புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தேவையில்லை! கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன

????????????????????????????????????பிரிக்கமுடியாத தேசம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஒற்றையாட்சி என்ற பதமே புதிய அரசியலமைப்புக்கு அவசியமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கு நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது பிரதிநிதித்துவ அரசாங்கம் தொடர்பான அர்த்தங்கள் இயற்பண்புகள் எனும் தொனிப்பொருளில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதன்மூலமே ஜனநாயக ஆட்சி உறுதிப்படுத்தப்படும். அந்நிலையில் அரசியல் அமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்துவதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. என்னுடைய சில யோசனைகளை முன்வைக்கின்றேன்.
குறிப்பாக ஒற்றையாட்சி என்ற சொற்பிரயோகத்தை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற சர்ச்சைக்குரிய அடையாளங்களை பயன்படுத்த வேண்டிய தேவையில்லை என்றே கருதுகின்றேன். பிரிக்கமுடியாத தேசம் என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதைப் பிரதிபளிக்கும் வகையிலான சொற் பிரயோத்தைப் பயன்படுத்துவது சிறந்தது. ஆகவே அதனால் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்பட போவதில்லை. இது தொடர்பாக பிரிவினை ஏற்படப் போகின்றது எனக் கருதுபவர்கள் குறிப்பாக கடும்போக்கர்களை தவிர்த்து ஏனையவர்களுக்கு அவ்வாறான சந்தேகம் ஏற்படுமாயின் அதனை போக்க வேண்டிய கடமை எமக்குள்ளது. இச் செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.
13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளை எடுத்துக்கொண்டால் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. எனினும் மாகாணங்கள் இணங்குகின்ற போது ஒருமித்து இணங்குவதற்கான ஏற்பாடுகள் உள்ளன. அது வொருபுறமிருக்கையில் மாகாண சபைகளில் பல்கட்சிகளின் பங்கு பற்றல்கள் இருக்கவேண்டும்.இதன்மூலமே நடைமுறை ரீதியாக பிரச்சினைகளை அதிகளவில் தீர்த்துக் கொள்ள முடியும். விசேடமாக மாகாண சபைகளுக்கு காணப்படும் அதிகாரங்களின் பிரகாரம் காணி அதிகாரத்தைப் பிரயோகிப்பது தொடர்பான பிரச்சினை காணப்படுகின்றது. தேசிய காணி ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்குமானால் இந்தப் பிரச்சினை இப்போதே தீர்க்கப்பட்டிருக்கும்.
மாகாண சபைகளின் விருப்பமில்லாது மத்திய அரசினால் தீர்மானங்கள் மேற்கொள்கின்றபோது பிரச்சினைகள் எழுகின்றன. ஆகவே இரண்டாம் தர சபை ஒன்றினை உருவாக்குவது தொடர்பில் நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். குறித்த அவையில் அனைத்து மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்த கூடியவகையில் முதலமைச்சர் உள்ளடங்களாக 45 பிரதிநிதிகள் கொண்ட குழு உருவாக்கப்பட வேண்டும். அதேபோன்று இந்த நாட்டில் பூர்விகம் இல்லாதவர்களுக்கும் இந்திய வம்சாவளியினர், ஆதிவாசிகள் மற்றும் பரங்கியர் போன்ற இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்திய குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும். தேசிய கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது இக்குழுக்களின் யோசனைகள், பரிந்துரைகளை உள்வாங்கி தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன்மூலம் மத்தியரசுடனான பல பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும்.
அடுத்ததாக உள்ளூராட்சி மன்றங்களை கருத்திற் கொள்ளும்போது மத்திய அரசாங்கத்தின் தலையீடுகளின்றி இலகுவாக சட்டங்களை கையாளக்கூடிய வகையிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. கிராமிய மட்டங்களில் சபைகள் உருவாக்கப்படுவதனால் உள்ளூராட்சி மன்றங்கள் மக்களுடன் நெருக்கமாக செயற்படக்கூடிய சூழல் ஏற்படுகின்றது. உதாரணமாக அம்பாறை, பசறைப் போன்ற பகுதிகளிள் ஒரு குழுவினர் செறிந்து வாழும் நிலைமை காணப்படுகின்றது. ஆகவே அவ்வாறான குழுவினரும் பலன்களை பெறுகின்ற வகையில் ஏற்பாடுகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மக்களின் விருப்பமின்றி அரசியலமைப்பொன்றை நிறைவேற்ற முடியாது. அதேநேரம் அதிகாரங்களை பகிர்வதாக கூறி வலது கையினால் வழங்கிவிட்டு தேசிய கொள்கை என்ற பெயரினால் இடது கையினால் பெற்றுக் கொள்ள முடியாது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு சிறந்த அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila