தேவலோகத்து தூதுக்குழு நயினாதீவுக்கு திடீர் விஜயம்


நயினாதீவில் கடல் எல்லைப் பகுதியில் 67 அடி உயரமான புத்தர் சிலை அமைப்பது குறித்த விவகாரம் வடபுலத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்,நிலைமை குறித்து ஆராயும் பொருட்டு தேவலோகத்து தூதுக்குழு ஒன்று நயினாதீவுக்கு விஜயம் செய்ததாக ஒரு கற்பனை.

தேவலோகத் தூதுக்குழுவானது இந்திரன் தலைமையில் யமதர்மராஜன், சித்திரகுப்தன், நந்திதேவர், வைரவர் உள்ளிட்டவர்களைக் கொண்டதாகும். குறித்த தூதுக்குழுவானது புஷ்பக விமானத்தில் நயினாதீவுக்கு வருகிறது. 

யமன் : சித்திரகுப்தா! என்ன? நயினாதீவில் இரண்டு இறங்குதுறைமுகங்கள் தெரிகின்றன.

சித்திரகுப்தன் : சுவாமி! முன்பு நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய முன்றலில்தான் இறங்குதுறை இருந்தது. ஆனால் இப்போது கெளதம புத்த பிரானின் நாகவிகாரைக்கு முன்பாகவும் இறங்குதுறை அமைக்கப்பட்டுள்ளது.

யமன் : அட அப்படியா சங்கதி? அப்படியானால் குறிகாட்டுவான் துறையிலிருந்து புறப்படும் பயணிகள் படகுகள் முதலில் எந்தத் துறைக்குச் செல்லும்?

சித்திரகுப்தன் : சுவாமி! நாகவிகாரையில் இருக்கின்ற சாது மிகவும் செல்வாக்கானவராம் அதனால் முதலில் பயணிகள் படகு அங்கு சென்ற பின்புதான் பழைய துறைக்குச் செல்லும்.

யமன் : சித்திரகுப்தா! இதுபற்றி ஏன் எனக்கு முறையிடவில்லை?

சித்திரகுப்தன் : சுவாமி அரசியல் செல்வாக்குச் சம்பந்தமான விவகாரம். இதில் தலையிட்டால் தேவையில்லாத சோலிவரும் என்பதால் தான் இது பற்றி நான் பேசாமல் விட்டு விட்டேன்.

யமன் : அன்று நீ பேசாமல் விட்டதால் தான் இன்று அந்த இறங்கு துறைமுகத்தில் அறுபத்தேழு அடி உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எதையும் ஆரம்பத்திலேயே கிள்ளிவிட வேண்டும். இல்லையயன்றால் எல்லாம் வில்லங்கமாகத்தான் முடியும்.

இந்திரன் : யம தர்மராசா! சற்று அமைதியாக இருங்கள். நாங்கள் இப்போது நயினாதீவுக்குத் தானே போகிறோம். அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

நந்தி : இந்திரா! நயினாதீவுக்குப் போக முதல் வடக்கின் ஆளுநரை சந்தித்தால் நல்லதாக இருக்கும் அல்லவா?

இந்திரன் : இல்லை நந்திதேவா முதலில் நயினாதீவுக்குச் சென்று அறுபத்தேழு அடி உயரமான புத்தர் சிலை வைப்பது பற்றிய விபரங்களை அறிவோம். பூலோகத்து மானிடர்கள் அறியாத வகையில் நாங்கள் தகவல்களைத் திரட்டவேண்டும்.

நந்தி : நல்லது இந்திரா அப்படியே ஆகட்டும்.
(தூதுக்குழுவினர் தமக்குள் உரையாடிக் கொண்டி ருக்கும் போதே புஷ்பக விமானம் நயினாதீவுக்கடல் வெளியைத் தாண்டிச் செல்கிறது.

வைரவர் : அதோ நயினாதீவு அம்மனின்  ராஜகோபுரம்.

இந்திரன் : நல்லது நல்லது அன்னையின் ராஜ கோபுரத்தை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். அது சரி

நந்திதேவரே! இந்த ராஜகோபுரத்தின் ஸ்தபதி யாரோ?

நந்தி : தமிழ் நாட்டின் புருஷோத்தமன் தான்  சுவாமி.

இந்திரன் : அடேங்கப்பா! ஈழத்திரு நாட்டில் அமைக்கப்படும் கோபுரங்கள், ஆலய நிர்மாணங்களில் புருஷோத்தமனுக்கு நல்ல உழைப்பு. ஈழத்து கலைஞர்கள் பாவங்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் கொடுக்கலாமே!                

(நாளை தொடரும்)
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila