விக்னேஸ்வரன் அரசியலில் இறங்கிய போது தயான் ஜெயதிலக அவரை மென்சக்தி என்று அழைத்திருந்தார். அவர் ஏன் அப்படி அழைத்தார்? இலங்கைத்தீன் நீதிபரிபாலன கட்டமைப்புக்குள் நீண்ட காலமாக உயர் பொறுப்புக்களை வகித்த ஒருவர் அந்த நீதிபரிபாலனக் கட்டமைப்பினால் பாதுகாக்கப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்திற்கு விசுவாசமாகவே இருப்பார் என்ற ஓர் எதிர்பார்ப்பில் தான். விக்னேஸ்வரனும் ராஜபக்~வின் ஆட்சிக்காலத்தில் ஒப்பீட்டளவில் தீவிரத்தன்மை குறைந்தவராகவே காணப்பட்டார். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் அவர் தயான் ஜெயதிலக போன்றவர்கள் எதிர்பார்த்திராத ஒரு வளர்ச்சிக்குப் போhய்விட்டார். தயான் ஜெயதிலக இப்பொழுதும் அவரை ஒரு மென்சக்தி என்று அழைப்பாரோ தெரியாது.
விக்னேஸ்வரனின் விடயத்தில் மட்டுமல்ல ராஜபக்~ சகோதரர்களின் ஆட்சி குறித்தும் தயான் ஜெயதிலக போன்றவர்கள் எதிர்பார்த்திராத திருப்பங்கள் கடந்த ஓர் ஆண்டுக்குள் நடந்து முடிந்துவிட்டன.
மைத்திரி-ரணில் அரசாங்கமானது கடந்த சில தசாப்தங்களில் இலங்கைத்தீவை ஆட்சி செய்த எல்லா அரசாங்கங்களையும் விட அனைத்துலக கவர்ச்சிமிக்கதாக தோற்றம் பெற்று வருகிறது.
அண்மைத்தசாப்தங்களில் இச் சிறிய தீவை ஆண்ட அரசாங்கங்களுக்குள் சந்திரிக்காவின் அரசாங்கமும், குறுகிய காலம் ஆட்சி செய்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அனைத்துலக அளவில் கவனிப்பைப் பெற்றன. இப்பொழுது ரணிலும் சந்திரிக்காவும் ஓர் அணியில் நிற்கிறார்கள். இவர்களைத்தவிர வெளியுலகத்தால் ஆசைகள் குறைந்த எளிமையான ஒரு தலைவராகப் பார்க்கப்படும் மைத்திரியும் இந்த அணிக்குள் காணப்படுகிறார். இப்படிப் பார்த்தால் அண்மைத் தசாப்தங்களில் இலங்கைத்தீவில் தோன்றிய எல்லா அரசாங்கங்களை விடவும் அதிகளவில் உலக சமூகத்தால் எதிர்பார்ப்போடு பார்க்கப்படும் ஓர் அரசாங்கமாக இந்த அரசாங்கம் காணப்படுகிறது.
புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாக இருந்தால் இலங்கைத்தீவின் நிறைவேற்று அதிகாரமுடைய கடைசி ஜனாதிபதியாக மைத்திரியே இருப்பார். நிறைவேற்று அதிகாரங்களை இழக்கத் தயாராக இருந்த ஒரே ஜனாதிபதியாக அவர் நினைவுகூரப்படுவார். ஆட்சி மாற்றம் ஒன்றின் கருவியே தான் என்பதை அவர் நன்கு விளங்கி வைத்திருக்கிறார். அதனால் அவர் இப்பொழுது அமர்ந்திருக்கும் சிம்மாசனம் நிரந்தரமானதல்ல என்பதும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இது காரணமாக தனக்கு முன்பிருந்த எல்லா ஜனாதிபதிகளிடமிருந்தும் அவர் சில விடயப்பரப்புக்களில் துலக்கமான விதங்களில் வேறுபட்டு நிற்கிறார்.
