எமது சொந்த மண்ணை ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
காணி உட்பட அசையாத சொத்துக்களுக்கு வழக்கு தொடுக்கும் சட்டமூலத்தை வரவேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்த காலத்தில் தமது பாதுகாப்பிற்கு பயந்து, பலர் புலம்பெயர்ந்து இன்றும் வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், தமது பூர்வீக நிலங்களை விடுத்து, வெளிநாட்டிலும் உரிமையைப் பெற்றுக்கொள்ளாது எமது மக்கள் இன்றும் அகதி வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறானவர்களுக்கு இன்று சட்டத்தின் மூலமாக தமது சொத்துக்களை, உரிமைகளை கேட்டுப்பெறுவதற்கு சட்ட ஏற்பாடு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் இருந்து மீண்டு வந்தவள் என்ற வகையில், எமது மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளையும் இங்கு முன்வைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலத்தில் தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகளை விட இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்றவற்றில் மக்களின் நகைகள், பணங்களை வைப்பிலிட்டதற்கான ஆவணங்கள் இருந்தும் உரிய வகையில் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமாத்திரமின்றி யுத்தத்தின் போது தமது வாகனங்களை விட்டு வந்தவர்கள், ஆவணங்களை வைத்திருந்தும் கிடைக்காது இருப்பதாகவும் அசையும் சொத்துக்கள் கிடைக்காதவர்களுக்கும் உரிய வகையில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வன்னிப் பகுதியில் வகைதொகையின்றி காடழிப்பு, சட்டவிரோத முறையில் இடம்பெறுவதையும் சுட்டிக்காட்டிய அவர்,
மீள்குடியேறிய மக்கள் தமது பூர்வீக நிலங்கள் மற்றும் சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாதும் ஆகாரமின்றி, நீரின்றி வீதிகளில் அலைந்து நீதிகேட்டு திரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்களையும் கருத்திற்கொண்டு எமது மக்களுக்கு ஒரு இயல்பான நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் எமது மக்களின் பூர்வீக நிலங்களை வன வளத்துறை சுவீகரிப்பதையும் உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்பகப்பட்ட மக்கள் மீண்டும் பல இன்னல்களை சந்தித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர்,
எமது மக்களின் இயல்பான வாழ்க்கைக்கு, நல்லாட்சி அரசு நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.