மரங்களைத் தறிப்பதில் நாம் காட்டிய ஆர்வம் மர நடுகையில் இருக்கவில்லை. வீதியோரங்களில் பந்தல் போட்டிருந்த பெருவிருட்சங்களை வீதி அகலிப்புக்காக வெட்டி வீழ்த்தியதால் இன்று வெப்பத்தின் கொடுமையைத் தாங்க முடியாமல் உள்ளது.
யாரைப் பார்த்தாலும் ஐயா! வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று கூறி சினம் கொள்வதை காணமுடிகிறது. இப்படியொரு நிலை நிச்சயம் வரும்; அதற்கு ஏற்றால் போல் மரங்களை நடுங்கள் என்றால் அது பற்றி யாரும் கவனம் செலுத்தவில்லை.
காப்பெற் வீதி வந்தால் போதும் வாகனங்களை வேகமாகச் செலுத்தலாம் என்று நினைத்தோமே தவிர வீதிகளில் நின்ற நிழல் தந்த மரங்களை தறித்த நாம் அதற்குப் பதிலீடாக மரநடுகை செய்தோமா என்றால் எதுவுமேயில்லை.
இத்தகையதொரு நிலையில் வெயிலைக் குற்றஞ்சாட்டி எந்தப் பயனும் கிடையாது.
மாறாக வீதிகளின் இரு மருங்கிலும் மரநடுகையைச் செய்து அதை வளர்த்தெடுப்பதுதான் எங்கள் எதிர்கால சந்ததியாவது கடும் வெயில் கொடூரத்தில் இருந்து தப்பிப் பிழைப்பதற்கான வழியாக இருக்கும். இதேபோன்றுதான் எங்கள் இளைஞர்களின் நிலையும்.
இளைஞர்கள் தொடர்பில் நாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அவர்கள் மீது சுமத்துகின்றோம். இளைஞர்கள் மீது குற்றங்களைச் சுமத்துகின்ற நாம், அந்த இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக-வழிப்படுத்துவதற்காக-ஆற்றுப்படுத்துவதற்காக என்ன செய்தோம் என்று ஒரு கணம் சிந்திப்பது அவசியமல்லவா?
எங்களின் கலைகளை இழந்தோம்; எங்களின் சனசமூக நிலையங்களின் கட்டமைப்புகளைத் தொலைத்தோம்; ஆலய வழிபாடு -ஊர்கூடி திருவிழா செய்யும் சிறப்புகளை மறந்தோம்.
இதன் விளைவு இளைஞர்கள் தமக்கான ஒரு சூழலை உருவாக்க தலைப்பட்டனர். வழிப்படுத்தல் இல்லாத இளைஞர்களை தீயசக்திகள் வழிப்படுத்த தலைப்பட்டன.
மது, போதைவஸ்து என்ற நாசகாரங்களைப் பரப்பி எங்கள் இளைஞர்களை பிறழ்வுக்கு உட்படுத்த முற்பட்டன. இருந்தும் நாம் அதுபற்றி அலட்டிக் கொள்ளவே இல்லை.
அடுத்த வீட்டில் அவலக்குரல் கேட்டால், எங்கள் வீட்டு வெளிச்சத்தை இருளாக்கி விடுவதுதான் வழி என்பதாக எங்கள் வாழ்வு வந்துவிட்டது.
வீதியில் விபத்துண்டு வீழ்ந்து கிடப்பவரை தூக்கி மருத்துவமனை நோக்கி கொண்டு ஓடியகாலம் போய், இப்போது விபத்தில் வீழ்ந்து கிடப்பவன் முடிந்து போனான்; ஆள்அவுட்; மூச்சு வருகிது; இதயம் துடிக்கிறது என்று கூடி நின்று வர்ணணை செய்து வேடிக்கை பார்க்கும் அளவுக்கு எங்கள் இதயங்களை கல்லாக்கிக் கொண்டோம் அல்லவா?
இதற்கு ஏதேனும் நாம் பரிகாரம் செய்தோமா? அப்படியானால் எங்கள் இளைஞர்களை குறை சொல்வது எந்த வகையில் நியாயமாகும்?
ஆகையால் ஊர்கள் தோறும் கலைகள் வளரட்டும். பொதுத்தொண்டுகள் பெருகட்டும். எங்கள் இளைஞர்களின் ஆற்றல்களை, திறன்களை வளர்த்து விட களங்கள் பரவட்டும்.
மாதத்தில் ஒரு தடவையேனும் ஒன்று கூடி எமதருமை இளைஞர்களே! எங்கள் உயிர் மூச்சுக்களே! எங்கள் ஊரை எப்படி வளப்படுத்துவோம்? என்று சொல்லுங்கள் என்று கேளுங்கள்.
அப்போதுதான் காந்திகளும் விவேகானந்தர்களும் அன்னை திரேசாக்களும் எங்கள் இளைஞர்கள் மத்தியில் இருப்பது தெரியவரும். இதைச் செய்யுங்கள் எல்லாம் சரிவரும்.