தடம் மாறும் கூட்டமைப்பும் உதாசீனப்படுத்தப்படும் உணர்வுகளும்!
கொழும்பில் இடம்பெற்ற 68ஆவது சுதந்திர தின விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பெருமையுடன் கலந்துகொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அங்கு தமிழில் தேசிய கீதம் பாடியமை ஒரு முன்னேற்றகரமான விடயம் எனப் பாராட்டியுள்ளார். அங்கு தலைமையுரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை இல்லாமற் செய்த படையினரைப் பாராட்டியதுடன், இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே ஐ.நாவின் பரிந்துரைகளுக்கு அமைவான போர்க்குற்ற விசாரணைகளை நடாத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் தலைவர் போரில் உயிரிழந்த, பங்குகொண்ட படையினரைக் கௌரவிப்பதை எவரும் தவறு எனக்கொள்ள முடியாது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையில் தமிழ் மக்கள் நடாத்திய புனிதமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக அவர் சித்தரித்துள்ளார். அப்படி அது பயங்கரவாதமென்றால் தமிழ் மக்கள் அர்ப்பணிப்புடன் நடாத்திய இந்தப் போராட்டம் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமல்ல என்று அர்த்தம். எமது போராட்டம் தேசிய இன விடுதலைப் போராட்டம் அல்லவென்றால் இப்போராட்டத்தை நடாத்திய நாம் ஒரு தேசிய இனம் அல்ல என்று அர்த்தம். நாம் ஒரு தேசிய இனம் அல்ல என்றால் எமக்கென ஒரு மொழி எமக்கென ஒரு பொதுப் பொருளாதாரம் எமக்கென ஒரு தொன்மைவாய்ந்த கலாச்சாரம், எமக்கென நிலத் தொடர்பு கொண்ட பாரம்பரிய வாழிடம் என்பவற்றுக்கு உரித்துடையவர்கள் அல்ல என்று அர்த்தம்.
சுதந்திர தின விழாவில் இக் கூற்றை ஜனாதிபதி பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். இப்படி அவர் கூறுவார் என்பது தெரிந்திருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். அதற்குத் தலையாட்டியது மட்டுமன்றி தமிழில் தேசிய கீதம் பாடியமையையும் பாராட்டியுள்ளார்.
1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த காலம் தொட்டு தமிழ் மக்கள் சுதந்திர தின விழாக்களை பகிஷ்கரித்து வந்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்கள் பின்பற்றி வந்த மரபைப் புறந்தள்ளி 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்குகொண்டு தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைகளுக்குள் நல்லிணக்கத்தை தேடினர்.
இப்போது அதே பாணியில் தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வாடும் நிலையிலும் காணாமற்போனோரின் உறவினர்கள் கண்ணீர்விடும் நிலையிலும் போரில் இடம்பெயர்ந்தோர் இன்னும் தமது சொந்தக் காணிகளில் குடியேற்றப்படாத நிலையிலும் சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டு சம்பந்தர் தனது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளை விட, முகம் கொடுக்கும் அவலங்களையும் துயரங்களையும் விடவும், ஆட்சியாளரைத் திருப்திப்படுத்துவதிலேயே அக்கறை காட்டியுள்ளார். தமிழ் மக்களின் உணர்வுகள் அவரால் உதாசீனப்படுத்தப்பட்டன.
ஆனால் தமிழ் மக்கள் உறங்கிவிடவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் தாளத்துக்கு அவர்கள் அடங்கிப் போகத் தயாரில்லை. வடக்கு கிழக்கில் சுதந்திர தினம் முற்றாகவே பகிஷ்கரிக்கப்பட்டது. காணாமற்போனோரின் உறவுகள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், இடம்பெயர்ந்த மக்கள், சிவில் அமைப்புக்கள் எனப் பல்வேறு தரப்பினர் நியாயங்களைக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். பொங்கியெழுந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மக்களின் உணர்வுகளைக் காலில் போட்டு மிதித்ததால், அவை பிரித்துக்கொண்டு மேலெழுந்துள்ளன.
எனினும் சம்பந்தன் மக்களின் உணர்வெழுச்சிகள் தொடர்பாக வழமைபோல் மௌனம் காப்பார். ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினால் “ அது அவர்களின் ஜனநாயக உரிமை. அதில் தவறில்லை. அதை விட அது பற்றிப் பேச ஒன்றுமில்லை” எனக் கூறி விடயத்தை முடித்து விடுவார்.
ஆனால் மக்கள் அதை ஏற்று அமைதியாகிவிட முடியாது. ஏனெனில் துன்ப துயரங்களை அனுபவிப்பவர்கள் அவர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் வெற்றிபெற்ற வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவைக்கு தலைமை தாங்கக்கூடாது என சி.வி.கே சிவஞானம் – குருகுலராஜா தலைமையில் கூடி தீர்மானம் எடுத்த வடமாகாண சபை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் அனுமதியின்றி சுதந்திர தின விழாவில் பங்குகொண்ட தலைமை உறுப்பினர்களை என்ன செய்யப் போகிறார்கள்?. நடவடிக்கை எடுப்பார்களா அல்லது அது அவர்களின் ஜனநாயக உரிமை எனக்கூறி விடயத்தை முடித்துவிடுவார்களா?
தமிழித் தேசியக் கூட்டமைப்பின் தலைமை சக்திகளாகத் தம்மைக் காட்டிக்கொண்டு தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் இரா.சம்பந்தன் அவர்களும், எம்.ஏ சுமந்திரன் அவர்களும் சுதந்திர தின விழாவில் பங்குகொண்டிருந்த வேளையில், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என வடகிழக்கின் சகல மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் கறுப்புக்கொடி ஏற்றியும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியும், ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்ந்தும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளின் பின்னால் இழுபடத் தயாரில்லை என்பதைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. இழப்புகளுக்குமேல் இழப்புக்களை அனுபவித்தும் உரிமைகளைப் பெறும் உணர்வு தளராத எமது மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரணடைவு அரசியலை சகித்துக்கொள்ளப் போவதில்லை என்பது அசைக்க முடியாத உண்மையாகும்
எனவே தடம் மாறிச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே சின்னாபின்னப்படுத்தும் சதியில் இறங்கியுள்ள சம்பந்தன், சுமந்திரன் தொடர்பாகத் தமிழ் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இதுவாகும்.