ஒரு இனத்தை அழிப்பதற்கு படுகொலைகள் மூலம் மட்டுமல்ல, அவர்களின் வாழ்வாதரங்களை அழிப்பதன் மூலமும் அழிக்கமுடியும். அவர்களின் மொழி, வாழ்விடமான வீடு, தொழில், கல்வி, கலை பண்பாடு போன்ற வாழ்வாதாரங்கள் அனைத்தையும் அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும். படுகொலைகளை விட இது மிகவும் ஆபத்தானது. கொலை நடைபெறும் போது தனது உயிரைக்காப்பாற்றிக்கொள்ளவாவது மனிதன் போராடுவான். வாழ்வாதாரங்களை அழிக்கும்போது அவற்றை முதலில் அரச நிர்வாகங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், ஆக்கிரமிப்புகள் மூலமும் செய்ய முனைவான். பயமுறுத்தியும் அனைத்தையும் செய்ய முனைவான். அதுமுடியாதபோது தனது தனது இராணுவநடவடிக்கை மூலம் அதைச் செய்ய முனைவான்.
தமிழீழத்தில் யுத்தம் முடிவடைந்து 7 வருடங்களாகியும் இதுவரை இராணுவத்தை வெளியேற்றாமல் இருப்பதற்கு இதுவே உண்மையான காரணமாகும்.
இன்றும் தமிழர்களை அடக்குவதற்கான சட்டங்கள் அப்படியே உள்ளன. எமது விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கோடு நடைபெறும் சிங்களக்குடியேற்றங்கள், வியாபாரம், விவசாயம்,தொழில் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புகளும் நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் படுகொலைகளைத் தவிர ஏணையவை அனைத்தும் தாராளமாக நடைபெற்று வருகின்றன.
2009 க்குப் பின் நடைபெற்றுவரும் கீழ்குறிப்பிடப்படும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது எதிரி எமது இனத்தை எப்படி அழித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்
– மட்டக்களப்பில் 26 வீத மாணவர்கள் போதைக்கு அடிமை. மட்டக்களப்பு பொதுசுகாதார உத்தியோகத்தர் ஜே. தேவநேசன் 18-10-2015 ல் அறிவிப்பு.
– யாழ்ப்பாணத்தில் 22 மாணவர்களுக்கு எயிட்ஸ் நோய்.
– சட்டவிரோத சிங்களக்குடியேற்றங்கள் தினமும் நடைபெறுகின்றன – உதயன்
– தமிழ் மக்களை 19 கிராமசேவகர் பிரிவில் இருந்து ஆயுதமுனையில் விரட்டி விட்டு 11789 சிங்களவர்களை குடியேற்றி சிங்களமாவட்டமான அனுராதபுரத்துடன் இணைத்த மணலாறுப் பகுதி மீண்டும் முள்ளிவாய்க்களுக்கு பின் தமிழ் மாவட்டமான முல்லைத்தீவுடன் இணைக்கப்பட்டது. இது சிங்கள மாவட்டமாக்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதியேயாகும்
– வடமாகாணத்தில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் 361 பேர் நியமனத்தில் 332 பேர் சிங்களவர்கள் 29 பேர் தமிழர்கள் – வடபகுதி விவசாய அமைச்சர் அங்கரநேசன் – 13-8-2015
– மட்டக்களப்பு கமநலசேவை விவசாய ஆராய்ச்சி உதவியாளர் 99 பேர் நியமனத்தில் 75 பேர் சிங்களவர்கள் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா
– முல்லைத்தீவில் 7-4-2015ல் தமிழர்களுக்கு மீன்பிடிக்க அனுமதி. சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் 300 சிங்களவர்களுக்கு கடற்படை பாதுகாப்பு – வடமாகாண மீன்பிடி அமைச்சர்
இது எமது இனத்தை அழிக்கும் செயல்பாடுகளில் சில உதாரணங்களாகும். இப்படி பல சம்பவங்கள் தினம் தினம் நடைபெறுகின்றன.
