இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிடாது: நிபுணர்கள் தெரிவிப்பு


இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாகத் தலையிடப் போவதில்லை. கடந்த 30 வருட கால அனுபவத்தில் நாம் கற்றுக்கொண்ட பாடம் அதிகமாகும் என இந்தியாவின் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் உள்ளக விடயத்தில் மாத்திரமின்றி புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திலும் நேரடியாக இந்தியா தலையிடாது எனவும் அந்த நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்றுள்ள ஊடகவியலாளர் குழுவை நேற்று (திங்கட்கிழமை) புதுடெல்லியில் அமைந்துள்ள பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வுக்கான மையத்துள் சந்தித்த போதே அவர்கள் இதை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிகாப்பு படை இலங்கைக்கு வருகை தந்த போதும் புலிகளும் அரசும் செய்துகொண்ட சமரசம் மூலம் அதிகளவான இழப்புகளை நாம் சந்தித்தோம். அந்த அனுபவமும் 30 வருடகால அனுபவமும் எமக்கு அதிகமாக உள்ளது.

தமிழ் மக்களை பாதுகாக்கவே நாம் செயற்பட்டோம். எனினும் இந்த செயற்பாட்டால் வடக்கு கிழக்கில் மாத்திரம் ஆயிரத்துக்கும் அதிகமான இந்திய படையினர் இறந்தனர். இந்த கசப்பான அனுபவம் எமக்கு இன்றும் உள்ளது. மேலும் இலங்கைக்கு நாம் ஆதரவை வழங்கவும் ஆலோசனைகளை வழங்கவும் எப்போதும் தயாராகவே உள்ளோம்.

ஆரம்பத்தில் இருந்து நாம் எம்மாலான சகல உதவிகளை வழங்கி வந்தோம். 13ஆம் திருத்தத்தை நாம் முன்வைத்த போதிலும் அதில் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என நம் தெரிவித்தோம். அப்போதைய அரசாங்கம் அதை ஏற்றுக்கொண்டாலும் இதுவரையில் 13 ஆம் திருத்தத்தை அரசாங்கம் அமுல்ப்படுத்தவில்லை.

ஆகவே நாம் இந்த விவகாரத்தில் எம்மாலான முயற்சிகளை செய்தாலும் இறுதியான தீர்வை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும். அதில் எம்மால் நேரடியாக தலையிட முடியாது. ஆகவே, இலங்கையில் நீண்டகால முரண்பாடுகளை தீர்க்க வேண்டுமாயின் அதில் எமது நேரடியான தலையீடுகள் எதையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என நாம் நம்புக்கின்றோம்.

இலங்கையின் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் நேரடியான தலையீடுகள் எவையும் இருக்கப்போவதில்லை. மேலும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கம் தொடர்பில் இலங்கை தமிழர் தரப்பு தெரிவித்த போதிலும் எம்மால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது.

முன்னால் ஜனாதிபதி சமஷ்டி தீர்வு ஒன்றை முன்னரும் முன்வைத்தார். எனினும் இப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அப்போது அதை எதிர்த்து நின்றனர். அதேபோல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பல தடவைகள் சமஷ்டி கதைகளை கூறியே தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

ஆனால், இன்று சமஷ்டி என்பது ஒரு மோசமான வார்த்தையாக இலங்கையில் மாற்றம்பெற்று விட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இந்த விவகாரத்தை மாற்றிவிட்டது. ஆகவே, இலங்கையில் தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிடப்போவதில்லை- என்றனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila