இந்த நாட்டில் எல்லாமே அரசியல்

மூட்டைப்பூச்சியைக் கொல்வதற்கும் துப்பாக்கியைத் தூக்குவது போன்று சிறிய விடயங்களைப் பெரிதுபடுத்தி அதிலும் அரசியல் இலாபம் பெறும் முயற்சிகளில் அண்மைக் காலமாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருவது தமிழ்ப் பேசும் மக்களை மாத்திரமல்ல, பெரும்பான்மை சிங்கள மக்களையே முகம் சுளிக்க வைத்துள்ளதாகப் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
அரசாங்கத்தை ஏதேனும் ஒரு வகையில் விமர்சித்து மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகளை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் ஒரே குறிக்கோளாக இருப்பது புதிய விடயமல்ல.
அந்தவகையில், சாவகச்சேரியில் மீட்கப்பட்டுள்ள தற்கொலை அங்கி விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது.
சாவகச்சேரியில் மீட்கப்பட்டுள்ள குறித்த தற்கொலை அங்கி, ஜனாதிபதிக்கு இலக்கு வைக்கப்பட்டதாகவும் மேலும் இது தேசிய பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் எனவும் பல்வேறு தரப்பினரும் தமக்கேற்றாற் போல கருத்துக்களை கூறி வருவது மாத்திரமன்றி, இனங்களுக்கிடையே ஒருவித முறுகல் நிலையை ஏற்படுத்தவும் முயற்சிப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இந்நிலையில், வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தற்கொலை அங்கிகள் வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்பட இருந்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருந்த கருத்து மேலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகளும் வெடிபொருட்களும் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் துளிர்விட்டுள்ளமையை வெளிப்படுத்திவிட்டது.
முன்னாள் போராளிகளின் விடுதலை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவுள்ளமை மற்றும் பாதுகாப்புப் படைகளின் முகாம்களை அகற்றியமை போன்ற விடயங்களே தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை" என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பகிரங்கமாகத் தெரிவி்த்திருந்தார்.
இவரது கூற்று தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக, முன்னாள் அமைச்சர் பீரிஸுக்கு இத்தகவல்கள் எவ்வாறு முன்கூட்டியே தெரிந்தது என கேள்வியெழுப்பியதுடன், அது குறித்து அவரை விசாரணை செய்ய வேண்டுமெனவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று முன்னாள் அமைச்சர் பீரிஸ் இவ்விடயம் தொடர்பில் அறிந்திருந்தால் ஏன் பொலிஸருக்கு உடன் அறிவிக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பொதுவாகவே வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் ஏதேனும் சிறு சம்பவங்கள் இடம்பெற்றால் அதற்குப் புலி முத்திரை குத்துவதும் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக சித்திரிப்பதும் இந்த நாட்டில் கடும்போக்காளர்களின் செயற்பாடாகவே இருந்து வருகின்றது.
அந்தவகையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நல்லாட்சி அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்ச்சியாக விளையாடுவதாகவும் புலிகள் அமைப்பின் தற்கொலை குண்டுத் தாக்குதல் உட்பட அனைத்துப் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் வழி சமைத்து விட்டதாகவும் அரசாங்கத்தை காரசாரமாகக் கண்டித்துள்ளார்.
இதேவேளை, யுத்தம் முற்றுப் பெற்றதிலிருந்து இன்று வரையில் 25 தடவைகளுக்கும் அதிகமாக யாழ்ப்பாணத்தில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் இந்த தற்கொலை அங்கி மீட்பு விவகாரமும் சர்வசாதாரணமான ஒரு விடயம் என தெரிவித்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சிலர் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குவதாகக் கூறி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். வடபகுதி மக்கள் மிகவும் அப்பாவிகள், நல்லவர்கள். அவர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுவதில்லை.
மிகைப்படுத்தப்பட்ட, திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களே அவர்களின் கருத்துக்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் கருத்துக்கள் மிகவும் யதார்த்தபூர்வமானவையும் சிந்திக்க வேண்டியதுமாகும். பொதுவாகவே இந்த நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவே விரும்புகின்றன.
 எனினும், அரசியல்வாதிகளோ தமது மறைமுகமான நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப இனங்களைப் பிரித்தாள முனைவதுடன் அவர்களுக்கிடையே இனவாதத் தீயை மூட்டி அதில் குளிர்காயவும் எத்தனிக்கின்றனர்.
கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்தம் இடம்பெற்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் போர் எச்சங்கள், ஆயுதங்கள், வெடி மருந்துகள் என்பன முற்று முழுதாக இல்லாது போய்விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
முதலாம், இரண்டாம் உலக மகா யுத்தங்களின் போது கூடப் பயன்படுத்தப்பட்ட யுத்த கருவிகள், குண்டுகள், ஆயுதங்கள் என்பன தற்பொழுதும் மீட்கப்பட்டு காட்சிப் பொருளாக மக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அந்தவகையில், எந்தவொரு நாடும் அதனைப் பெரிதுபடுத்தியதோ அன்றேல், தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என போர்க்கொடி தூக்கியதோ கிடையாது. அதேபோன்றே வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது மீட்கப்படாது மண்ணுள் புதையுண்டுபோன ஆயுதங்கள் பல இருக்கக்கூடும்.
 எனவே, அவற்றைப் பாதுகாப்பாக மீட்டு அதன் உண்மை நிலை குறித்து கண்டறிய வேண்டும். அதனைவிடுத்து வெறுமனே நாட்டுக்கு அச்சுறுத்தல் எனவும் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கி விட்டது எனவும் அர்த்தமற்ற கூற்றுக்களை கூறி மக்களை குழப்பியடிக்கும் நடவடிக்கைளில் எத்தரப்பினரும் ஈடுபடக்கூடாது.
கடந்த சில தசாப்த காலமாக புலிகளின் இருப்பை வைத்தே இந்த நாட்டின் அரசியல் இருப்பு தீர்மானிக்கப்பட்டது.
இன்று புலிகள் அமைப்பு இல்லாத சூழ்நிலையிலும் மீண்டும் புலிகள் தலைதூக்குவதாகக் கூறி அரசியல் நாடகங்களை அரங்கேற்ற முனைவதும் ஒருசில அரசியல்வாதிகளின் அரசியல் வங்குரோத்தை தெட்டத்தெளிவாகப் புடம்போட்டுக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.
இனவாதம், மதவாதம் இல்லையென்றால் இந்த நாட்டில் அரசியல் செய்ய முடியாத நிலைமையே மிஞ்சும் என்பது போன்றே இவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
இந்தவிதமான போக்குகளுக்கு இடம் கொடுக்காது மக்கள் யதார்த்தத்தை உணர்ந்து செயற்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமாகும்.
வெறுமனே அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் எவரும் இடம்கொடுப்பார்களேயானால் இறுதியில் அது அவர்களின் தலையிலேயே மண்ணை வாரி இறைத்துகொண்ட நிலைமையை ஒத்ததாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நாட்டில் நல்லாட்சி அர்த்தபுஷ்டியாக அமைய வேண்டுமானால் முதலில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எக்காரணம் கொண்டும் சீர்குலையாது இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila