யாழ்ப்பாணம், சாவகச்சேரி, பகுதியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 9 சந்தேக நபர்கள் விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல் அங்கியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரான எட்வர்ட் ஜூலியஸுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்த 8 பேரே மேலதிகமாக இச்சம்பவம் தொடர்பில் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வாரம், வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி, சாவகச்சேரி பிரதேசங்களைச் சேர்ந்த 5 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், மேலதிகமாக மூவர் இந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பிரதான சந்தேக நபருடன் அடிக்கடி தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.