இதுவரையிலும் இருந்த எல்லா ஜனாதிபதிகளுமே தங்களது நிறைவேற்று அதிகாரங்களை எப்படித் தக்கவைக்கலாம். அல்லது எப்படி அதிகப்படுத்தலாம் என்ற திசையிலேயே சிந்தித்தார்கள். ஆனால் மைத்திரியோ 19 ஆவது திருத்தத்தின் மூலம் தனது அதிகாரங்களில் ஒரு பகுதியை இழக்கத் தயாராக இருந்தார். இதற்கு முன்பிருந்த சில ஜனாதிபதிகள் பதவிக்கு வரும் வரையிலும் ஜனாதிபதி முறைமையை எதிர்த்தார்கள். தாம் பதவிக்கு வந்த பின் அதை நீக்கப்போவதாகவும் நம்பிக்கையூட்டினார்கள். ஆனால் பதவியில் அமர்ந்ததும் அவர்கள் அந்த சிம்மாசனத்தை இழக்கத் தயாராக இருக்கவில்லை. நிறைவேற்று அதிகாரங்களின் ருசி அப்படிப்பட்டது. ஆனால் மைத்திரி ஒரு அரசனைப்போல நடந்துகொள்வதில் ஆர்வமற்றவராகக் காணப்படுகின்றார். அவர் தற்காப்பு உணர்வின்றி மிகவும் எளிமையாக நடந்துகொள்வதை மகிந்தவின் ஆதரவாளர்கள் கேலி செய்கிறார்கள். மகிந்த யுத்தத்தை வெற்றிகொண்டபடியால்தான் மைத்திரி இப்படி சுதந்திரமாகச் செயற்பட முடிகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் வெற்றிவாதத்தின் பின்னரான சுமார் ஆறாண்டு கால ஆட்சியின்போது பெற்ற கசப்பான அனுபவங்களின் விளைவே மைத்திரி எனலாம். அதுவும் அவர் ஓர் அரசனைப் போல நடந்துகொள்ளத் தயாரற்றிருப்பதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தனக்குள்ள நிறைவேற்று அதிகாரங்கள் தற்காலிகமானவை என்ற ஒரு விளக்கத்தின் அடிப்படையில் செயற்படும் ஓர் அரசுத்தலைவராக இருப்பதனால் மைத்திரி எளிமையானவராகவும்;, பேராசை குறைந்தவராகவும், மூர்க்கமிலாதவராகவும் காணப்படுகிறார்.
அவருடைய இந்தத் தோற்றம் இப்போதுள்ள அரசாங்கத்தின் அனைத்துலக கவர்ச்சிசையை அதிகப்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் ரணில்விக்கிரமசிங்கவோ ஒரு கண்டிப்பான நிர்வாகி போல காணப்படுகிறார். முன்னைய தசாப்தங்களில் அவர் ஒரு மென்மையான தலைவராகவே பார்க்கப்பட்டார். ஆனால் அவருடைய கட்சிக்குள்ளேயே அவரைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவும், வயது முதிர்ச்சி காரணமாகவும் அவர் ஓர் இறுக்கமான நிர்வாகியாக உருவாகியிருப்பதாக தென்னிலங்கை அரசாங்க வட்டாரங்களில் கருதப்படுகிறது. தனது அமைச்சர்களோடு கண்டிப்பாக நடந்துகொள்ளும் அவர் அதே அளவு கண்டிப்போடு இனவாத ஊடகங்களையும் அண்மையில் நாடாளுமன்றத்தில் சாடியிருந்தார். அதுமட்டுமல்ல இலங்கைத்தீவின் நீதிபரிபாலன அமைப்பைக் குறித்தும் இறந்தகாலத்தில் இழைக்கப்பட்ட சில தவறுகளைக் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பதை கடந்தவாரம் இலங்கைக்கு வந்துபோன ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஒருபுறம் பேராசைகள் குறைந்த சாதுவான ஒரு ஜனாதிபதி இன்னொருபுறம் கண்டிப்பான ஒரு பிரதமர். இந்த இருவருடையதும் சேர்க்கையானது அனைத்துலக அளவில் அதிகம் எதிர்பார்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கிறது. முதலாவதாக இச் சேர்க்கையானது மேற்குக்கும், இந்தியாவுக்குமான கதவுகளை அகலத் திறந்திருக்கிறது. இரண்டாவதாக கடந்த காலத் தவறுகளுக்குரிய ஏதோ ஒரு பரிகாரத்தைக் கண்டடையப்போவதான ஒரு தோற்றத்தையும் காட்டுகிறது. இதுகாரணமாகவே இலங்கைக்கு வந்துபோகும் மேற்கத்தையத் தூதுவர்கள் சில சமயங்களில் இந்த அரசாங்கத்தின் பிரச்சாரகர்கள் போல மாறிவிடுகிறார்கள். உதாரணமாக அண்மையில் வந்துபோன சமந்தா பவர் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனைச் சந்தித்தார். இதன்போது விக்னேஸ்வரன் நடப்புநிலைகள் தொடர்பாகத் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். ஆனால் சமந்தா பவரோ ஆட்சி மாற்றத்தின் பின் நிகழ்ந்த நல்ல மாற்றங்கள் என்று அவர் கருதுபவற்றை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
இவ்வாறாக மைத்திரி-ரணில் அரசாங்கமானது தனது அனைத்துலக அந்தஸ்தை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டு வருகிறது. இது இப்படியே போனால் ஒரு கட்டத்தில் மேற்குநாடுகள் இந்த அரசாங்கத்தை ஒரு மென்சக்தி அரசாங்கம் என்று வர்ணித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவ்வாறாக இந்த அரசாங்கத்தின் அனைத்துலகக் கவர்ச்சி அதிகரித்து வருவதனால் பேரம்பேசும் சக்தியும் அதிகரித்து வருகிறது. அதனால் தான் தை;திரியும் ரணிலும் கடந்த ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஐ.நாவில் வாக்குறுதி அளித்ததற்கு மாறாக இப்பொழுது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை குறித்துப் பேசி வருகிறார்கள். போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைகளைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டு காலத்திற்குள் படிப்படியாக ஒரு வித தேய்மானத்தைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. நவிப்பிள்ளை அம்மையார் பொறுப்பில் இருந்தபோது பன்னாட்டு விசாரணைக்கான கோரிக்கையே வலுவாகக் காணப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் மேற்குநாடுகள் அந்தக் கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. ஆட்சி மாற்றத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களும் ஒரு வித கலப்புப் பொறிமுறையைத்தான் தெரிவுசெய்தார்கள். ஆனால் தீர்மானம் நிறைவேற்றுப்படும்போது இலங்கை அரசாங்கம் அதற்குள்ளும் திருத்தங்களைக் கொண்டுவந்தது. அனைத்துலக நிபுணர்களை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறைக்குப் பதிலாக பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறை என்று தீர்மானம் மாற்றப்பட்டது. இப்பொழுது சில மாதங்களின் பின் உள்நாட்டுப் பொறிமுறை தான் என்று கூறப்படுகிறது. அதாவது ஆட்சி மாற்றத்தின் கீழான கடந்த ஓராண்டு காலகட்டத்திற்குள் விசாரணைப் பொறிமுறை படிப்படியாகத் தேய்ந்து வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு அவர் விஜயம் செய்தபோது அங்கு வைத்து அல்ஜசீரா செய்தியாளர் மேற்படி கேள்வியை அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்து சுற்றிவளைத்துப் பதில் சொல்லியுள்ளார். அதாவது அதுவிடயத்தில் அவர் அரசாங்கத்திற்கு நோகக்கூடிய விதத்தில் பதில் சொல்ல விரும்பவில்லை. இதுதான் இப்போதுள்ள நிலைமை.
