மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
www.scrm.gov.lk எனும் முகவரியைக் கொண்ட குறித்த இந்த இணையத்தளத்தினை ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் மற்றும் சமாதான செயல்முறை இணைய செயலகத்தின் சிவில் சமூகத்திற்கான குழுவின் இணைத்தலைவர் திருமதி முத்தட்டு பேகம் ஆகியோர் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், வலி.வடக்கு மீள்குடியேற்றம், காணாமல் போனோர்களின் விபரங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் விபரங்களை வெளியிட்டு, காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை உறவினர்கள் அறிந்துகொள்வதற்கு வழியேற்படுத்துமாறு வலியுறுத்தினார்கள்.
இந்த நிகழ்வில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மாற்றுக்கொள்கைகள் அமைப்பின் தலைவர் பாக்கியஜோதி சரவணமுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் மற்றும் அரச அதிகாரிகள், பொது மக்கள், மகளீர் அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
குறித்த இணையத்தளத்தில், நல்லிணக்கம் மற்றும் அரசியல் சீர்திருத்தம் குறித்த தமது கருத்துக்களை பொது மக்கள் பதிவு செய்துகொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.