தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் துணையுடன் தமிழ் மக்கள் அரசியல் ராஜதந்திர ரீதியாக சிங்களத் தலைவர்களால் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதை மேற்படி ஜனாதிபதியின் வெற்றிக் கூற்று பறைசாற்றுகிறது.
காணாமல் போனோரைக் கண்டுபிடிப்பதற்கான தேசிய அமைப்பு ஞாயிற்றுக் கிழமை அன்று (14-2-16) உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அல்-உசைன் ஆதரித்துப் பேசியிருப்பது பெரிதும் கண்டனத்திற்குரியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது காணாமல் போன 15,000 பேருக்கு மேலானோர் பற்றி தைப் பொங்கல் தினத்தன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்கையில் அவர்கள் யாரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லையென்று கூறியிருந்தார். இக்கூற்று ஆதரிக்கும் வகையிலேயே ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சுக்களும் செயல்களும் அமைந்திருந்தன. இவ்வாறு அரசாங்கத்தின் மேற்படி கூற்றை ஆதரிக்கும் அல்-உசைனது நிலைப்பாட்டை காணாமல் போனோரைத் தேடுவதற்கான தேசிய அமைப்பு கண்டித்துள்ளது. ஆனால் சம்பந்தனும், சுமந்திரனும், சேனாதியும் இதுபற்றி இதுவரை வாய்திறக்காது இருப்பதுடன் கும்பகர்ண நித்திரையிலும் மூழ்கியுள்ளனர்.
மேலும் அரசியல் கைதிகள் தொடர்பாக பொது மன்னிப்பின் கீழான விடுதலை பற்றி கருத்து தெரிவித்த அல்-உசைன் அதற்கு சர்வதேச அரசியலில் இனி இடமில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனிடம் அல்-உசைன் கூறியபோது அதை முதலமைச்சர் கண்டிக்காததையிட்டு மேற்படி காணாமல் போனோரை தேடுவதற்கான தேசிய அமைப்பு வடமாகாண முதலமைச்சரை கண்டித்துள்ளது. அத்துடன் தமது கண்டனத்தை எழுத்து வடிவில் இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியிடமும், முதலமைச்சரிடமும் 15ஆம் தேதி திங்கள் கிழமை கையளித்துள்ளது.
மேலும் அரசியல் கைதிகள் இலங்கையின் உள்நாட்டு சட்ட விதிகளுக்கு உட்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சரிடம் அல்-உசைன் தெரிவித்ததையும் மேற்படி அமைப்பு அடிப்படையில் கண்டித்துள்ளது. அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்காமல் அதன் கீழ் விசாரணை செய்யப்பட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது பற்றிய விடயத்தில் அல்-உசைன் கருத்து தெரிவிக்காமையையும் மேற்படி அமைப்பு கண்டித்துள்ளது.
இத்துடன் கூடவே நோக்க வேண்டிய இன்னொரு விடயம் கவனத்திற்குரியது. அதாவது பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுமென நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலும், நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும் ஆட்சியில் இருப்போராலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராலும் மக்கள் முன் கூறி வாக்குச் சேகரிக்கப்பட்டது. ஆனால் அதனை அரசாங்கம் செய்யாதது மட்டுமல்ல தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அது தொடர்பாக அரசாங்கத்துடனோ அல்லது அல்-உசைனுடனோ பேசாதிருப்பது தமிழ் மக்களை விலைகூறி விற்றதற்குச் சமனாகும்.
இப்படி தமிழ் மக்களை பட்டப்பகலில் பகிரங்கமாக தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களிடமும், வெளிநாட்டு அரசுகளிடமும் விற்றுவிட்டனர்.
சம்பந்தனை முதிர்ந்த பழுத்த ராஜதந்திரி என்று தம் முதுகில் தாமே தட்டிக் கொண்டவர்கள் இப்போது இதற்கு சுயவிளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளதுடன் இந்த அவமானகரமான அரசியல் ராஜதந்திர தோல்விக்காக அவர்கள் பதவி விலக வேண்டியதும் அவசியமானதாகும்.
அவர்கள் அப்படி தோல்விக்குப் பொறுப்பேற்கப் போவதோ அல்லது அதற்காக அவர்கள் பதவி விலகப் போவதோ இல்லையென்பது உண்மையேயானாலும் தமிழ் மக்கள் இதனை கண்மூடிக் கொண்டு பார்;த்துக் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஒரு பதிவாக இக்கருத்தை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
தோல்வியின் ஆழத்தை சம்பந்தனும், சுமந்திரனும், சேனாதியும் எவ்வளவு தூரம் புரிந்திருப்பார்கள் என்பது எமக்குத் தெரியவில்லையானாலும் ஒரு குழந்தை பிள்ளைக்குக்கூட இந்த அவமானகரமான தோல்வியின் ஆழம் தெளிவாகத் தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஓன்றரை இலட்சம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மக்கள் துயருட்டு காணப்பட்டனர். அப்போது எரியும் வீட்டில் கொள்ளி பிடுங்கியது போல தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் துணையுடன் தமிழ் மக்களின் வாக்குக்களைப் பெற்று ரணில்-சிறிசேன-சந்திரிகா அணி பதவிக்கு வந்தது.
எந்த தமிழ் மக்களை சிங்கள அரசியல்வாதிகள் கொன்று குவித்தார்களோ அந்தச் சிங்கள அரசியல்வாதிகள் அவ்வாறு கொன்றுவிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாக்குக்களைப் பயன்படுத்தி சிங்கள அரசுக்கு ஏற்பட்ட ரத்தக் கறையையும் அவமானத்தையும் போக்குவதற்காகத் திட்டமிட்டனர். அதற்கு சம்பந்தன்-சுமந்திரன்-சேனாதி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கருவியாக்கினர்.
அவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை அவர்களின் காலால் தூக்கி தமிழ் மக்களை சிங்களத் தலைவர்கள் தாக்கும் ஓர் அரசியல் வியூகத்தை வகுத்தனர். அதில் தற்போது சிங்களத் தலைவர்கள் முழு வெற்றி பெற்றுவிட்டனர்.
சர்வதேச விசாரணை என்ற அபாயம் நீங்கும் வரை சுதந்திரக் கட்சியனர் ஐதேகவுடன் ஒத்துழைத்துச் செயற்பட்டனர். இரு கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடு இருப்பது போல காட்டிக் கொண்டாலும் நடைமுறையில் மேற்படி இரு கட்சியினரும் சர்வதேச விசாரணையை இல்லாது செய்யும் வரை ஒன்றுபட்டே செயற்பட்டனர்.
ஆனால் சிங்கள அரசுக்கும் இன்றைய அரசாங்கத்திற்கு முற்றிலும் சார்பான நிலைப்பாட்டை எடுத்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் தன் அறிக்கையை வெளியிட்ட மறுநாள் ராஜபக்ஷ தலைமையில் சுதந்திர கட்சியினரின் ஓர் அணி பிரிந்து தனி அலகாக செயற்படப் போவதாக ராஜபக்ஷ கூறி அதற்காக 13ஆம் தேதி கொழும்பின் புறநகர்ப் பகுதியில் அதற்கான தலைமைச் செயலகத்தை திறந்து கொண்டார்.
முதலாவதாக சர்வதேச விசாரணையை இல்லாது செய்வதற்கான இலக்கு பெருமளவு நிறைவேறிய நிலையில் தற்போது அரசியல் தீர்வை குழப்புவதற்கு இரு கட்சியினருக்கும் இடையே பிளவு ஏற்பட்டுவிட்டதாக காட்ட வேண்டியிருக்கிறது.
இலங்கையில் நடைமுறையில் உள்ள கட்சித் தாவாச் சட்டத்தின் கீழ் கட்சியின் மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 4ல் ஒரு பங்கினருக்கு மேல் கட்சியை விட்டு வெளியேறினால் அவர்களின் நாடாளுமன்றப் பதவிகள் காலியாக முடியாது. தற்போது சுமாராக 60 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் ராஜபக்ஷாவின் அணியினராக காணப்படுவதால் அவர்கள் பிரிந்து சென்று ஓர் அமைப்பாக பிரகடனப்படுத்தும் போது அவர்களின் பதவிகள் காலியாக மாட்டாது. மேலும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரைவிட அவர்கள் அதிக தொகையினர் என்பதால் எதிர்க்கட்சித் தலைமைத்துவம் சம்பந்தனிடமிருந்து பறிமுதலாகி ராஜபக்ஷாவிற்கு கைமாறிவிடும்.
அத்துடன் அரசியல் யாப்பு உருவாக்கத்pற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைக்க முடியாது என்பதை காரணம் காட்டி தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை இலவு காத்த கிளியின் கதையாக முடித்து விடுவார்கள். எப்படி அல்-உசைனின் இலங்கை விஜயத்தோடு போர்க்குற்ற கலப்பு விசாரணை, அரசியல் கைதிகளுக்கான விடுதலை, காணாமல் போனோர் பற்றிய தேடல் என்பன பொய்யாய், புளுகாய், பழங்கதையாய் பையவே போயினவோ அப்படியே இனி அரசியல் யாப்புத் தீர்வும் இரவோடு இரவா காணாமல் போய்விடும். கிணறு களவு போகும் நீதி நிர்வாகத்தைக் கொண்ட இலங்கையில் இப்படி எதுவும் களவும் போய்விடலாம், காணாமல் போய்விடலாம். ஒரு நாள் அதிகாலையில் சம்பந்தம் எழுந்து பார்க்கும் போது அவரது தலையில் இருந்த எதிர்க் கட்சித் தலைவர் என்ற கிரீடமும் காணாமல் போய்விட்டதை அவர் கண்ணாடியில் பார்க்க வேண்டிவரும்.
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்தில் அவரால் எதனையும் சாதிக்க முடியாமல் அவரது எதிர்க்கட்சித் தலைவர் காலம் எப்படி போனதோ அப்படியே சம்பந்தர் காலம் போய்விடும் என்று சொல்வதைவிடவும் சம்பந்தனின் எதிர்க்கட்சிக் கிரீடம் இன்னும் ஓராண்டுக்கு மேல் அவரின் தலையில் இருப்பதை சிங்களத் தலைவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்க்ள என்பதை வரலாறு நிருபிக்கும் காலம் விரைவில் கண்ணில் தெரியும்.
எப்படியோ வரலாறு காணாத பெரும் அரசியல் ராஜதந்திர தோல்விக்கு தமிழ் மக்களை உள்ளாக்கியவர்கள் என்ற முத்திரை சம்பந்தனதும், சுமந்திரனதும், சேனாதியினதும் முகத்தில் பூசணிக்காய் அளவில் வரலாறு தொங்கவிடும் என்பதில் சந்தேகமில்லை.


