நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா ஆணையாளர் இலங்கையின் அரச உயர்மட்ட சந்திப்பில் ஈடுபட்டிருந்த அதேவேளை, யுத்த பாதிப்புக்கு உள்ளான வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்த்திருந்தார். இந்நிலையில், தமது விஜயத்தின் இறுதி நாளான இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்-
‘இலங்கையின் புதிய அரசாங்கம் பல சிறந்த மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. யுத்தத்தின் பின்னரான சூழல் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது அத்துடன், ஊடக சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை என்பன உறுதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் இருந்த அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத்த அளவிற்கு குறைவடைந்துள்ளது. எனினும் வடக்கு கிழக்கில் அந்நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றமை கவலையளிக்கின்றது.
யுத்தத்தின்போதும் அதன் பின்னராக காலப்பகுதியிலும் திட்டமிட்ட முறையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றிருந்தால், அதுகுறித்து உரிய விசாரணைகள் நடைபெறும்.
யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினாலும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை இந்த விஜயத்தின் போது கண்டறியப்பட்டது. இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டிய உள்ளது.
வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையை இராணுவம் துரிதப்படுத்த வேண்டும். மேலும், அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களானவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளதென்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமைகள் குறித்து தான் வழங்கிய வாக்குறுகளில் இருந்து பின்வாங்குகின்றது என்ற அச்சத்தை பலர் என்னிடம் வெளியிட்டிருந்தனர். நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். வடக்கு கிழக்கு மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
நாட்டில் வெள்ளை வான் கலாசாரம் தற்போது குறைவடைந்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இம்முறை சுதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது, சிறந்த விடயம் என்பதோடு, நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும்.
மேலும், யுத்தக்குற்ற விசாரணையில் சர்வதேசத்தின் தலையீடு காணப்படவேண்டுமென பல தரப்பினர் குறிப்பிட்டு வந்தாலும், இலங்கையின் சட்ட கட்டமைப்பு அதனை அனுமதிக்காத வகையிலேயே உள்ளது. இந்நிலையில், சர்வதேசத்தின் தலையீடு காணப்பட வேண்டுமாயின் இலங்கையின் சட்டக் கட்;டமைப்பு அதற்கு ஏற்றாற்போல் திருத்தியமைக்கப்படவேண்டும். எனினும், அதற்கான சாத்தியக்கூறு இலங்கையில் இல்லை.
மேலும், இலங்கை தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தால் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட முடியுமே தவிர, ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான பிரேரணை நாட்டிற்கு எந்த வகையிலும் அச்சறுத்தலாக அமையாது’ என்றார்.