட நினைப்பவர்களே நாளை உங்கள் பிள்ளைகளையும் வரலாறு தண்டிக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு,
தேசப்புயல்களாக நின்று இன்று தமிழர்களுக்கு தேவையற்றவர்களாகிப்போன முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக உதவ முன்வாருங்கள் இருப்பவர்களையாவது காப்பாற்ற முயற்சிசெய்யுங்கள்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila