போர்க்காலச் சூழல் இருந்தபோது இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு உலர்உணவு நிவாரணம் வழங்கப்பட்டது.
இத்தகைய நிவாரணங்களால் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் சீவியத்தை போக்காட்டக் கூடியதாக இருந்தது.
ஆனால் யுத்தம் முடிவதற்கு முன்னதாகவே இந்த உலர் உணவு நிவாரணங்கள் நிறுத்தப்பட்டன. சமுர்த் திக் கொடுப்பனவைக் காட்டி உலர் உணவு நிவாரணக் கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டனவாயினும் சமுர்த்திக் கொடுப்பனவு சீவியத்துக்குப் போதுமானதாக இல்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் சொத்திழந்து, சொந்த மண்ணிழந்து, மனையிழந்து வாழுகின்ற குடும்பங்களின் நாளாந்த சீவியம் என்பது மிகவும் கஷ்டமானதாகவுள்ளது.
அதிலும் குறிப்பாக வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த இறுதி யுத்தத்தின் போது உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பங்கள் நாளாந்த சீவனோபாயத்துக்காகப் பெரும் இடர்களைச் சந்தித்துள்ளன.
வீட்டிற்கு உழைத்துத் தரக் கூடிய குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்களின் நாளாந்த சீவியம் என்பது எவ்வாறு அமையும் என்பதை மனச்சாட்சி உள்ள எவராவது ஒரு கணம் சிந்தித்தால்,
இத்தகைய குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற உண்மையை புரிந்து கொள்ள முடியும்.
எனினும் இதுபற்றி எவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை. இதுபற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய அரசியல்வாதிகள் அது பற்றி எந்தக் கவலையும் இல்லாதவர்களாக உள்ளனர்.
சரி, அரசியல்வாதிகள்தான் அப்படி என்றால், அரச அதிகாரிகளாவது மக்களின் கஷ்ட நிலைகளை அறிக்கைப்படுத்தி,
நாளாந்த சீவியத்துக்காக அல்லல்படும் குடும்பங் களின் விபரத்துடன் இவர்களுக்கு உடனடியாக நிவாரணங்கள் வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கைவிட வேண்டும். அல்லது சர்வதேச தொண்டு நிறுவனங்களிடமாவது இக்கோரிக்கையை விட வேண்டும். நமக்கு ஏன் தேவையற்ற வேலை என்று நினைத்தால் வறுமையால் எங்கள் மக்கள் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
காணாமல்போனவர்களைத் தேடி அழுகண்ணீருடன் அலைகின்ற குடும்பங்களின் சீவியம் எப்படி இருக்கிறது என்று எவரும் நினைக்கவில்லை. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து இருக்கலாம் என்று கூறுகின்ற இந்த நாட்டின் பிரதமர், காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் பண உதவி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஒரு வார்த்தை கூறியிருப்பாராயின் அதுவே நல்லாட்சியின் அழகாக இருந்திருக்கும். எனினும் அது பற்றி எதுவும் அவர் கூறவில்லை.
எது எப்படியாயினும் போரினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கு சமுர்த்திக் கொடுப்பனவு என்பதற்கு மேலதிகமாக உலர் உணவு நிவாரணமோ அல்லது மாதாந்த பண உதவியோ வழங்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு தமிழ்அரசியல் தலைமை, அரசிடமோ அல்லது வெளிநாடுகளிடமோ அல்லது வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களிடமோ உதவி கோர வேண்டும். இதைச் செய்யத் தவறுகின்ற ஒவ்வொரு கணமும் எங்கள் மக்கள், வறுமையால்-பஞ்சத்தால் - பட்டினியால் வாடுகின்ற பரிதாபம் ஏற்படும் என்பதுடன் இத்தகைய மோசமான நிலைமை விரும்பத்தகாத சம்பவங்களையும் ஏற்படுத்தி விடும் என்பதும் சர்வ நிச்சயம்.


