முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இத்தகைய கருத்து முன்னரும் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இக்கூற்றுத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த விதமான கருத்துரைப்பும் செய்யாமல் மெளனமாக இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினேன் என்பதற்குள்,
மகிந்த ராஜபக்ச ஒரு பெரும் குற்றவாளி என்றும் அவர் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட்டிருக்குமாக இருந்தால், நிச்சயம் அவருக்கு மின்சாரக் கதிரையில் வைத்து தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்பதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றியுள்ளோம் என்பதை இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்கெனவே கூறியுள்ளார்.
ஜெனிவாவில் நடந்த மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்தொடரில் இலங்கையில் நடந்த போர்க் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவை என்ற வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும் அமெரிக் காவும் இலங்கை அரசும் தமக்குள் பேசிக் கொண்டு சர்வதேச விசாரணை என்பதை மழுங்கடித்து,
வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை என்றவாறான ஒரு புதிய தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்போதெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதுவும் பேசாமல் மெளனம் காத்தது.
ஏற்கெனவே இலங்கை அரசும் கூட்டமைப்பும் உடன்பட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே கூட்டமைப்பின் மெளனம் அமைந்திருந்தது என்பதும் தெரிந்ததே.
சர்வதேச விசாரணை நடந்திருக்குமாக இருந்தால் இலங்கையில் நடந்தது தமிழின அழிப்பு என்பது உறுதியாக்கப்பட்டு இருப்பதுடன் அதனைச் செய்தவர்களுக்கு மின்சார நாற்காலியில் வைத்து தண் டனையும் வழங்கப்பட்டிருக்கும்.
இருந்தும் அவை எதுவும் நடக்காமல் இருப்பதற்கு தமிழ் அரசியல் தலைமையும் தேவையான உதவியைப் புரிந்தது.
அவ்வாறு உதவி புரியவில்லை என்றால் மின்சார நாற்காலியில்இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியபோது,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தோ! நல்லாட்சியிலும் தமிழர்களுக்கு அநியாயம் நடந்து விட்டது. தமிழ் இனத்தை அழித்தவரை மைத்திரியின் அரசு காப்பாற்றியுள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதித் தேர்தலில் வென்றவர் இங்ஙனம் செய்தது நீதியோ! என்று உரக்கக் கத்தியிருக்க வேண்டும். இருந்தும் கூட்டமைப்பு எதுவும் பேசவில்லை.
இப்போதும் ஜனாதிபதி மைத்திரி சொல்கிறார், மின்சாரக் கதிரையில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றினேன் என்று.
இனியாவது, எங்கள் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரியை பார்த்து, ஐயா! மகிந்த ராஜபக்சவை காப்பாற்றிய நீங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதைத் தரவும் பின்னடிக்கிறீர்கள். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மறுதலிக்கிறீர்கள். ஒரு போர்க்குற்றவாளியைக் காப்பாற்றிய நீங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்க மறுப்பது ஏன்?
ஓ! அவர் சிங்களவர், நாங்கள் தமிழர், அதனால் அவரைக் காப்பாற்றினீர்கள் எங்களைக் காப்பாற்ற மறுக்கிறீர்கள். இப்படிக் கூறுவதற்கு எங்களால் ஏன் முடியவில்லை? அட! இப்படிச் சொன்னால் அவர்க ளும் பதிலுக்கு சொல்லுவார்கள்.
அவர்கள் சொல்வது தமிழ் அரசியல் தலைமை யையும் தமிழ் மக்களையும் வலுவாக அந்நியப்படுத்தி விடும். அதனால்தான் ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக் குறித்து எங்கள் மெளனம் தொடர்கிறது. அவ் வளவுதான்.


