அரசியல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை வடக்கு மாகாண சபை நேற்றுமுன்தினம் சபையில் முன் வைத்து விவாதத்துக்கு விட்டுள்ளது.குறித்த தீர்வுத்திட்ட முன்வரைபு தொடர்பிலான வாதப் பிரதிவாதங்கள் இனிமேல் நடைபெறவிருக்கின்ற நிலையில்,
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட வரைபு ஒன்றை தயாரிக்க வேண்டும் என்ற முடிபுக்கு வடக்கு மாகாண சபை வருவதற்குக் கார ணம் தமிழ் மக்கள் பேரவை என்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழ் மக்கள் பேரவை தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை முன்வைத்த நிலையில், விழிப்படைந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் நாங்களும் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை முன்வைக்க வேண்டும் என நினைத்தனர்.
அவர்களின் முன்வருகை தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தை முறியடிப்பதாக இருந்த போதிலும் வடக்கு மாகாண சபையில் இருக்கக் கூடிய, தமிழ் மக்களின் மனநிலையை உணர்ந்த உறுப்பினர்கள் சிலர் கடுமையாகப் பாடுபட்டு தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை தயாரித்துள்ளனர்.
வடக்கு மாகாண சபையில் நேரத்தை விரயம் செய்து கொண்டிருந்த உறுப்பினர்கள் சிலர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தங்களோடு இருப்பதாகக் காட்டுவதற்காக தீர்வுத்திட்டம் ஒன்றை வடக்கு மாகாண சபையும் தயாரிக்க வேண்டும் என எடுத்த முடிபு இப்போது அரங்கத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்ந்த வரும் சபையில் நியாயத்தை துணிந்து எடுத்து ரைப்பவருமாகிய அன்ரனி ஜெகநாதன் அவர்கள் வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு நியாயமான கேள்வியை முன் வைத்துள்ளார்.
அதாவது குறித்த தீர்வுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் ஏற்றுக் கொள்ளுமா? என்பதே அவர் முன்வைத்த நியாயமான கேள்வியாகும்.
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை மட்டும் ஏற்கப் போகிறதா என்ன?
ஆக, கூட்டமைப்பின் தலைமையின் முடிபு என்ன? என்பதை முதலமைச்சரும் அவைத் தலை வரும் அறிந்து சபைக்குத் தெரியப்படுத்த வேண் டும் என்றும் அன்ரனி ஜெகநாதன் கேட்டுள்ளார்.
இங்குதான் ஓர் உண்மை வெளிப்படுகிறது. அதாவது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முறியடித்து வடக்கு மாகாண சபையும் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்தது என்பதைக்காட்ட வெளிக்கிட்ட கூட்டமைப்புத் தலைமையின் இராஜதந்திரம் பிசுபிசுத்துப் போகிறது.
தமிழ் மக்கள் பேரவையில் இருந்து முதலமைச்சரை பிரித்தெடுக்கும் இராஜதந்திரமாக வடக்கு மாகாண சபையும் தீர்வுத்திட்டத்தை தயாரித்தாக வேண்டும் என நினைத்து அதை அரங்கேற்றியவர்களுக்கு, தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஓர் உண்மையான-தெளிவான-நியாயமான கேள்வியை எழுப்பியமை பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
வடக்கு மாகாண சபையின் செயற்பாட்டை கூட்டமைப்பு அலட்சியம் செய்து வருகிறது. சபையை கூட்டமைப்பு மதிப்பதில்லை என்ற உண்மையை தமிழரசுக் கட்சி சார்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் பகிரங்கப்படுத்தியமை உண்மை நிலையை மக்கள் அறிவதற்கு உதவியாகவுள்ளது.