தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ரமேஸ் என அழைக்கப்படும் சந்தேக நபருக்கு அந்த வீட்டினை இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரின் சகோதரரே பெற்றுக்கொடுத்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது தெரியவருவதாவது, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரமேஸ் என அழைக்கப்படும் எட்வேட் ஜூட் இற்கு சிவதர்சன் என்பவர் இந்த வீட்டினை வாடகைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
ரமேஸ் மற்றும் சிவதர்சன் ஆகியோர் ஒரு நிறுவனத்தில் பாரஊர்திகள் சாரதிகளாக இரண்டு ஆண்டுகள் வேலைசெய்தனர்.
சிலகாலத்தின் பின்னர் ரமேஸ் என்பவர் சாரதி வேலையை விட்டுவிட்டு மேசன் வேலை செய்துவந்தார். இந்நிலையிலேயே ஒரு சிறுரக பாரஊர்தியையும், உந்ருளியையும் கொள்வனவு செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்கனவே இவர் மேல் சந்தேகம் உருவாகியுள்ளது.
ரமேஸ் பற்றி மேலும் தெரியவருவதாவது, இவர் 13 வயசில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தார். அதுவரை மன்னார் முருங்கனில் கல்வி கற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு தாயார் தெல்லிப்பளை மருத்துவமனையில் புற்றுநோயால் இறக்கும் வரை இவருக்கும் இவரது குடும்பத்துக்கு எந்தவித தொடர்பும் இருக்கவில்லை. இவர் புதுமாத்தளன் பகுதியில் இறந்திருக்கலாம் என்றே குடும்பத்தினர் இதுவரை நினைத்திருந்தனர்.
முதல் மனைவியை விட்டுப் பிரியும்வரை இவர் சுழிபுரத்தில் இருந்தார். பின்னர் சிவதர்சனின் உதவியுடன் மீசாலைக்கு இடம்பெயர்ந்தார்.
ரமேஸ் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் சிவதர்சன் காணாமல் போய்விட்டார். சிவதர்சனின் சகோதரர் ஒருவர் முன்னைய அரசாங்கத்தால் இராணுவத்தினருக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டபோது இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றார். தற்போது அவருக்கும் இந்தச் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார். இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பிரதான இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றி வருகின்றார் எனவும் அந்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.


