வவுனியாவிற்கென பரிந்துரைக்கப்பட்ட புதிய பொருளாதார வலயம் எங்கு அமைக்கப்பட வேண்டும்

வவுனியாவிற்கென பரிந்துரைக்கப்பட்ட புதிய பொருளாதார வலயம் எங்கு அமைக்கப்பட வேண்டும்

பொருளாதார மத்திய நிலையம் வவுனியா நகரத்திலிருந்து 2 அல்லது 3 கிலோ மீற்றர் தூரத்திற்குள் இருக்க ;வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தாண்டிக்குளத்திலேயே பெறவேண்டும் என தீர்மானத்தை எடுப்பது பிரதேச பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்திவிடும் என கருதுவது எந்தளவு பொருத்தமானது என்பதை பொருளாதார நோக்கில் ஆராய்வது இன்றைய தேவையாகும்.
அவை தாண்டிக் குளத்தில் அமைக்கப்பட்ட பின்னர் அதுபற்றி கருத்துக் கூறுவது காலம் கடந்த சிந்தனையாகவே இருக்கும் என்பதால் இப்பிரதேச மக்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை பிரதிநிதிகளும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளும் இதுபற்றி நுணுக்கமாக பரிசீலனை செய்யவேண்டும். இத் திட்டம் வடமாகாண மக்களுக்கே ஒழிய வேறு யாருக்குமல்ல என்பதை நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். இதனால் உண்மை யில் தாண்டிக்குளத்தில் இது அமைவது எந்தளவுக்கு பயனுடையது எந்தளவுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடியது என்பது பற்றி ஆழமாக சிந்திக்கப்பட வேண்டியது அவசியமே பொருளாதார அபிவிருத்திக்கான பொது முதலீடு கிடைக்கின்ற இச்சந்தர்ப்பத்தை வினைத்திறனுடன் பயன்படுத்துவதே சிறந்தது.
தாண்டிக்குளத்தை அண்டிய பகுதியில் 140 ஏக்கர் நிலம் 1947ஆம் ஆண்டிலிருந்து விவசாய விதை உற்பத்திப் பண்ணையாக பயன்படுத்தப்பட்டு வருவதை யாவரும் அறிவர். அதில் 35 ஏக்கர் நிலப்பரப்பு 1989இல் இருந்து விவசாயக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்டு விவசாயக் கல்லூரி திறம்பட செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்ததே இவ் இரண்டும் ஒன்றிணைந்ததான செயற்பாடுகளினூடாக விவசாயப் பிரதேசமான வட மாகாணத்திற்கு நெல்விதைகளை வழங்குவதோடு பாரம்பரிய நெல் இனங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் பரீட்சார்தமான புதிய நெல் இனங்கள் எமது பிரதேச மண்வளத்திற்கு பொருத்தமானதாக உள்ளதா என்ற ஆய்வுகளை காலம் காலமாக அவ்வப்போது மேற்கொண்டு விவசாயப்பெருமக்களுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றது.
அவர்களின் இச் சேவைக்கான மதிப்பை பணத்தில் அளவிடுவதாயின் பல ஆயிரம் மில்லியனுக்கு சமனானதாகும் எனவே அச் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுமாயின் நேரடியான மற்றும் மறைமுகமான பல நன்மைகளை இழந்து விடுவோம். அதுபோலவே எமது பிரதேசத்திற்கென தாண்டிக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு விவசாயக் கல்லூரியின் சேவைகளும் பாதிக்கப்படக்கூடாது இவ் விவசாயக் கல்லூரியில் விவசாயப் போதனாசியர்களுக்கான கல் வியும் பயிற்சியும் வழங்கப்படுகிறது. எமது மண்ணுக்குப் பொருத்தமான விவசாயப் பயிர்களும் நாற்றுக்களும் விதைகளும் எமது மக்களால் பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு வந்த பழ மரங் களை பதுகாப்பது எமது நோக்கமாக இருக்க வேண்டும்
.உதாரணமாக கறுத்தக் கொழும்பான், பாண்டி, செம்பாட்டான, வெள்ளைக் கொழும்பான், அம்பலவி, கிளிச்சொண்டன், போன்ற அரிய பழமரக் கன்றுகளின் தாய் மரக்கன்றுகளும் அவற்றி லிருந்து வருடாவருடம் பிறப்பாகம் செய்யப்பட்ட ஒட்டுத் தாவரங்களும் எதுவித தொற்று நோய்களாலும் பாதிக்படாத சூழலை ஏற்படுத்த வேண்டும் விவசாயக் கல்லூரி இதைப் பாதுகாத்து நீண்ட காலமாக எமக்கு சேவையாற்றி வருவதை புதிய திட்டங்களினூடாக சீரளிக்கக் கூடாது இவை ஒரு முறை பாதிக்கப்படுமாயின் இதை மீளக் கட்டி எழுப்புவதென்பது இயலாத காரியம் இது பல ஆயிரம் மில்லியன் செலவிட் டாலும் சாத்தியப்படக்கூடிய தொன்றல்ல.
அமையப்போகும் பொருளாதார வலயம் தாண்டிக் குளத்தில் அமையுமானால் மேற்குறிப்பிட்ட விவசாயப் பண்ணையின் வினைத்திறனான செயற்பாடும் விவசாயக் கல்லூரியின் விலை மதிப்பற்ற சேவையும் பாதிக்கப்படும் குறிப்பாக பொருளாதார வலயத்திற்கென ஒதுக்கப்படும் நிலத்தில் மேற்கொள்ளப் போகும் செயற்பாடுகளினால் ஏற்படப்போகும் திண்ம கழிவுகளினால் மாசுபடுத்தப்பட்ட கழிவு நீர், கழிவு நீர் வாய்க்கால்கள் வாகனக் கழிவுகள் வாகன நெருக்கடி களால் ஏற்படும் காற்று மாசடைதல் போன்றவை அருகில் உள்ள நிலங்களையும் அருகில் செயற்படுத்தப்படும் பொருளாதார நடவடிக்கை களிலும் மிகப்பெரும் பாதி ப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் இவற்றின் பெறுமதி பொருளாதார வலயம் எற்படுத்துவதற்கு செலவிடும் 200 மில் லியன் ரூபாவைவிட அதிகம்.
குறிப்பிட்ட செயற்பாட்டி ற்கு எடுக்கப்படும் பொருளாதாரத் தீர்மானகள் ஏனைய பொருளாதார செயற்பாடுகளுக்கும் ஒத்திசைவானதாக இருக்கவேண்டும் எதிர்காலத்தில் அப்பொருளாதார செயற்பாடு குறித்த பொருளாதார செயற்பாட்டின் விரிவாக்கத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் அவசிய மானதாகும்
.இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் ஒன்றான மத்திய மாகாண த்தில் பொருளாதார வலயம் தம்புள்ளையில் அமைக்கப்பட்டுள்ளது இதற்கு மத்திய அரசு கண்டியில் இருந்து 2 கிலோ மீற்றருக்குள் இருக்க வேண்டுமென்ற நிபந்தனையை விதிக்கவில்லை எனக் கருத வேண்டியுள் ளது. தம்புள்ளையில் பொருளாதார வலயம் அமைக்கப்பட்டதால், புதியதொரு நகரம் உருவாகியுள்ளது அத்துடன் பொருளாதார செயற்பாடுகள் புதிய நகரத்துடன் இணைந்ததாக தன்னியல்பாகவே விரிவடைந்து செல்வதால் மறைமுகமாக வேலை வாய்ப்பும் தொழில்துறைகளின் வளர்ச்சியும் தொடர்கின்றது இதுவே அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் போக்கையும் தீர்மானிக்கின்றது
இது போலவே வடமத்திய மாகாணத்திற்கான பொருளாதார வலயம் தம்புத்தேகமவில் ஆரம்பிக்கப்பட்டதால் வடமத்தியமாகாணத்தில் உப நகரம் ஒன்று உருவாகி பிரதேச அபிவிருத்திக்கு உதவுகின்றது. இவ்வாறான அனுபவங்களின் பின்னணியில் நோக்கும்போது தாண்டிக்குளத்தில் 5 ஏக்கரில் அமையப்போகும் பொருளாதார வலயம் எதுவித பொருளாதார அபிவிருத்தித் தொலை நேக்கும் இல்லாமல் எடுக்கப்படும் தீர்மானமாகவே இருக்கும்.
தாண்டிக் குளத்திற்குப் பதிலாக ஓமந்தையில் 35 ஏக்கரைக் கொண்ட மாணிக்கர் வளவில் இப்பொருளாதார வலயம் அமைக்கப்படுவது பொருத்தமானது என்ற வாதம் ஏற்புடையதாக விருக்கும். ஒப்பீட்டு ரீதியில் மேட்டு நிலத்தையும் எதிர்காலத்தில் பொருளாதார வலயம் பலதொழில் துறைகளுடன் விவரிக்கப்படக் கூடியளவுக்கு நிலத்தையும் புதிய உப நகரத்தின் விரிவாக்கத்திற்கான வாய்ப்புக்களையும் கொண்டதாகவுள்ளது.
அத்துடன் விவசாயப்பிரதேசமாக இருப்பதால் தொழிலாளர் தேவையை இலகுவாக நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும் பொருளாதார அபிவிருத்தி அனுபவங்களின் அடிப்படையில் எல்லா அபிவிருத்தியடைந்த பொருளாதாரங்களிலும் விவசாயத்துறையே கைத்தொழில் துறைக்கு மலிவான தொழிலாளரை வழங்கியுள்ளது எனவே எதிர்கால விரிவாக்கத்திற்கு ஓமந்தை பொருத்தமானது இதைவிட போரால் பாதிக்கப்பட்ட கிளிநெச்சி, முல்லைத்தீவு, மாங்குளம் போன்றவை அரசால் தெரிவு செய்யப்பட்டிருந்தால் இப் பிரதேசங்களின் மீள் எழுச்சிக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். தாண்டிக்குளத்தில் இது அமைக்கப்படுமானால் தற்போதுள்ள வவுனியா நகர விரிவாக்கம் எதிர்காலத்தில் நிலப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்பதில் எது வித சந்தேகமும் இல்லை.
அத்துடன் இன்றைய வவுனியா நகரின் வர்த்தக மையமும் அதை நீண்ட காலமாக சிறந்த உச்சப்பயன்பாட்டிற்கு உட்படுத்திய வவுனியா பிரதேசத்தின் வர்தகர்கள் தங்கள் பொருளாதார வாய்பை இழக்க்கூடிய சந்தர்பங்களும் ஏற்படும் புதிய பொருளாதார வலயத்தில் உருவாகப்போகும் வர்தக மையத்தில் விற்பனை நிலையங்களின் பங்கீடு புதிய விதி முறைகளுக்கமைவாக இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதால் பாரம்பரியமாகத் தமக்கிருந்த வாய்ப்புக்களை வவுனியா வர்த்தகர்கள் இழந்துவிடுவர் வேறு பிரதேசத்தவர்களே பொருளாதார வலயத்தில் அதிக நன்மையடைபவர்களாக மாற்றமடைவர்.
இரண்டாவதாக ஏற்கனவே கட்டி எழுப்பப்பட்ட மைலிட்டி மீன் பிடித்துறைமுகத்தை விடுத்து மீன்பிடித்துறைமுக நிர்மாணத்திற்கு தெரிவு செய்யப்பட்ட காரைநகர்ப் பிரதேசமும் வல்வெட்டித் துறை பிரதேசமும் பொருத்தமானதா? மீன்பிடித்துறைமுக நிர்மாணத்தினூடாக மீனவர் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா எதிர்காலத்தில் அவர்களின் தொழில் வினைத்திறனாக செயற்பட வாய்புள்ளதா? மீனவர்களின் மீள்குடியேற்றத்தை புதிய மீன் பிடித்துறைமுக நிர்மாணத் தினூடாக விரைவுபடுத்தமுடியுமா? அவர்கள் தமது சொந்த நிலத்தில் இருந்து மகிழ்வோடு மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு 1983 ஆம் ஆண்டுகளில் பெற்ற வருமானத்தைப் பெற ஆவன செய்ய முடியுமா? என்பது பற்றி ஆழமாக சிந்தி த்து செயற்பட வேண்டிய தருணமிது.
வவுனியாவில் பொருளாதார வலயம், கரரைநகர் மற்றும் வல்வெட்டித்துறையில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படும் என வரவு செலவுத்திட்டத்தில் முன் மொழிகின்ற வேளையில் எங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளைக் கவனத்தில் கொண்டு பொருளாதார வலயம் மற்றும் மீன்பிடித்துறைமுகம் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத் திருக்க வேண்டும். அல்லது உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருந்தால் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பில் விடப்படும் சந்தர்ப்பத்திலாவது இது பற்றி விவாதித்திருக்கலாம் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும்போது எம் மக்கள் சார்பாக சிந்தித்திருக்கலாம். எங்கே போனார்கள் அவ்வேளையில் என்ன செய்தார்கள் பெரும்பான்மை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எங்கள் பாரா ளுமன்ற உறுப்பினர்கள்
தேசிய அரசாங்கமே வரவு செலவுத்திட்டத்தைப் போடுகின்றது இதற்கான அமைச்சரே தீர்மானிக்கும் பொறுப்புடையவர் என்று நீங்கள் வாதம் செய்தால் எங்கள் பிரதேசத்தவருக்கு இது எந்த இடத்தில் இருப்பது பொருத்தமானது என்ற வகையில் இடத்தைத் தெரிவு செய்யும் உரிமை இல்லையா? நான் அறிந்த அளவிற்கு பிச்சைக்காரனுக்கும் அடிமைக்கும்தான் எதுவித தெரிவு உரிமையும் இல்லை இந்நிலையில், நாம் ஒன்றை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் வடமாகா ணத்தில் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்டவற்றில் ஏதோ ஒரு வகையைச் சார்ந்தவர்கள் என்று அரசியல்வாதிகள் வெளிப்படையாக குறிப்பிடுவார்களாயின் இதுபற்றி பேசுவதில் எதுவித பயனும் இல்லை என்ற முடிவிற்கு வருவோம்.
பேராசிரியர்
பசுபதி சிவநாதன்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila