தேச விரோத சக்திகள்

தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதன் மூலம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக் கொள்வதற்கென சமீப தினங்களாக சில துரும்புகளை எதிரணியினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவத்தை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கண்டனம் செய்யாததன் மூலம் மஹிந்த ராஜபக்ச எம்.பி தலைமையிலான எதிரணியினர் தங்களது நிலைப்பாடு எத்தகையது என்பதை சிங்கள மக்களுக்கு வெளிக்காட்டிக் கொண்டுள்ளனர்.
இன்றைய ஆட்சியில் பௌத்த மதத்துக்கு எதிராக நிந்தனை இடம்பெறுவதாக மஹிந்த அணியைச் சேர்ந்த சிலர் பிரசாரம் செய்ததன் மூலம் ஞானசார தேரர் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் பெற அவர்கள் முற்பட்டமை தெளிவாகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் பௌத்த மதவாதத்தைத் தூண்டுவதன் மூலம் அரசியல் நலன் பெறுவதே அவர்களது உபாயம் என்பதில் ஐயமில்லை.
ஞானசார தேரர் சம்பவத்தின் தொடர்ச்சியாக யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையானது ராஜபக்ச முகாமைப் பொறுத்த வரை வாய்ப்பானதொரு விடயமாகும்.
யோஷித ராஜபக்சவுக்கு எதிராக பாரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணையில் ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் ராஜபக்ச தரப்பினரின் கண்டனப் பிரசாரங்கள் வேறொரு திசையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் புதல்வரை வெறுமனே அரசியல் பழிவாங்கல் நோக்கத்துக்காக சிறையில் அடைத்துள்ளதாகவே அவர்கள் சிங்கள மக்களுக்குக் கூறுகின்றனர்.
யோஷித ராஜபக்ச கைதான விவகாரத்தை தங்களது அரசியல் ஆதாயத்துக்கு வாய்ப்பாகப் பயன்படுத்தவே அவர்கள் முற்படுகிறார்கள் என்பதைத் தவிர வேறு எதைத்தான் இவ்விடயத்தில் கூற முடியும்?
ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஓரிரு தினங்களிலேயே யோஷித ராஜபக்சவும் கைதாகியிருப்பதனால் மஹிந்தவும் அவரது சகாக்களும் தங்களது அரசியலுக்கு வாய்ப்பானதொரு சூழலை நன்றாகவே பெற்றுக் கொண்டுள்ளனரென இவ்விடயத்தில் கூறுவதே மிகவும் பொருத்தமானதாகும்.
ஞானசார தேரர், யோஷித ராஜபக்ச ஆகியோர் கைதான சம்பவங்களின் தொடர்ச்சியாக நாம் நோக்க வேண்டியது தேசிய கீதம் சம்பந்தப்பட்ட விவகாரமாகும்.
சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு ஓரிரு வாரங்கள் இருக்கையிலேயே தேசிய கீத விவகாரம் நாட்டில் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.
தேசியகீத சர்ச்சையை உருவாக்கியவர்கள் ராஜபக்ச தரப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் அவர்களது பின்புலத்தில் இயங்குகின்ற மதவாதக் கும்பல்களும்தான் என்பதில் சந்தேகம் கிடையாது.
தேசிய கீதத்தைத் தமிழில் இசைப்பதானது ஒரு தேசியக் குற்றத்துக்கு ஒப்பான செயலென சிங்கள மக்கள் மத்தியில் அவர்கள் உருவகப்படுத்தியுள்ளனர்.
தமிழினத்துக்கு இந்நாடு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டதாக சிறிதேனும் கூச்சமின்றி அவர்கள் கூறுகின்றனர்.
மஹிந்த அணியில் உள்ள புத்திஜீவிகளென முன்னொரு வேளையில் கருதப்பட்ட அரசியல் வாதிகளும் கூட இன்று இவ்வாறான கருத்தை வெளிப்படையாகக் கூறுவது உண்மையிலேயே திகைப்பு அளிக்கிறது.
தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ராஜபக்ச தரப்பின் முக்கியஸ்தர்களில் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அவரும் பல்கலைக்கழகப் படியேறி வந்த ஒரு சட்டத்தரணியாவார்.
கல்வியறிவு பெருகப்பெருக உள்ளத்தின் அழுக்குகள் அகலுமென சான்றோர் கூறி வைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் இவ்வாறான ‘பிரகிருதிகள்’ விடயத்தில் கல்வியைக் குறை கூறுவதா அன்றி இவர்களையே குறை கூறுவதா என்பது புரியாமலிருக்கிறது.
தேசிய கீதம் சம்பந்தப்பட்ட விடயத்தில் எமது சட்டத்திலுள்ள ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளதென்பது தெரியவில்லை.
ஆனால் இனங்களுக்கிடையில் வேற்றுமையை வளர்க்கும் விடயத்தில் இச்சக்திகள் நீதித்துறையையும் பயன்படுத்த நினைப்பதுதான் வேதனை தருகிறது.
தமிழில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக உருவாக்கி விடப்பட்டுள்ள சர்ச்சையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் வகிபாகம் எத்தகையதென்பது இன்னுமே வெளிப்படையாகத் தெரியவில்லை.
அவர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த வேளையில் யாழ்ப்பாணத்துக்கும், கிழக்குக்கும் விஜயம் செய்த போதிலெல்லாம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன ஐக்கியம் பற்றியே அதிகம் வலியுறுத்தியவர்.
இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரே இனத்தவர் என்றும், ஒரே தாய் பிள்ளைகள் என்றும், இன பேதங்கள் நாட்டில் இல்லையென்றும் அவர் தமிழில் அடிக்கடி கூறியவர்.
நாட்டை நேசிக்கின்ற மக்கள் கூட்டமும், நாட்டை வெறுக்கின்ற மக்கள் கூட்டமுமாக இரு வேறு இனங்கள் மட்டுமே இலங்கையில் உள்ளதாக மஹிந்த அன்று கூறியிருந்தார்.
மஹிந்தவின் கூற்றை அடிப்படையாக வைத்து இன்று பார்க்கின்ற போது நாட்டை நேசிக்கின்ற சிறுபான்மை மக்களான தமிழர், முஸ்லிம்கள் தங்களது தாய்மொழியில் தேசிய கீதத்தைப் பாட முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.
தேசிய கீதத்தைத் தமிழில் பாட மறுப்பவர்கள் மஹிந்த அணியைச் சேர்ந்தோரேயாவர்.
அன்றைய வேளையில் மஹிந்த கூறிய கூற்று இதய சுத்தம் நிறைந்ததாக இருப்பின் இன்றைய தருணத்தில் அவர் தேசிய கீத விவகாரத்தில் கூறப் போவது என்ன?
இந்த நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தமது தாய்மொழியில் தேசியகீதம் இசைக்க உரிமையுண்டு என அவர் கூறப் போகின்றாரா?
இல்லையேல் தமிழில் தேசிய கீதம் இசைக்க எவருக்கும் உரிமையில்லை எனக் கூறப் போகின்றாரா?
இவ்விடயத்தில் அவர் மௌனம் காப்பாராயின் சந்தர்ப்பவாத அரசியல் என்பதைத் தவிர வேறு எதைத்தான் இதற்காகக் கூறுவது?
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila