தமிழ் இனத்தின் விடிவிற்காக போராடி இன்னுயிர் நீத்த மாவீரர்களை அங்கீகரித்து மாவீரர்களின் நினைவிடங்களை புனித பூமியாக்கி அதில் அவர்களை நினைவுகூறுதல் மற்றும் வணங்குதல் தொடர்பில் அரசியல் அமைபபில் உள்ளடக்கப்பட வேண்டும் என சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அரசியலமைப்பு முன்யோசனைகளைப் பெறும் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அரசியலமைப்பு முன்யோசனை பெறும் குழுவின் கருத்தறியும் செயலமர்வு இன்று(திங்கட்கிழமை) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் குறித்த செயலமர்வில் கலந்து கொண்டு தனது கருத்துக்களை பதிவு செய்யும் போதே, குறித்த இளைஞர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
எமது தாயகம், தேசிய சுயநிர்ணயம், வடகிழக்கு இணைந்த ஒரே தேசம், தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய பூர்வீக இனம், எமது தீர்மானங்கள், அதிகாரங்கள் அனைத்தினையும், காணி, பொலிஸ் அதிகாரகளை நாமே தெரிவுசெய்து நெறிப்படுத்த வேண்டும். பெண்களை கற்பழித்தல்கள் மற்றும் கொலைகளைச் செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டணைகளை பாரபட்சமின்றி 12 நாட்களுக்குள் உடனடியாக வழங்கும் சட்டம் உருவாக்க வேண்டும். கல்வி மருத்துவ வசதிகைள முழுமையாக அரச உடமையாக்கி நவீன மயப்படுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் தனியார் துறையிடம் செல்லாது. முழுமையாக அரச நெறிப்படுத்தலில் நவீன மயப்படுத்தி விண்வெளி தொடர்பான ஆய்வு மையங்களை உருவாக்குதல் தொடர்பான அரசியலமைப்பு ஒன்று தற்போது அவசியமாகியுள்ளது. எமது கலாசாரம் மற்றும் பண்பாடுகளை முழுமையாக பேணும் சட்ட அங்கீகாரத்துடன் கலைஞர்களை ஊக்கப்படுத்துதல், பாதுகாத்தல் வேண்டும். ஆபாசப்படங்கள், காமக்கதைகளை பரப்பும் இணையத்தளங்களை முழுமையாகத் தடை செய்வதுடன், புகைத்தல் பொருட்கள், உயர்தர மதுபானங்கள் போதைப்பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
அந்த பொருட்களை விற்பனை செய்பவர்கள் கைதுசெய்யப்பட்டு உடனடியாக கடல் அரிப்பை தடைசெய்யும், சுத்தப்படுத்தும் மற்றும் அழகுபடுத்தும் வேலைத்திட்டங்களை செய்வதற்கு பணிக்க வேண்டும்.
இன, மத வேறுபாடுகளின்றி நாட்டினுள்ள அனைவருக்கும் சட்டம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளிலும், உறுதித்தன்மை, நவீனத்துவம், பாதுகாப்புக்களை அபிவிருத்தி செய்வதுடன், பின்தங்கிய கிராமங்களில் அபிவிருத்திகளை முன்னுரிமைப்படுத்தி லஞ்ச ஊழல்களை அகற்றி வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் பங்களிப்புக்களை உள்வாங்கி அபிவிருத்தி செய்யும் அரசியலமைப்பு முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.