2009 க்குப் பின் சிங்களவர்களுக்கு அடிமைகளாக அவதியுறும் நிலையே உள்ளது. எமது வாழ்க்கையினை சிங்களவர்களும், சிங்களா அரசும் திட்டமிட்டு அழித்து வருகிறார்கள். யுத்தம் முடிவடைந்து 7ஆண்டுகளாகியும் இராணுவம் அப்படியே நிலை கொண்டுள்ளது. இராணுவத்திற்கான சிங்களக்குடியேற்றங்களும் நடைபெற்றுவருகின்றது. இதைவிட சிங்களமீனவர்களுக்காக முல்லைத்தீவு, மன்னார், மாதகல் போன்ற கடற்கரைப்பகுதிகளிலும் சிங்களக்குடியேற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. தமிழீழப் பகுதிகள் அனைத்திலும் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பே நடைபெறுகிறது. வியாபாரம் சிங்களவர்களின் கைகளில், மீன்பிடித்தொழில் சிங்களவர்களின் கைகளில்.விவசாயம் அவர்களின் கைகளில் கூலித் தொழில் கூட அவர்களின் கைகளிலிலே உள்ளது. அரசநிர்வாகங்களில் சிங்கள அதிகாரிகள், உழியர்கள் நியமனங்கள், புத்தவிகாரைகள் நிர்மானிப்புகள் என திட்டமிட்டே எம்மினத்தை அழித்துவருகிறார்கள்.
ஒவ்வொரு இனத்தினதும் வாழ்வின் சிறப்பு அந்த இனத்திடமே தான் உண்டு. அந்த இனம் சகல சுகங்களையும் பெற்று சுகந்திரமாக வாழ்கிறது என்றால் விலைபோகாத நேர்மையான தலைமையை அரசியலில் தெரிவு செய்துள்ளார்கள் என்பதே காரணமாகும். உலகில் அரசியல் இல்லாமல் எதுகுமே இல்லை. மனித வாழ்வுக்காகவே அரசியல் உருவாக்கப்பட்டது. மனித வாழ்க்கை அரசியலோடுதான் முழுமையாகச் சம்பந்தப்படுகிறது. வாழ்க்கைச் சுகத்தை அனுபவிக்கும் நாடுகளே இதற்கு உதாரணமாக திகழ்கின்றன.
ஈழத்தமிழினம் அரசியலில் பங்குகொள்ளாமல் இருப்பதும். சரியான, விலைபோகாத, நேர்மையான தலைமையை தெரிவு செய்யாது இருப்பதுமே தமிழினம் அழிவதற்குரிய முதன்மைக் காரணங்களா கும்.
தமிழர்களுக்கு சிங்களவர்கள் அன்பளிப்பாக உரிமைகளைத் தரப்போவதில்லை. போராட்டத்திற்கூடாகவே உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் – 29-10-2015ல் லண்டனில் முன்னாள் நோர்வே அமைச்சர் சொல்ஹெய்ம் தெரிவிப்பு.
பேச்சுவார்த்தையில் 3 வருடங்களுக்கு மேலாகப் பங்குபற்றிய நோர்வே நாட்டு வெளிநாட்டமைச்சருக்குரிய அனுபவம், 40 வருடம் அரசியல் நடாத்தும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கோ, கூட்டமைப்பினருக்கோ இல்லாமல் போனதா ? இதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய ஜனநாயக உலகில் மக்களே அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளார்கள். முழு வலிமையையும் மக்களிடமே உண்டு. இன்று தமிழினத்தின் ஜனநாயக வழி பிரகாசமாகவே உள்ளது. உலக அரங்கில் எமது பிரச்சினை பேசும் பொருளாகவே மாறிவிட்டது. இன்று எமக்கு சாதகமாக நிலைமை உள்ள போதும் எம்மால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள் உண்மையானவர்களாக இருந்திருந்தால் ஜனநாயக வழியில் இக்கொடுமைகளுக்கு எதிராக சளைக்காது போராடியிருப்பார்கள். போராடியிருந்தால் ஐ நா, சர்வதேசம் அனைத்தும் எமது பிரச்சினையில் சரியான ஒரு முடிவை எடுத்திருக்கும். நாமும் சரியான தீர்வை நோக்கிப் போயிருப்போம். எமது தலைவர்கள் இவ்வளவு கொடுமைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதும் வாய் திறந்து கதைப்பதற்குக் கூட நாதியற்று இருக்கிறார்கள். “ அழுதபிள்ளைதான் பால் குடிக்கும் ” இது சிறுபிள்ளைக்குக் கூட தெரியும். கொடுமைகளுக்கெதிராக ஜனநாயகரீதியாக பெரும் போராட்டங்களை நடாத்தவேண்டும். இதை யார் செய்வது ? மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்கள்தான் இதைச் செய்யவேண்டும்.
ஜனநாயகச் சூழல் மோசமாக இருக்கும் காலங்களிலையே தந்தை செல்வா பல வெகுஜனபோராட்டங்களை இடையறாது நடாத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பயந்தவர்களால் தலைமை தாங்கமுடியாது. பயந்தவர்களையும், பதவிகளுக்காக அலைபவர்களையும் தமிழ்மக்கள் இனம்கண்டு நிராகரித்தால்தான் இனத்துக்கான விடிவு ஏற்படும்.
நாம் இன்று ஆயுதம் ஏந்திப்போராடக் கூடிய நிலை இல்லை என்பதே இன்றைய யதார்த்தமாகும்.ஆயினும் ஜனநாயக வழி பிரகாசமாகவே இருக்கிறது. அதற்குரிய தலைமைதான் தேவை. இருக்கின்ற தலைமை விலை போன, போகின்ற தலைமைகளாக இருப்பதாலையே இந்த இழிநிலை எமக்கு ஏற்பட்டது. இவர்கள் முள்ளிவாய்க்கால் வரை சரியாகவே செயல்பட்டார்கள். பின்னர்தான் துரோகிகளாக மாறினார்கள். ஆயினும் மீண்டும் இவர்களை நாம் தெரிவு செய்தது ஏன் என்பது புதிராகவே உள்ளது. அவர்கள் ஏமாறவில்லை. மக்களாகிய நாம்தாம் ஏமாந்தோம்.
சிங்கள அரசியல்வாதிகள் ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். கனசித்தமாக அதை இன்றும் செய்துகொண்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதும், ஏமாற்றுவார்கள் என்பதும் எமது தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதைப்பற்றி இவர்களுக்கு கவலையே இல்லை. இவர்களின் இன்றைய குறிக்கோள் பதவிசுகங்கள், பணவருவாய்கள், வெளிநாட்டுப்பயணங்கள் ஆகியவையே ஆகும். இவர்களில் சிலர் தேவைப்படும்போது மக்களை ஏமாற்றுவதற்கு பிரபாகரன் தான் எமது தலைவர், விடுதலைப்புலிகள்தான் எங்கள் வழிகாட்டிகள் என மேடைகளில் முழங்குவார்கள். இதனால் தான் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்தார்கள். ஆயினும் எப்போதும் மக்கள் இப்படி இருக்கப்போவதில்லை. மக்கள்தான் உலகிலே மகத்தான சக்திகள்.
அரசியலில் நல்லவர்கள், கூடாதவர்களை ( நடிப்பவர்களை ) இனம்காண மக்கள் தவறுபவர்களே ஆனால் வாழ்க்கைச்சுகங்களை இழந்து அடிமையாகவே வதைபடுவார்கள். தனது வலிமை தனக்குத் தெரியாத ஒரு அவல நிலை எமது இனத்துக்கு உள்ளது.
இன்றைய ஜனநாயக உலகில் வலிமை மக்களுக்கே உண்டு. அரசியலில் சரியானவர்களையும், நல்லவர்களையும் மக்கள் ஒன்றுதிரண்டு தெரிவுசெய்தாலே போதும் அவலவாழ்வு நீங்கும்.
2009 க்குப் பின் தமிழினம் சிங்களவர்களின் அடிமைகளாக அவதியுறும் நிலையே உள்ளது. இதில் நவீன அடிமைகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளனர். இவர்கள் பணம்சம்பாதிக்கலாம் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளலாம் சிங்களவர்களின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளலாம் உரிமைகள் பற்றிப் பேசவோ, போராட்டங்கள் நடாத்தவோ கூடாது. இதுவே நவீன அடிமைத்துவமாகும். இதனால்தான் எந்த ஒரு போராட்டமும் நடத்தாது, வெறுமனே தங்களது சுகநலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் உலக பந்தில் வாழும் ஒரு மனிதக் கூட்டம். எமக்கு சகல உரிமைகளுடன் வாழும் உரிமை உண்டு. ஆயினும் வாழமுடியாது உள்ளோம். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் சகல வழிகளிலும் வதைபட்டுக்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து விடுபட முடியாதா ? வழி தெரியாது எனச் சொல்லமுடியுமா ? ஜனாநாயக வழிகளில் நாம் அனைவரும் சரியானவர்களின் பின்னால், விலைபோகாதவர்களின் பின்னால் ஒன்றுசேர்ந்தாலே காணும் வழி தானாகவே பிறக்கும். எமது மூதாதையர் வாழ்ந்து ஆட்சி செய்த பூமியை விட்டு ஓடிக்கொண்டிருக்கலாமா ? எமக்காவது சிறு பகுதியாவது நாடு உள்ளது. யூதர்கள் நாடே இல்லாத நிலையிலும் உலகெங்கும் அகதிகளாக வாழ்ந்து கொண்ட நிலையிலும் தங்களுக்கான நாட்டை எப்படி அமைத்தார்கள். சொல்லனாக் கொடுமைகளை அனுபவித்தபோதும் தமது விடுதலைக்காக ஒற்றுமையுடன் உழைத்தார்கள். என்ன அவசியமோ அனைத்தையும் செய்தார்கள். தங்களுக்கென வங்கி ஒன்றை அமைத்தார்கள், தகவல் நிலையம் ஒன்றை அமைத்தார்கள் இப்படி என்னசெய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து இஸ்ரவேல் எனற ஒரு நாட்டை உலகே ஆச்சரியபடும் அளவிற்கு அமைத்தார்கள்.
நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் நாம் இரத்தம் சிந்தச்சொல்லி சொல்லவில்லை. உங்களது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கச் சொல்லவில்லை. மக்களுக்காக தங்களையே அற்பணிக்கின்றவர்களை இனம்கண்டு அரசியலில் தெரிவுசெய்யுங்கள். இந்த ஒரு பணியை நாங்கள் சரியாகச் செய்துவிட்டால் காணும் நாங்கள் வெற்றிபெற்றுவிடுவோம்.
புலம்பெயர் வாழ் மக்களே நீங்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையினைப் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள அரசியல் தலைவர்களையும் பார்த்திருப்பீர்கள். அவர்களின் உரிமைகளையும் அழகான வாழ்க்கையினையும் பார்த்திருப்பீர்கள். அப்படி எமது மண்ணில் எமது உடன்பிறப்புக்கள் வாழவேண்டாமா ? இதற்காக நீங்கள் ஒன்றுபட்டு உழைக்கவேன்டாமா ? எந்த அந்நிய மண்ணில் நாம் வாழ்ந்தாலும் சொந்த மண்ணை இழந்தால் எமது மகிழ்ச்சியான வாழ்வையும் இழந்து விடுவோம். எமது கௌரவமான வாழ்வையும் முழுமையாக இழந்துவிடுவோம். நாட்டிலும், புலம்பெயர்நாடுகளிலும் சரியான, உண்மையான ஒரு தலைமையை இனம் கண்டு தெரிவு செய்ய நீங்கள் உழைக்கவேண்டும். வாழ்க்கையில் ஒரு சிறு பங்குனை அரசியலிலும் நீங்கள் செலுத்தவேண்டும்.
புலம்பெயர் வாழ் இளம்குருத்துக்களே உங்களின் நாடு தமிழீழம் என்பதை சிறு கணமேனும் மறந்துவிடாதீர்கள். உங்களின் கௌரவமான வாழ்வு தமிழீழத்தின் விடியலில் தான் உள்ளது.
“ இளைஞர்கள் தான் பிரதான இயங்கு சக்திகள் ” உங்களின் கைகளிலும் தான் தமிழீழ மக்களின் வாழ்வு உள்ளது. இஸ்ரவேல் என்ற நாட்டை உங்களின் வழிகாட்டியாகக் கொள்ளுங்கள். ஜனநாயக வழிகளில் ஒன்றுபட்டு செயல்படுங்கள். வெற்றியை நோக்கி நடை பயிலுங்கள். வெற்றி நிச்சயமாக எம்மை நோக்கி வரும். “ விதைச்சால் நிச்சயமாக முளை வரும், சளைக்காத செயல்பாடுகள் வெற்றிகளைக் குவிக்கும். ”
– மாறன், 09.04.2016