அத்துடன் அப்பிரேணையூடாக வரலாற்று காலத்தில் துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்த முடிவில், கொல்லப்பட்ட எல்லாளனுக்கு துட்டகைமுனு நினைவாலயம் அமைத்து மரியாதை செய்ததை போன்று தற்போது இடம்பெற்ற யுத்தத்திலும் எல்லாளனுக்கு சிலையமைத்து நினைவுகூர வேண்டும் என்பதையும் வலியுறுத்தவுள்ளேன் என ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இதன்போது, ‘இதில் யார் எல்லாளன்? யார் துட்டகைமுனு?’ என ஊடகவியலாளர் வினவியதற்கு, அது தொடர்பாக தற்போதே தெரிவித்தால், இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வருவதற்கு தடையாக அமைந்து விடும் எனவும், ஆனால் அது யார் என்பது மக்களுக்கே தெரியும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய டக்ளஸ் தேவானந்தா, ” தற்போதைய புதிய அரசாங்கம் சாதகமான சமிஞ்சை வழங்கியுள்ளது. அதாவது நாடாளுமன்றத்தை அரசியல் யாப்பு சபையாக மாற்றியுள்ளது. அத்துடன் அதற்கான வழிகாட்டல் குழுவில் நானும் ஒர் அங்கத்தவனாக உள்ளேன். இத்தகைய ஒர் நிலையில் அச்சபைக்குள் இருந்து கொண்டு கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் விட்ட தவறை மீண்டும் விடுவதற்கு நான் அனுமதிக்க போவதில்லை. இதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.
மேலும், அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை தவற விட்டோமேயானால், இனி அது போன்றதொரு வேறு வாய்ப்பு கிடைக்க வாய்ப்பில்லை. அத்துடன் இதுவரை காலமும் குடிசைகளிலும் வெயிலும் மழைகளிலும் கஷ்டப்பட்ட மக்களுக்கு தற்காலிகமாக ஒரு அரண்மனை கிடைத்ததை போன்ற ஒன்றாகும் அவ்வீடுகள்.
எனினும் இவ் வீட்டுத்திட்டம் தொடர்பில், இது பொருத்தமற்றது. எமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் பொருத்தமற்றது என கூறிக் கொண்டிருப்பவர்கள், இந்த புதிய அரசாங்கத்தை தாம் தான் கொண்டு வந்ததாக கூறுபவர்கள், அரசாங்கம் அமைய முன்பே பல இரகசிய சுற்று பேச்சுக்களை நாடாத்தியவர்கள். முன்னரே இது தொடர்பாக அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமபைப்பானது தமிழ் மக்களது பிரச்சனைகள் அதாவது 65ஆயிரம் வீட்டுத்திட்ட பிரச்சனை, இந்திய மீனவர் பிரச்சனை, சம்பூர் பிரச்சனை தொடர்பில் மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.- என்றார்.