தமிழ் மக்கள் பேரவையின் ஓர் அங்கமாக சமூக, பொருண்மிய வலுவூட்டலுக்கான உபகுழு உருவாக் கப்பட்டுள்ளது.
தேவையின் அடிப்படையில் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கியதான உபகுழுக்களின் உருவாக்கம் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் நலப் பணிக்குபேருதவியாக அமையும் என்பது திண்ணம்.
ஏற்கெனவே அமைக்கப்பட்ட அரசியல் நிபுணர் குழு ஒரு பெரும் சாதனையாக அரசியல் தீர்வுத்திட்ட வரைபு ஒன்றை தயாரித்து வெளியிட்டிருந்தது.
தமிழ் மக்கள் பேரவையால் அரசியல் தீர்வுத் திட்டம் வெளியிடப்பட்டதன் காரணமாக வடக்கு மாகாண சபையும் தீர்வுத்திட்டம் ஒன்றை தயார் செய்யவேண்டியதாயிற்று.
இப்போது தமிழ் மக்கள் பேரவையின் மூன்று உபகுழுக்களின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று பொறுப்புக்கூறலுக்கான உபகுழு,
இரண்டாவது கலை, கலாசார பேணுகைக்கான உபகுழு, மூன்றாவது சமூக, பொருண்மிய வலுவூட்ட லுக்கான உபகுழு.
இந்த மூன்று உப குழுக்களும் செம்மையாக செயற்படும் போது அதன் முடிவு தமிழ் மக்களுக்கு சாதகமான விளைவுகளை தரும் என்பது உறுதி.
அதேநேரம் மூன்று முக்கிய உப குழுக்களில் சமூக, பொருண்மிய வலுவூட்டலுக்கான உபகுழுவின் பணி என்பது மிகவும் முக்கியமானதாகவுள்ளது.
அதாவது தமிழர் தாயகத்தில் இன்றிருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினை தொழிலின்மை; உற்பத்தியின்மை; அபிவிருத்தியின்மை என்பதாகும்.
எனவே மேற்கூறிய மூன்று விடயங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டுமாயின் எங்கள் தாயகத்தின் பொருளாதாரத்தை கட்டியயழுப்புவதென்பது அவசியமாகின்றது.
தமிழர் தாயகத்தில் பொருளாதாரத்தை கட்டியொழுப்புதல் என்ற விடயம் முன்வருகின்ற போது, எத்தகைய நிறுவனங்களை உருவாக்க முடியும்? எங்கே உருவாக்க முடியும்? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்? சந்தைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் எவ்வாறு உள்ளன? என்ற அடிப்படையில் திட்டம் ஒன்றை தயாரிப்பது அவசியமாகும்.
அதாவது தமிழர் தாயகத்தில் எங்கள் புலம்பெயர் உறவுகள் அல்லது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இங்கு முதலிடக் கூடிய தொழில்துறைகள் பற்றிய அடையாளப்படுத்தல்கள் அவசியமாகின்றன.
அதேவேளை எத்தகைய தொழில்துறைகளுக்கு இங்கு வாய்ப்பு உள்ளது. எங்கள் இளைஞர் யுவதிகள் எத்தகைய தொழிற் பயிற்சிகளை மேற்கொள்வது வேலைவாய்ப்புக்கான களத்தைத் தரும் என்ற விடயங்களும் உள்ளடக்கப்படுவது தேவையே.
ஆக, ஒட்டுமொத்தத்தில் சமூக, பொருண்மிய வலுவூட்டல் உபகுழுவினால் தயாரிக்கப்படும் முன்மொழிவு என்பது தமிழர் தாயகத்தில் முதலிடக் கூடியவர்களுக்கு உள்நாட்டில் தொழில்துறைகளில் ஈடு பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு, வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு, புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க முற்படுகின்ற இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஆவணமாக அமைதல் வேண்டும்.
இந்த ஆவணம் என்பது துறைசார் நிபுணர்கள், பல்கலைக்கழக புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், அனுபவசாலிகள் உள்ளிட்ட பலரின் கருத்துக்கள் ஆலோசனைகள் என்ப வற்றை உள்ளடக்கியதாக அமையும் போது அதுவே எங்கள் தாயகத்தின் பொருளாதாரத்தை நிமிர்த்து வதற்குரிய வேதநூலாகும்.
ஆகையால் இது விடயத்தில் சமூக, பொருண்மிய வலுவூட்டல் உபகுழுவின் வகிபங்கும் செயல் ஊக்கமும் இருளை நீக்கி ஒளியை ஏற்றுவதாய் அமையும் என்பது உண்மை.