தென்மராட்சி பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதில் இணைத்தலைவர்களாகக் கலந்துகொள்ள பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முதலமைச்சர், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வேறு அமர்வொன்றைக் காரணங்காட்டி முதலமைச்சர் பங்குபற்றியிராத நிலையில் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனோ நேரமின்மையைக் காரணங்காட்டி தனது பிரதிநிதியாக தனது கட்சி ஆதரவாளரான சர்வா என்றழைக்கப்படும் சர்வானந்தன் பங்கெடுப்பாரென தெரிவித்துள்ளார்.
அதனால் சீற்றமடைந்த சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூட்டத்தில் பங்கெடுக்க மறுத்திருந்ததுடன் மாவை சேனாதிராசாவுக்கும் நிலமையை விளக்கியதையடுத்து அவரும் கூட்டத்தை தவிர்த்துக்கொண்டார்.
இதனால் தென்மராட்சி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் திகதி தீர்மானமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டங்களிற்கு வருகை தந்தவர்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியிருந்தனர்.
கடந்த மாகாணசபை தேர்தலின் போது பரஸ்பரம் சர்வா அணியும் அங்கயன் அணியும் துப்பாக்கி சமரில் அரசியல் காழ்ப்புணர்வின் அடிப்படையில் மோதியிருந்தனர்.
தென்மராட்சியில் தொடர்ந்தும் மக்களது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் சர்;வா சட்டவிரோத மணல் அகழ்வு குற்றச்சாட்டுக்களினை எதிர்கொண்டிருப்பவரென்பதுடன் பாதுகாப்பு தரப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது.


