நெஞ்சுரமும், நேர்மைத் திறனுமற்ற வஞ்சனைப் புகழ்ச்சி - கலாநிதி சேரமான்

koorvalain nilal-1

போர் ஓய்வுக் காலப்பகுதியில் தமிழ் ஊடகங்களின் அதிக கவனத்தைப் பெற்ற பெண் போராளிகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் தமிழினி. போர்க் காலப் பகுதியிலும் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட ஒருவராகவே அவர் திகழ்ந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற வகையில் ஜெயசிக்குறுய் எதிர்ச் சமர் காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. தேசிய விடுதலை, பெண் விடுதலை என இரண்டு தளங்களிலும் அன்று அவரது குரல் ஒலித்தது.
2003ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பொழுது உருவாக்கப்பட்ட பெண்கள் விவகார உப குழுவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பிரதிநிதியாக அவர் நியமிக்கப்பட்டார். அந்த அளவிற்குப் பெண் விடுதலை தொடர்பான துல்லியமாக பார்வை அவருக்கு இருந்ததாக அன்று அவரைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை கருதியது. சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு கருணா வெளியேற்றப்பட்ட பொழுது, அவரைத் துரோகி என்று முதன் முதலில் ஊடகச் செவ்வி மூலம் அறிவித்தவரும் தமிழினிதான். அந்த அளவிற்குத் தமிழீழ தேசியத் தலைவர் மீதான அவரது விசுவாசம் வெளிப்பட்டிருந்தது.
யுத்தம் முடிந்த பின்னர் எதிரியின் தடுப்பு முகாமில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது அவருடன் தொலைபேசி மூலம் உரையாடுவதற்குப் புலம்பெயர் தேசங்களில் உள்ள சிலருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது, ‘நாங்கள் உறுதியாகத்தான் இருக்கின்றோம்’ என்று கூறியவர் தமிழினி. எதிரியின் தடுப்பில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியில் வந்த பின்னர் தனது முகநூலில் அவர் மேற்கொண்ட பதிவுகளில் கூட அவரது தமிழினப் பற்று வெளிப்பட்டது.
jeyakumar
தமிழினியின் கணவர் ஜெயகுமார்

அவர் புற்றுநோய்க்கு ஆளாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் புலம்பெயர் தேசங்களில் உள்ள போராளி ஒருவருடன் உரையாடும் பொழுது, தனது துணைவர் ஜெயக்குமார் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை மிகவும் மோசமான முறையில் திட்டித் தீர்ப்பதாகக் கவலை வெளியிட்டதோடு, தவறான ஒருவரை ‘நான் திருமணம் செய்து விட்டேனோ?’ என்று கூட தனது ஆதங்கத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
அப்படிப்பட்ட ஒருவர் எழுதியதாகக் கூறி கூர்வாளின் நிழல் என்ற தலைப்பின் கீழ் இப்பொழுது வெளிவந்திருக்கும் பொத்தகம் (நூல்) பல கேள்விகளைத் தோற்றுவிக்கின்றது. கடந்த பத்தியில் நாம் குறிப்பிட்டது போன்று ஒன்றில் தமிழினி உயிர்த்தெழுந்து வர வேண்டும்: அல்லது அவர் எழுதியதாகக் கூறப்படும் நூலின் கையெழுத்துப் பிரதிகள் வெளியில் வர வேண்டும். அது வரை இந்த நூலைத் தமிழினிதான் எழுதினார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. அவரது துணைவர் இந்த நூலை வெளியிட்டார் என்பதற்காக அதனைத் தமிழினி எழுதியதாக நாம் கருத வேண்டியதில்லை. ஒரு பிழையான நபரை ‘நான் திருமணம் முடித்து விட்டேனோ?’ என்று தமிழினி ஆதங்கப்படும் அளவிற்கு அவரது குடும்ப வாழ்வில் கசப்பான நிகழ்வுகள் நடந்திருப்பதானது, தமிழினியின் பெயரால் நூல் ஒன்றை அவரது துணைவரே எழுதியுள்ளார் என்றே எண்ண வைக்கின்றது. இந் நூலை உண்மையில் தமிழினிதான் எழுதியிருந்தார் என்று அடித்துக்கூறும் ஜெயக்குமார் அவர்களை, தமிழினி எழுதிய கையெழுத்துப் பிரதிகளை வெளியிடுமாறு நாம் சவால் விடுக்கின்றோம்.
தமிழினியின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடிகின்றது. தனது இயக்க வாழ்வின் அனுபவங்களைத் தனது துணைவர் ஜெயக்குமார் அவர்களுடன் தமிழினி பகிர்ந்து கொண்டிருக்கின்றார் என்பதும், அவற்றையும், தனது கருத்துக்களையும், ஏனைய புல்லுருவிகளின் கருத்துக்களையும் சாம்பாராக்கிக் கூர்வாளின் நிழலில் என்ற தலைப்பில் தமிழினிக்கு ஜெயக்குமார் துரோகம் செய்துள்ளார் என்பதுதான் அது.
ஒரு கதைக்கு இந் நூலைத் தமிழினிதான் எழுதினார் என்று வைத்துக் கொள்வோம். இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் மிகவும் ஆக்ரோசமான முறையில் கட்டாய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் தமிழினி மேற்கொண்டதாக எதிரியிடம் சிறைப்பட்ட காலப்பகுதியிலேயே அவர் மீது சில சிங்கள சார்பு ஊடகவியலாளர்களாலும், எழுத்தாளர்களாலும் குற்றம் சுமத்தப்பட்டது. அவ்வாறு கட்டாய ஆட்சேர்ப்பின் ‘நாயகி’ விளிக்கப்பட்ட தமிழினி, எவ்வாறு தமிழீழ தேசியத் தலைவரின் மூத்த புதல்வர் சார்ள் அன்ரனி அவர்களைக் கட்டாய ஆட்சேர்ப்பின் ‘நாயகன்’ என்று அவர் எழுதியதாகக் கூறப்படும் நூலில் விளிக்க முடியும். இது நகைமுரண் அல்லவா?
சரி, இதைதான் விடுவோம். தமிழினி எழுதியதாகக் கூறப்படும் நூலில் கருணாவைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ‘துரோகியாக’ ஆக்கினார்கள் என்று எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது கருணா துரோகி அல்ல என்றும், ஏதோ ஒரு பிரச்சினைக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையால் அவர் துரோகியாக அறிவிக்கப்பட்டார் என்றும் அந்நூலில் கூறப்பட்டிருக்கின்றது. இதனைத் தமிழினிதான் எழுதினார் என்று வைத்துக் கொண்டால், எதற்காக 2004ஆம் ஆண்டு கருணாவைத் தமிழினி துரோகி என்று விளித்தார்? அப்படியென்றால் தமிழினி அன்று நடித்தாரா?
இதனையும் விடுவோம். பெண் விடுதலை தொடர்பான தெளிவான வேலைத்திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருக்கவில்லை என்று தமிழினியின் பெயரால் வெளிவந்திருக்கும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மை என்று வைத்துக் கொண்டால், சமாதானப் பேச்சுவார்த்தைகளின் பொழுது உருவாக்கப்பட்ட பெண்கள் விவகார உப குழுவில் எதற்காக அவரைத் தமது தலைமைப் பிரதிநிதியாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நியமித்தார்கள்? வெறும் வெட்டிப் பேச்சு பேசுவதற்கா? அல்லது ஒரு பொம்மைப் பிரதிநிதியாகவா?
இவை எல்லாவற்றையும் விடுவோம். உண்மையில் தமிழினிக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதும், அதன் தலைமை மீதும் காழ்ப்புணர்ச்சி இருந்திருந்தால் எதிரியின் தடுப்புக் காவலில் இருந்து வெளிவந்ததும் ஏன் அவர் சிங்களத்தின் கைப்பாவையான கே.பியுடன் இணையவில்லை? வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும், அதற்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஏன் அவர் களமிறங்கவில்லை? சரி, அதுதான் போகட்டும்.
புற்றுநோய்க்கு ஆளாகும் வரை தனது முகநூல் பக்கத்தில் பல விடயங்களைத் தமிழினி எழுதினார். ஆனால் அவற்றில் ஒன்றில் கூடத் தமிழீழ விடுதலைப் புலிகளையோ அன்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களைப் பற்றியோ தமிழினி அவர்கள் இழிவாக எழுதவில்லையே?
karunakaran
நூலை எழுதுவதற்கு உதவியதாகக் கருதப்படும் கருணாகரன்

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் இறந்து போன தமிழினியால் பதில் கூற முடியாது. எனவே இவ்வாறான கேள்விகளை இனி எவரும் கேட்கமாட்டார்கள், அவ்வாறு கேட்டாலும் அவற்றால் எதுவும் நடக்கப் போவதில்லை என்ற தைரியத்தில் ஜெயக்குமார் அவர்களும், கூர்வாளின் நிழலில் என்ற நூலை அவர் எழுதுவதற்கு உதவிய ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுவின் அடிவருடிகளில் ஒருவரான கருணாகரன் போன்றவர்களும் தமிழினியின் பெயரால் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குச் சேறு பூசும் கைங்கரியத்தைப் புரிந்துள்ளார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
வன்னி மண்ணில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 2008ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 10ஆம் நாளன்று நடைபெற்ற முதற்பெண் மாவீரர் மாலதியின் நினைவு நிகழ்வில் மக்கள் மத்தியில் தமிழினி உரையாற்றினார். யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த முன்னரங்கக் களப்பகுதியில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரணைமடுச் சந்தியில் நிறுவப்பட்டிருந்த மாலதியின் நினைவுச் சிலையின் அமைவிடத்தில் அந்த நிகழ்வு நடைபெற்றது. அங்கு உரையாற்றும் பொழுது பின்வருமாறு தமிழினி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்:
‘‘கிளிநொச்சி மண்ணைக் கைப்பற்றி விடுவோம் என்று சிங்களப் பேரினவாதிகள் கொக்கரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்நிகழ்வை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றோம். தமிழீழப் பெண்களுக்கு நம்பிக்கை என்ற பெரும் ஆயுதத்தை மாலதி விதைத்து விட்டுச் சென்றிருக்கின்றார். இந்தியப் படைகளுடன் மோதல்கள் தொடங்கிய போது எம்மிடம் கனரக போர்க் கலங்கள் இல்லை. இருந்தவையெல்லாம் நம்பிக்கை மட்டுமே. போராளிகளிடம் இருந்த நம்பிக்கையும், மன உறுதியும், ஓர்மமும், அர்ப்பணிப்புமே பெரும் வல்லரசை வெல்லக் கூடிய நிலையை உருவாக்கியது.’’
இவ்வாறு விடுதலைப் போராட்டத்தின் வெற்றியென்பது போராளிகளின் நம்பிக்கையிலும், மன உறுதியிலும், ஓர்மத்திலும், அர்ப்பணிப்பிலும் தங்கியிருந்ததாக அடித்துக் கூறிய தமிழினி, எதற்காக ஆயுதம் தாங்கிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி கண்டமைக்குப் புதிய காரணங்களைக் கண்டறிய வேண்டும்? அன்று இரணைமடுவில் தமிழினி ஆற்றிய உரையில் ஆயுதம் தாங்கிய தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி கண்டமைக்கான அனைத்துக் காரணங்களும் மறைந்திருக்கும் பொழுது, கூர்வாளின் நிழலில் என்ற பெயரில் புதிய கண்டுபிடிப்புக்களை அவர் மேற்கொள்வதற்கு என்ன தேவை ஏற்பட்டது?
இதில் ஆசுவாசமளிக்கக்கூடிய விடயம் ஒன்று இருக்கின்றது. தமிழ்த் தேசிய உணர்வு மிக்க எந்தவொரு தமிழர்களும் தமிழினியின் பெயரால் வெளிவந்திருக்கும் நூலை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் அது.
இந்த நூலை இந்திய உளவு நிறுவனங்களின் அடிவருடிகளும், சிங்களம் போடும் எலும்புத் துண்டுக்காகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை விலைபேசிய ஆனந்தசங்கரி போன்றவர்களுமே வரவேற்றிருக்கின்றார்கள். இதிலிருந்து இந்நூலின் நதிமூலத்தையும், ரிசிமூலத்தையும் ஐயம்திரிபு இன்றி நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.
இங்கு வேடிக்கை என்னவென்றால் கிளிநொச்சியில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட துணைத் தலைவர் பொன்.காந்தன் அவர்கள், ‘தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை நோக்கிக் கைநீட்டும் அதிகாரம் அனைத்துத் தமிழர்களுக்கும் உண்டு. இல்லையென்றால் அவர் ஒரு சர்வாதிகாரியாகி விடுவார். எனவே தலைவர் அவர்களை நோக்கிக் கைநீட்டியதன் மூலம் அவர் ஒரு சர்வாதிகாரி அல்ல என்பதைத் தமிழினி உறுதி செய்திருக்கின்றார்’ என்று கூறியிருக்கின்றார். ஆக, எழுத்தாளர் ச.ச.முத்து அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால் தலைவர் அவர்களைப் போற்றுவது போன்று பாசாங்கு செய்து பொன்.காந்தன் வஞ்சனைப் புகழ்ச்சி செய்துள்ளார் என்றே எண்ண வேண்டியிருக்கின்றது.
தலைவர் அவர்களை நோக்கிக் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்த காலப் பகுதியில் தமிழினிக்கு நிறையவே இருந்தது. எல்லோருடைய கருத்தையும் பொறுமையாக செவிமடுப்பவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள். தனக்குப் பிடிக்காத கருத்தை ஒருவர் கூறினால், எவ்வளவு நேரத்தை விரயம் செய்து அதனை அவர் கூறினாலும், பொறுமையாக கேட்டுக் கொண்டிருப்பவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். அந்த அளவு பொறுமையை வேறு எவரிடமுமே காண முடியாது. இது தமிழினிக்கும் தெரியும்: தலைவர் அவர்களுடன் உரையாடிய ஏனைய பலருக்கும் தெரியும். பாவம், வஞ்சனைப் புகழ்ச்சி செய்யும் காந்தனுக்கோ, அன்றி தமிழினியின் பெயரால் தலைவர் அவர்கள் மீது வசைபாடும் நூல் எழுதிய ஜெயக்குமார் அவர்களுக்கோ, ஈ.பி.டி.பி கும்பலின் அடிவருடியான கருணாகரன் அவர்களுக்கோ இது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
இந்த இடத்தில் மகாகவி பாரதி எழுதிய வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன. அவை சகல வஞ்சனைப் புகழ்ச்சியாளர்களுக்கும் சமர்ப்பணம்:
‘நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறனுமின்றி
வஞ்சனை சொல்வாரடி – கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
தேவிகோ யிலிற்சென்று
தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென்றெண்ணிக் – கிளியே
அஞ்சிக் கிடந்தாரடி.
சிந்தையிற் கள்விரும்பிச்
சிவசிவ யென்பது போல்
வந்தே மாதரமென்பார் – கிளியே
மனதி லதனைக் கொள்ளார்.
கூட்டத்திற் கூடிநின்று
கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடி – கிளியே
நாளில் மறப்பாரடி.
மானம் சிறிதென்றெண்ணி
வாழ்வு பெரிதென்றெண்ணும்
ஈனர்க் குலகந்தனில் – கிளியே
இருக்க நிலைமையுண்டோ?’
நன்றி – ஈழமுரசு
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila