இராணுவத்தால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது!


நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..

■ (உண்மைச் சம்பவம்)

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.

அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று!

இந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்குமூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.

இந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான்!, இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்ரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.

இவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.1386833404

எவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை..! இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்யமுடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்தபின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..!

எங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்!

இந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்!
2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன் இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது!

இந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது!

இந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”!srilanka2

(கண்கள் கலங்கியபடி)

“என் உயிர்த்தோழனே! எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ! உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே!!! என் தோழனே! நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்!”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என என் இதயத்தை கனக்க வைத்தார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி!

■ மேற்குறிப்பிட்ட வீரனைப் பற்றிய சுருக்கமான சில பதிவுகள்.

இவன் சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்ததனால் விடுதலைப் போராட்டத்தின் போரியல் மரபுகளை விரைவினிலேயே கற்று, கானகன் என்ற பெயருடன் விடுதலைப் போராளியாக வெளியேறினான் .

துடிப்பு மிக்க இளைஞனாகவும், துணிச்சல் மிக்க வீரனாகவும் தான் பார்த்து வந்த அனைத்துக் காட்சிகளையும் தன் நினைவுகளில் பதிவு செய்து பல வருடங்கள் கழித்தாலும், அந்தக் காட்சிகளை அப்படியே உண்மைத் தன்மையுடன் விபரிக்கும் இவனின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போன இவனின் தளபதிகள், இவனின் நினைவாற்றலுக்கு ஏற்றால் போல் இவனை வேவுப்படையணியின் விசேட கொமாண்டோ பயிற்சில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர்.

தளபதிகளின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட கானகன், விசேட வேவுப் பயிற்சியினை கச்சிதமாக முடித்துக் கொண்டு வேவு நடவடிக்கைகளிலும் சிறப்பாகச் செயற்பட்டு வந்ததோடு… ஒரு நாள் யாரும் எதிர்பாராத சமயத்தில் வேவுக்குச் சென்று இடையூறாக இருந்த சிங்கள இராணுவப் படையினர் ஐவருடன் தன்னந்தனியாகப் போராடி அந்த ஜந்து இராணுவத்தினரையும் கொன்று அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி தனது வேவு நடவடிக்கையின் வீர வரலாற்றினை பதிவு செய்தான். இந்த விடயத்தினை அறிந்த தேசியத் தலைவர் அவர்கள் கானகனுக்கு “புயல்வீரன்” என்ற பெருமைமிகு பெயரினைச் சூட்டி கௌரவப்படுத்தினார்.

இவனின் தனித்துவமான வீரதீரச் செயல்களினால் படிப்படியாக உயர்ந்து “இராதா வான்காப்புப் படையணியின்” சிறப்பு வேவுப் பிரிவின் தளபதியாக உயருமளவிற்குப் பெயர் பெற்றான்.
மேலும், சில குறிப்பிட்ட காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் அதி முக்கிய தளபதிகளில் ஒருவரான “றட்ணம் மாஸ்ரர்” அவர்களுக்கு மெய்ப்பாதுகாவலனாகவும் பணியாற்றியுள்ளான்.

பிரிகேடியர் பால்ராஜ் அண்ணாவின் காலப்பகுதியில் மன்னார் மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த பால்ராஜ் அண்ணாவின் துணைக் கட்டளைத் தளபதியாகவும் திறம்படச் செயற்பட்டு வந்தான்.

இந்த மாவீரனைப் போலவே பல போராளிகள் முள்ளிவாய்க்காலின் இறுதி நேர யுத்தத்தில் இறுதி வரை நின்று தாய் மண்ணிற்காகவே போராடி உயிர் துறந்து வெளியுலகிற்குத் தெரியாமலேயே மக்களோடு மக்களாக மண்ணிற்குள் புதையுண்டு போயுள்ளார்கள். சிலர் அடையாளம் தெரியாதளவிற்கு எரிக்கப்பட்டு பின் அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டு விட்டனர்.

இந்தப் புண்ணிய வீரர்களைப் பெற்றெடுத்த தாய்மார்களும், உறவினர்களும் இன்னும் இன்றுவரையும் தேடியே வருகின்றனர். தாய் மண்ணின் விடிவிற்காய் இறுதி வரை நின்று போரிட்டு உயிர் துறந்த மாவீரர்களுக்கு நாமும் அவர்களுக்குரிய தகுந்த மரியாதையினைக் கொடுக்காமலும், அவர்களின் வீர வரலாற்றினை தெரிந்து கொள்ளாமலும் இன்றுவரையும் மறந்தே வாழ்ந்து வருகின்றோம்.

இந்தப் புண்ணிய வீரர்களின் வீரச்சாவானது சாதாரண நிகழ்வாகிப் போய் விடக்கூடாது என்பதற்காகவும், இவர்களின் வீரவரலாறுகள் யாரும் அறியாமல் மறைந்து அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுக்குரிய மரியாதையினையைக் கொடுத்து கௌரவப்படுத்தி வெளியுலகிற்குத் தெரியப்படுத்துகின்ற வகையில் இந்தப் புண்ணியவான்களின் உயிர் பிரியும் போது இவர்களோடு இறுதி வரை நின்று உயிர் தப்பி வந்த போராளிகளும், மக்களும்தான் இவர்களைப் போன்ற மாவீரர்களின் உண்மை விபரங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

எமக்காகவும், எம் மண்ணின் விடிவிற்காகவும் இறுதிவரை நின்று போராடி உயிர் துறந்தவர்களை நாம்தான் கௌரவித்து… அவர்களுக்குரிய மரியாதையையும் வழங்க வேண்டும்.

– வல்வை அகலினியன்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila