உயர்பாதுகாப்பு வலயத்தை விடுவிக்க மைத்திரி ஆறு மாதகால அவகாசம் கோரியிருந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரோ இரண்டரை வருடங்கள் கோரியுள்ளார். இதன் பிரகாரம் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை பகுதியில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளில் மேலும் ஒரு தொகுதியாக 200 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வைபவத்தில் கலந்து கொண்டபோது அவர் இராணுவத்தினர் வசமிருந்த 29 ஆயிரம் ஏக்கர் காணிகள் படிப்படியாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டு வந்துள்ளது. இப்போது அது மூவாயிரம் ஏக்கர் காணியாகக் குறைந்துள்ளது.
இந்தக் காணிகளில் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்காக இராணுவத்திற்குத் தேவையான காணிகளைத் தவிர மிகுதி காணிகளை படிப்படியாக மாதாந்த அடிப்படையில் அல்லது நாளாந்த அடிப்படையில் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காணிகளைக் கையளிக்கும் நடவடிக்கையானது ஒரு தொடர் நடவடிக்கையாகும் அது தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றதெனவும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஆயினும் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மாத்திரம் 6,000 ஏக்கர் வரையில் பொதுமக்களின் காணிகள் இன்னும் இராணுவத்தின் வசம் இருப்பதாக இடம்பெயர்ந்த மக்களின் நலன்களுக்காகச் செயற்பட்டு வரும் மக்கள் பிரதிநிதிகள் கூறுகின்றனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து சொந்த இடங்களுக்குத் திரும்பி செல்ல முடியாமல் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்ற இடம்பெயர்ந்த மக்களின் காணிகளை கையளிக்க கோரிவருகின்றனர்.
இதனிடையே நில விடுவிப்பென்ற பேரில் இராணுவத்தினரின் பேருந்துக்களில் ஏற்றி செல்லப்பட்டு வெறுமனே திருப்பி அழைத்துவரப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வலி.வடக்கில் நேற்றைய தினம் காணி கையளிப்பு நிகழ்வுக்கு சென்ற காணி உரிமையாளர்களை இராணுவத்தினர் தமக்கு சொந்தமான பேருந்துகளிளையே ஏற்றி சென்றனர். அந்நிகழ்வுக்கு சென்ற காணி உரிமையாளர்களை தமது சொந்த வாகனங்களில் நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
காணி கையளிப்பு நிகழ்வுக்கு வருகைதந்த காணி உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி கிரம சேவையாளர்கள் அனைவரும் மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலுக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு பதிவுகளை இராணுவத்தினர் மேற்கொண்டனர்.
இராணுவ சோதனை சாவடிகளில் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் அவர்களது வாகனங்களில் செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இராணுவத்தினருக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றப்பட்டு நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இன்றைய தினம் மீள் குடியேற்றத்திற்கு குறித்த சோதனை சாவடிக்கு அப்பால் உள்ள பிரதேசங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் குறித்த சோதனை சாவடி அகற்றப்படவில்லை.
அழைத்து செல்லப்பட்ட மக்களும் வெறும் ஆவணங்களை; கையளித்த தமது காணிகளை பார்வையிடக்கூட அனுமதிக்காது திருப்பி அனுப்பியுள்ளனர்.அத்துடன் நிகழ்வின் பின்னர் அப்பகுதிக்கு மக்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.