அண்மையில் சிறிலங்காவிற்கான எனது பயணத்தின் போது நான் பெருமளவான இராணுவ வீரர்களின் பிரசன்னத்தை அவதானித்தேன். இது உண்மையில் எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. அவர்கள் வாகனங்களில் அடிக்கடி செல்வதையும் நான் பார்த்தேன்.
சிறிலங்காவின் சில பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் வேறுபட்டதாகக் காணப்பட்டது. குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் எனக்கான புதிய தொலைபேசி சிம் அட்டையை வாங்கிய போது, அந்தக் கடைக்குள் சில இராணுவ வீரர்கள் உள்நுழைந்தனர்.இதன் பின்னர் திருகோணமலையில் நான் சண்டேலீடர் பத்திரிகையை வாங்குவதற்காக நகர் வீதி வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். கடந்த தடவையும் நான் அந்தப் பகுதியைப் பார்வையிட்டவன் என்ற வகையில் அது திருகோணமலையின் பேருந்து தரிப்பிடம் என்பது நினைவில் உள்ளது. நான் பத்திரிகை வாங்கச் சென்ற போது இரண்டு இராணுவ வீரர்கள் பத்திரிகைகள் வாங்குவதைக் கண்ணுற்றேன்.
இவர்கள் குறைந்தது எதையாவது வாசிக்க உந்தப்பட்டுள்ளனர் என நினைத்தேன். நான் மூன்று பத்திரிகைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் எனது விடுதிக்குத் திரும்பிய போது, சில கடற்படையினர் செல்வதை அவதானித்தேன்.
நீங்கள் சிறிலங்காவிற்குச் செல்லும் போது கொழும்பில் நீங்கள் அவதானிக்கும் சிறிலங்கா படையினரின் எண்ணிக்கைக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வீதிகளில் உலாவரும் சிறிலங்கா படையினரின் எண்ணிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்படும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா படையினரின் மிகவும் அதிகமாகக் காணப்படுவதை அவதானிக்க முடியும்.
2009 மே மாதம் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட தற்போதும் வடக்கு கிழக்கிலிருந்து சிறிலங்கா படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு சிறிலங்காவின் ஆட்சி மாறிய பின்னர், பொதுமக்களின் விவகாரங்களில் படையினர் தலையீடு செய்வது சற்றுக் குறைந்திருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் தற்போதைய அரசாங்கம் இன்னமும் நிறையச் செய்ய வேண்டியுள்ளது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் கீழும் பொதுமக்களின் நாளாந்த செயற்பாடுகளில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் தலையீடு செய்யும் சம்பவமானது தொடர்கின்றது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகம் காணப்படுவதால் பல்வேறு மிகத் தீவிரமான பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள் போன்றனவும் இடம்பெறுகின்றன. இவை இராணுவ மயமாக்கலின் நேரடித் தாக்கங்களாக உள்ளன’ என தமிழ் சிவில் சமூக அமைப்பின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
‘இவ்வாறான இராணுவமயமாக்கலால் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் நீண்ட உள சமூகத் தாக்களுக்கு உட்பட்டுள்ளனர் என்பதில் நான் வருத்தமடைகிறேன். நீதி, சமத்துவம் மற்றும் சுயநிர்ணயம் போன்ற வலிமையான மக்களின் கருத்தியல்களை ஒழிக்கின்ற ஒரு காரணியாகவும் இராணுவமயமாக்கல் காணப்படுகிறது’ என அவர் தெரிவித்தார்.
இவற்றுக்கப்பால், தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் நிலவும் இராணுவமயமாக்கலானது தமிழ் மக்களிற்கான எந்தவொரு நிலையான நீதியான நிகழ்ச்சி நிரல் செயற்படுத்தப்படவும், முழுமையான ஜனநாயகத்தின் அடிப்படை அம்சங்கள் இடம்பெறவும் வழிவகுக்காது. போரால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் சிறிசேன அதிக சிரத்தை எடுத்துள்ளமையை ஐ.நா மனித உரிமைகள் சபையிடம் உறுதிப்படுத்துவதற்கான கால அவகாசத்தைக் கொண்டுள்ளார்.
ஆகவே சிறிலங்காவின் அதிபரான சிறிசேன இவ்வாறானதொரு திசையில் பயணிப்பதற்கு உண்மையில் விரும்பினால், இவர் விரைவாக சில நகர்வுகளை முன்னெடுக்க முடியும்.
சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கில் நிலவும் இராணுவமயமாக்கலானது உண்மையில் மிகவும் பிரச்சினைக்குரிய ஒன்று என்பதை சிறிசேன முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். இவரது ஆட்சிக்காலத்தின் முதல் பகுதியில் இராணுவ மயமாக்கல் கணிசமான அளவில் குறைக்கப்படும் என சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.
சிறிலங்காவின் அமைதித் தீர்வானது இறுதியானதும் இதயசுத்தியுடன் கூடிய ஒன்றும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சிறந்ததொரு வழிமுறையாக முழுமையான நிலையான மாற்று நீதித் திட்ட அமுலாக்கம் மட்டுமே தீர்வாக அமையும் என்பதை சிறிசேன முழு நாட்டிற்கு விளங்கப்படுத்த வேண்டும்.
மனித உரிமைகள் பேரவையால் அண்மையில் சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிசேன முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இறுதியாக, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருமளவான தமிழ் அரசியற் கைதிகளை சிறிசேன உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கெட்டவாய்ப்பாக, இவை எதுவும் சிறிலங்காவில் இடம்பெறுவதற்கான எவ்வித சமிக்கைகளும் இதுவரையில் தென்படவில்லை.