தமிழ்மக்களிடம் இப்பொழுது வன்சக்தி கிடையாது. மென்சக்தியும் முழு வளர்ச்சி பெறவில்லை. இத்தகையதோர் பின்னணியில் போர்க்குற்ற விசாரணைகளில் இறுதியாகக் கிடைக்கப்போகும் நீதியே தமிழ்மக்களின் அடுத்தகட்ட அரசியலுக்கான பாதுகாப்புக் கவசமாகும். அதனால்தான் தமிழ்மக்களில் ஒரு பகுதியினர் தமக்குப் பரிகார நீதியே வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இறுதிக்கட்டப் போரில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள்தான் அவர்களுடைய அடுத்தகட்ட அரசியலுக்கான முதலீடாகக் காணப்பட்டது. இந்த இழப்புக்களுக்கு எதிரான நீதியே இனப்பிரச்சினைக்கான தீர்வுமாகும் என்று தமிழ்மக்களில் ஒரு பகுதியினர் கூறி வருகிறார்கள். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியே இனப்பிரச்சினைக்கான தீர்வுமாகும். இவ்வாறு பரிகாரநீதியைப் பெறுவதாக இருந்தால் அதற்குரிய விசாரணைப்பொறிமுறை ஆகக்கூடிய பட்சம் அனைத்துலகமயப்பட வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு விசாரணைப் பொறிமுறை அனைத்துலக மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழ்மக்களுடைய பேரம்பேசும் சக்தியும் அதிகரிக்கும். ஆனால் கடந்த ஓராண்டு காலமாக அந்த விசாரணைப் பொறிமுறையை அனைத்துலகமயநீக்கம் செய்வதில் மைத்திரி-ரணில் அரசாங்கம் படிப்படியாக வெற்றிபெற்று வருகிறது. அதாவது தொகுத்துக்கூறின் தமிழ்மக்களுடைய பேரம்பேசும் சக்தி குறைந்து வருகிறது.
இவ்வாறு தமிழ்மக்களுடைய பேரம்பேசும் சக்தியை குறைத்துவரும் அரசாங்கத்தின் அனைத்துலகக் கவர்ச்சியோ உயர்ந்துகொண்டே போகிறது. தமிழ் வன்சக்தி அகற்றப்பட்டிருக்கும் ஒரு வெற்றிடத்தில் கடந்த ஆறேமுக்கால் ஆண்டுகாலப் பகுதிக்குள் தமிழ் மென்சக்தியானது அதன் முழுவளர்ச்சியை இதுவரையிலும் பெறவில்லை. இப்போதுள்ள நிலைமைகளின் படி தமிழ் மென்சக்தியானது முதலாவதாக கோட்பாட்டுத் தெளிவுடையதாக கொள்கைப்பிடிப்புள்ளதாக இருக்கவேண்டும். இரண்டாவதாக அந்தக் கொள்கையின் பிரகாரம் அர்ப்பணிப்புக்களைச் செய்வதற்கும், தியாகங்களைச் செய்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். மூன்றாவதாக மைத்திரி-ரணில் அரசாங்கத்தை அதிகம் எதிர்பார்ப்போடு பார்க்கும் ஓர் உலகச்சூழலில் சக்திமிக்க நாடுகளின் நிகழ்ச்சி நிரல்களை சுழித்துக் கொண்டோடத் தெரியவேண்டும்.
ஆனால் இங்கு விபரீதம் என்னவெனில் தன்னை ஒரு மென்சக்தி போல கட்டியெழுப்ப முற்படும் மைத்திரி-ரணில் அரசாங்கமானது போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையைப் படிப்படியாக அனைத்துலக மயநீக்கம் செய்துவரும் ஒரு பின்னணியில் தமிழ்மக்களின் ஆணையைப் பெற்ற மிதவாதிகளோ ஒரு கட்சி ஏகபோகத்தை நோக்கி காய்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். அண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமிழரசுக்கட்சியில் இணைந்திருக்கிறார்.
அதேசமயம், தயான் ஜெயதிலகவால் மென்சக்தி என்று அழைக்கப்பட்ட விக்னேஸ்வரனோ கூட்டமைப்புக்கு எதிராகத் திட்டவட்டமாகத் தலைமை தாங்கத் தயங்குகிறார்.தமிழ் மக்கள் பேரவை எதிர்காலத்தில் ஒரு கட்சியாக மாறப்போவதில்லை என்ற நிபந்தனையோடுதான் அவர் அதில் இணைத்தலைவராக இணைந்திருக்கிறரர்.ஒரு மாற்றுத் தலைமையைக் கட்டியெழுப்ப அவர் இன்றுவரையிலும் தயாரில்லை.
அதாவது தமிழ் மென்சக்தியானது துலக்கமான ஒரு முழு வளர்ச்சியை இனிமேற்றான் பெறவேண்டியிருக்கிறது.அப்படியொரு வளர்ச்சியை அடையத்தவறினால் தமிழ் மக்களின் தலையில் மேலுமொரு தீர்வற்ற தீர்;வு கட்டியடிக்கப்படலாம்.