யுத்தத்தின்போது இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின்போது பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அது குறித்து நாம் நம்பகரமான விசாரணைகளை நடாத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தின்போது இனப்படுகொலை நடந்தது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவ்வாறு இனப்படுகொலைகள் எதுவும் நடைபெறவில்லை. யுத்தத்தின் போது பாரதூரமான மனித உரிமை மீறல்களும் போர் குற்றங்களும் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவை குறித்து நாம் விசாரணை நடத்துவோம்.
ஆனால் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அத்துடன் யுத்தம் நடைபெற்றவேளை தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன சில நாட்கள் நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தார் என்றும் அவர் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவாரா எனவும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அதிர் மைத்திரிபால சிறிசேன முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷ நாட்டில் இல்லாத சமயத்திலேயே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தார். இந்நிலையில் ஒரு சில நாட்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் என்பதற்காக அவர் நல்லிணக்கத்தை முன்னெடுக்கமாட்டார் என கூறமுடியாது.
அதிபர் மைத்திரிபால சிறிசேன நல்லிணக்கத்துக்காக பாரியளவில் குரல்கொடுத்து வருகின்றார். அத்துடன் வடக்கில் இராணுவத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த வருடமளவில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டுவிடும்.
வடக்கில் இராணுவத்திடம் உள்ள காணிகளை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாங்கள் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறோம். அதனூடாக நல்லிணக்கம் முன்னெடுக்கப்படும். இதேவேளை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் எம்முடன் இணைந்து நல்லிணக்கத்துக்காக செயற்பட வேண்டும்.
நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றதும் புலம் பெயர் சமூகத்தில் 472 தனி நபர்களினதும் 16 அமைப்புக்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளேன். எனவே அவர்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும் எனவும் தெரிவித்தார்.