சீனா அரசாங்கத்தினால் இலங்கையைில் முன்னெடுத்த பாரிய அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் அவர்களிடம் கையளிக்கும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தெரிய வருகிறது.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பெருந்தொகை கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில், அதற்கு பதிலாக சொத்துக்களை வழங்கும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக பாரிய நிதிச் செலவில் நிர்மாணிக்கப்பட்ட மத்தல சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் என்பனவற்றை சீனாவிடம் மீள கையளிக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கும் மத்தல விமான நிலையத்தின் நிர்மாண செலவு 203 மில்லியன் அமெரிக்க டொலராகும். ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தின் மொத்த செலவு 750 மில்லியன் அமெரிக்க டொலராகும்.
கடனுக்கு பதிலாக நிலையான சொத்துக்களை செலுத்தும் நடைமுறை உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையென்ற போதிலும், சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச துறைமுகத்தை எந்தவொரு நாடும் வழங்கியதில்லை.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட குழுவினர் சீனா விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது சீன அரசாங்கத்தின் கடன் உதவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் துறைமுக நகரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீர்த்து கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.