பொறுப்புக்கூறல் விவகாரம் : சர்வதேசமும் கைவிட்டு போகும் நிலை!


பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச நாடுகள் என்பன இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென பாதிக்கப்பட்ட சமூகத்தினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பும் சிதறிப் போகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

போர்க்குற்ற விசாரணைகள் பற்றி எந்தவித எச்சரிக்கை உணர்வினையும் கொண்டிராத நல்லாட்சி அரசாங்கமானது, இம்முறை ஜெனீவா அமர்விலும் தம்மீது எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்பட மாட்டாதென இறுமாப்புடன் கூறித் திரிகின்றது. தற்போது இடம்பெறும் சம்பவங்களும் இதனை பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அங்கு சென்றுள்ளார்.

தற்போது அங்கு பல புலம்பெயர் அமைப்புகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டு அமைப்புகளுடன் கலந்துரையாடி வரும் கஜேந்திரகுமார், சர்வதேச சமூகத்தால் எதிர்க்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருந்து அனுப்பப்பட்டுள்ள போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு விடயங்களில் இதுவரை எவ்விதமான காத்திரமான முன்னெடுப்புக்களும் இலங்கையில் மேற்கொள்ளப்படவில்லையென தெரிவித்துள்ள கஜேந்திரகுமார், இவ்விடயத்தில் சர்வதேச நாடுகளும் ஐ.நாவும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமென எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே நிலவுவதாக கூட்டிக்காட்டியுள்ளார்.

முழுமையான பொறுப்புக்கூறலும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வும் எட்டப்படாத வரையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித நீதியும் கிடைக்காதென கஜேந்திரகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான ஐ.நா ஆணையாளரின் வாய்மூல அறிக்கை வெளியாகுவதற்கு இன்னும் இரு தினங்களே எஞ்சியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தினர் சார்பான கருத்துக்கள் அதில் உள்வாங்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila