வட மாகாணத்தில் இராணுவ தேவைக்காக எந்தவொரு காணியையும் கையகப்படுத்தும் தேவை கிடையாது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக யாழ். மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன், வட மாகாணத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே திட்டமிட்டவாறு காணிகளை இராணுவம் கையகப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகிய பகுதிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, காணிகளை கையகப்படுத்தும் நடவடிக்கை ஏழு வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது.
எனவே, முன்னர் குறிப்பிடப்பட்ட இடங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே புதிதாக எந்தவொரு காணியையும் இராணுவத்தினர் கையகப்படுத்தவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.