பத்தாவது தடவையாக வீழ்ந்தவனை பார்த்து நிலமகள் சொல்கிறாள். மகனே! நீ ஒன்பது தடவைகள் எழுந்து நின்றவன் என்று.
எனவே வீழ்வதென்பது வீழ்ந்து போவதற்கா? அல்லது எழுந்து நிற்பதற்கா? என்பதை வீழ்கின்றவர்களே தீர்மானிக்க வேண்டும்.
நாங்கள் வீழ்த்தப்பட்டவர்கள் சொந்த நாட்டில் சர்வதேசத்தின் உதவியோடு எங்கள் பலம் அடக்கப்பட்டது.
தமிழனை இப்படியே வளர விட்டால் அவன் வல்லரசு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடுவானோ என்ற ஏக்கத்தில் உலக நாடுகள் தங்கள் ஒத்துழைப்பைக் கொடுத்து தமிழனை வீழ்த்தின.
வீழ்ந்த தமிழன் எழுந்து விடுவானோ? என்ற ஏக்கத்தில் எத்தனையோ நாசங்கள் செய்யப்பட்டன.
கூடவே உலக நாடுகள் உதவி என்ற பெயரில் எங்களை கையேந்த வைக்கும் கலாசாரத்திற்குள் வலிய இழுத்துவந்து எங்கள் இனத்தை சோம்பேறித்தனமாக்க எடுத்த நரித்தந்திரங்களும் எங்கள் எழுகை மேல் விழுந்த பாரம் என்பதை உணர முடியும்.
இதற்கு மேலாக போராட்டத்தின் பரிணாமத்தில் முப்படைத்தளத்திலும் சாதனை படைத்த தமிழன் வீழ்த்தப்பட்டாலும் அவன் வீழ்ந்து கிடப்பது பலமாக எழுவது எப்படி என்று சிந்திப்பதற்காகவே எனப் பயந்த இலங்கை ஆட்சியாளர்கள் எப்படி எல்லாம் தமிழினத்தை வேதனைப்படுத்தி வேரறுக்க முடியுமோ அந்தளவுக்கு உச்சமாக செயற்பட்டனர்.
தவிர, தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் வெட்டிச்சரிக்கப்பட வேண்டும். இனி ஒரு விடுதலைப் போராட்டம் பற்றி தமிழன் இம்மியும் நினைக்கலாகாது என்று உறுதிப்பட நினைத்தவர்கள் எங்கள் இளம் சமூகத்தை-மாணவ குழுமத்தை பிறழ்வான பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன.
இவை எல்லாம் நடந்து கொள்கின்ற போதிலும் எங்கள் இனத்தை எப்படியும் மீட்க வேண்டும்; எங்கள் உடன் பிறப்புக்கள் வாழ வேண்டும்; நாங்கள் மீளவும் எழவேண்டும் என்று நினைக்கின்ற பேருள்ளங்கள் பல் வழிகளிலும் எம் இனத்தைக் காப்பாற்ற படாப்பாடு படுகின்றனர்.
தமிழினத்தை சிதைப்பது என்ற முடிவில் உறுதியாக இருக்கும் பாதகர்களை வெற்றி கொள்வதற்காக நாம் பெரும் தியாகங்களைச் செய்யவேண்டும்.
அதில் ஒன்று வீழ்ந்த எம் இனம் எழ வேண்டும். வீழ்ந்தவன் என் சகோதரன் என்பதால் நானே கைகொடுத்து அவனைத் தூக்கி விடுவதுதான் என் இனத்துக்கு மதிப்பு என்று உணர்ந்து உதவுவது உலகுவாழ் முழுத் தமிழர்களினதும் கடமை.
இந்தக் கடமை இன்று மெல்லமெல்ல நடந்து கொண்டிருக்கிறது.
தனி ஒரு மனிதன் வீடற்ற பதினைந்து குடும்பங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தல் என்பது எம் இனத்தை தூக்கி விடும் அரும் பணி.
இதுபோன்ற பணியை நாமே செய்வோமாயின் எங்களுக்கு எந்த நாடும் எந்த அரசும் உதவ வேண் டியதில்லை.
இந்த உலகில் வீழ்ந்த ஒரு இனம் தன் சக்தியால் எழுந்து கொண்டது என்று உலகம் போற்றும் அளவில் தமிழினம் வான்புகழ் பெறும்.
ஆகையால் நாமே நமக்கு துணை என்ற மகுட வாசகத்தோடு,
போரினால் பாதிக்கப்பட்ட எங்கள் இனத்தை-எங்கள் உறவுகளை கைகொடுத்து தூக்கி விடுவோம்.
அப்போது தெரியவரும் தமிழன் வீழ்ந்தது எழுவதற்காக என்று.