சிறிலங்கா அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிறிலங்காவின் முப்படைகளும் இணைக்கப்பட்டுள்ளமை, சிறிலங்கா இன்னமும் இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் நேற்றுமுன்தினம் 10 மாவட்டங்களில், மூன்று நாள் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தை ஆரம்பித்தது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா உள்ளிட்ட 10 மாவட்டங்களில், இந்தச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் சுகாதாரத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் இந்த செயற்திட்டத்துக்கு, பிரதேச செயலகங்கள், காவல்துறை மற்றும் முப்படைகளின் உதவிகளும் பெறப்பட்டுள்ளன.
புத்தளத்தில் காவல்துறையுடன் இணைந்து சோதனையில் ஈடுபடும் சிறிலங்கா கடற்படை
இதற்கமைய, இந்த மாவட்டங்களில், பொதுச்சுகாதார அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், காவல்துறையினருடன், முப்படையினரும், வீடுவீடாகச் சென்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், காவல்துறையினர், மற்றும் சகாதார அதிகாரிகளுடன் சிறிலங்கா இராணுவத்தினரும் வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு தொடர்பான சோதனைகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு வீடு வீடாகச் செல்லும் குழுக்களில் சிறிலங்கா இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரே செல்வதாகவும், அவர்கள், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்களை திரட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவில் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட வேண்டிய டெங்கு ஒழிப்பு பணியில் சிறிலங்கா படையினரை உள்ளடக்கப்பட்டதன் நோக்கம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரும், மட்டக்களப்பில் சிறிலங்கா விமானப்படையினரும், புத்தளத்தில் சிறிலங்கா கடற்படையினரும், இத்தகைய சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் குறிப்பாக வடக்கில் சிவில் நிர்வாகப் பணிகளில் இருந்து இராணுவம் முற்றாக விலக்கப்பட வேண்டும் என்றும், இராணுவ மயநீக்கம் இடம்பெற வேண்டும் என்றும் அனைத்துலக சமூகத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், டெங்கு ஒழிப்பு என்ற பெயரில், சிறிலங்கா படையினரை தலையீடு செய்ய சிறிலங்கா அரசாங்கம் இடமளித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.