வடக்கில் சிங்கள குடியேற்றம் இனப்படுகொலைக்கு ஒப்பானது

வடக்கில் சிங்கள குடியேற்றம் இனப்படுகொலைக்கு ஒப்பானதுவடக்கில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதானது, இனப்படுகொலைக்கு ஒப்பான செயல் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் விசேட இணைப்பாளர் ரொட் புச்வால்ட் இடம் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை வடக்கு முதல்வரின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தைப்போலவே தற்போதைய அரசாங்கமும் மாகாணசபைகளைப் புறக்கணித்துச் செயற்படுகின்றது. மாகாண சபைகளுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசாங்கம் சுயமாகவே முடிவெடுத்துச் செயற்படுகின்றது. இதனால் வரும் சிக்கல்களை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை. தற்போது வடக்கில் 65,000 வீடுகள் அமைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. ஆனால் எம்மிடம் இதுபற்றிக் கலந்துரையாடவில்லை. இதனால் பயனடையப்போவது எமது மக்கள். ஆனால் அந்த வீடுகள் எமது மாகாணத்துக்குப் பொருந்துமா என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தினைப் பிரதானமாகக்கொண்டே 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் மற்றைய மாகாணங்களைப்போல் வடக்கு மாகாணத்தை நடாத்துவது ஏற்றுக்கொள்ளமுடியாது. இதன்படி தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பதுதான் அர்த்தம் எனவும் தெரிவித்துள்ளார்.
காணி விவகாரம் தொடர்பிலும் வலியுறுத்தியுள்ளேன். வடக்கில் இப்போதும் தமிழ்மக்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் காணிகளுக்கண்மையிலும் இராணுவத்தினர் முகாம் அமைந்துள்ளனர். மக்களின் காணிகளில் இருந்துவரும் வருமானத்தையும் இராணுவத்தினரே அனுபவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் விரைவில் முடிவு காணப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
அத்துடன், வடக்கில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறுகின்றது என்பது தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ளேன். யுத்த காலத்தில் மக்கள் அப்பிரதேசங்களை விட்டு வெளியேறிய நிலையில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடைபெற்றது. தற்போதைய அரசாங்கத்திலும் அது தொடர்கின்றது. இவ்வாறு தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுவது இனப்படுகொலைக்கு ஒப்பானது எனவும் சுட்டிக்காட்டி யுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila