ஐ.நா ஆணையாளரின் யாழ் விஜயத்தை குழப்பும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைனின் யாழ்ப்பாண விஜயத்தை குழப்பும் நடவடிக்கையில் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபட்டிருந்ததாக, வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் ச.சஜீபன் குற்றஞ்சாட்டியுள்ளார். நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐ.நா ஆணையாளர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்திருந்தார். முதலில் ஐ.நா ஆணையாளர் கோணப்புலம் அகதிமுகாமிற்கே செல்வதாக ஏற்பாடாகியிருந்த நிலையில், பின்னர் அங்குள்ளவர்களை சபாபாதிப்பிள்ளை முகாமுக்கு வருமாறு அழைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். மேலும், சபாபதிபிள்ளை முகாமில் மக்கள் கூடியிருந்த வேளை, இரண்டு புலனாய்வாளர்கள் உள்நுழைந்து அங்கு இடம்பெறும் விடயங்களை உற்று நோக்கியதோடு, கதைக்கும் விடயங்களை ஒட்டுக்கேட்டு வந்ததாகவும் சஜீபன் குறிப்பிட்டார். மக்களின் பிரச்சினைகளை கேட்டறிய ஒரு உயரதிகாரி வருகைதரும் வேளையில் இவ்வாறு புலனாய்வாளர்களை நடமாட விடுவது நல்லாட்சி அரசாங்கத்திலும் நீடிக்கும் நிலையில், ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதையே எடுத்துரைப்பதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் ச.சஜீபன் மேலும் தெரிவித்தார்.
Add Comments