முன்பொரு காலத்தில் கல்வியிலும், விளையாட்டிலும், சிறந்து விளங்கிய வடமாகாணம், இப்பொழுது போதைப்பொருட்களிலும், மதுபான விற்பனையிலும் முதன்மை பெறுகின்றது. மதுபானம் விற்பனையில் யாழ்ப்பாணம் முதலிடம் பெறுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.
கடந்த காலங்களில் வட மாகாணத்து இளைஞர்கள் என்றால், மதிப்பும் மரியாதையும் இருந்திருந்தது. இருந்திருக்கிறது. ஆனால் இன்று, அவை தலைகீழாகவே மாற்றப்பட்டிருக்கின்றது. பொதுவாக நமது அடுத்தடுத்த தலைமுறையினர் இன்று திசை மாறிப் பயணிக்கிறார்களா? இல்லை திசை மாற்றப்படுகின்றார்களா என்னும் சுய கேள்விகளை நமக்குள் நாமே கேட்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
காரணம், இனவிடுதலை கேட்ட இனத்தின் அடுத்த தலைமுறையினர் திடீரென திசை மாறிப்பயணிப்பதற்கு காரணம் என்ன?
ஒன்று அவர்கள் தங்கள் இனத்தின் விடுதலை, அடிமைத்தனம், ஒடுக்குமுறைகளை, அடக்கு முறைகளை இலகுவில் மறந்து விடுகின்றார்கள். அல்லது தமது இனத்தின் மீதான அக்கறை அல்லது தங்களது எதிர்காலம் தொடர்பான சிந்தனை இல்லாமல் பயணிக்கிறார்கள்.
இன்னொருபுறம், தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும், அதன் தாக்கங்களும் நமது இன்றைய தலைமுறையினரிடையே ஏற்படுத்திய ஆடம்பர வாழ்க்கைக்கான கனவும், சினமா மோகம்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக திட்டமிட்ட வகையிலான போதைப்பொருள், மற்றும் மதுபாவனை புளக்கத்தை அதிகரிக்கும் தந்திரம். இவை தான் இன்றைய நமது வட மாகாணத்தின் மீது ஏற்பட்டுள்ள தாக்கங்கள் எனலாம்.
உண்மையில், இனத்தின் மீது பற்றும், விடுதலை உணர்வுமாய் இருந்த ஒரு சமூகம், இன்று சடுதியாக இப்படி திசை மாறி, மாற்றப்பட்டு பயணிக்கும் நிலையை உருவாக்கி, உருவாகியிருப்பது இலங்கை தமிழினம் அழித்து, காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையே கோடிட்டு காட்டுகின்றது.
அரசாங்கம் ஒருபுறத்தில், நல்லிணக்கம், அரசியல் தீர்வு, இனங்களை ஒற்றுமைப்படுத்துதல் என்று கூறிக்கொண்டு, இன்னொருபுறம், தமிழ் இனத்தினை அழிக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை நிறுத்திட்டமாக கூற விளைகின்றோம்.
இவ்விடத்தில் 2002ம் ஆண்டினை நினைவுகூருவதற்கும் மறக்கவில்லை. விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்தினருக்கு சவால்விட்டு பலமாக இருந்த காலத்தில், சமாதான ஒப்பந்தத்தை கொண்டு வந்து சமாதானத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக்கொண்டு, புலிகளை அழிப்பதற்கான உள்ளக வேலைகளை எவ்வாறு திட்டமிட்டு நடத்தியிருந்தார்களோ அதே வேலைகளைத் தான் இன்று செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இந்த சந்தேகம் வலுப்பதற்கான காரணங்கள் இல்லாமல் இல்லை. யுத்தம் முடிவுற்று ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இலங்கையின் வடபகுதி முழுவதும் இராணுவமும், காவல்த்துறையினரும் போதுமான அளவு குவிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
ஆனால் வட மாகாணத்தில் தான் அதிகளவான போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றன. போதைப்பொருட்களைப் பயன்படுத்தும் ஆட்கள் அதிகரித்துக் காணப்படுகின்றார்கள்.
இது திட்டமிட்டவகையிலான ஒரு செயற்பாடு. அதுவும் வடக்கு மாகாணத்தில் இருக்கும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் வேட்டை. இதற்கு பிரபல பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், என்று இவர்களின் இலக்கு தொடர்கின்றது.
மேலும், இராணுவத்தினரின் கடைக்கண் பார்வையில் இருக்கும், வடமாகாணத்தில் எவ்வாறு இந்த செயற்பாடுகள் நடக்கின்றன என்று கேட்கும் கேள்விக்கு இன்னமும் சரியான பதிலும் இல்லை.
இவை இன்னொருபுறமிருக்க, வடமாகாணத்தில் நிகழும், கொலைகளும், கொள்ளைகளும் தாராளமாகவே நடக்க, அதை தடுக்காமல் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரும், பொலிஸாரும் எங்கே போய்விட்டார்கள் என்றும் கேட்கின்றார்கள் சமூக ஆர்வலர்கள்.
ஆக வடக்கில் ஒருவகையான திட்டமிட்ட அரசாங்கத்தின் செயற்பாடு நன்கு பயிற்சி வழங்கப்பட்ட சில நபர்களால் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்பட்டுவருகின்றது. அதிலும், சிலர் சிக்குவதாகவும், கைது செய்யப்படுவதாகவும் காட்டப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
முப்பது ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதத்தை தாம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்ததாக மார்தட்டும் இராணுவத்தினரால் ஏன் வடக்கில் கடத்தப்படும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், மாவீரர்களுக்கான விளக்கு ஏற்றும் மாணவர்களை அடுத்த சில நிமிடங்களில் இனம் கண்டு கைது செய்யும் இராணுவத்தினரின் மோப்பம் புடிக்கும் சக்தி எங்கே போனது.
ஆக, இராணுவத்தினரின் ஆதரவின்றி இந்த போதைப்பொருட்கள் கடத்தபப்படுகின்றன என்னும் சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கில்லை. அல்லது வடக்கில் கடத்தப்படும் போதைப்பொருட்கள் எப்படியாது தமிழ் இளைஞர்களிடம் போய்ச் சேரட்டும் என்று கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள் என்னும் இரு குற்றச்சாட்டுக்களில் ஒன்று உண்மையாகின்றது,
எதுவாயினும் வடக்கு மாகாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு அரசாங்கம் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ துணைபோகின்றது என்னும் உண்மை இங்கே புலப்படுகின்றது.
உண்மையில் இது நல்லாட்சி அரசாங்கம் தான் எனில், புலிகளைத் தேடி அழித்த இராணுவத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் இந்த போதைப்பொருட்களை கடத்தும் கும்பல்களை கட்டுப்படுத்தி வடமாகாணத்தை அழிவுப்பாதையில் இருந்து மீட்க வேண்டும்.
தவிர, வட மாகாணத்தில் வளர்ந்துவரும் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் நடத்தைகள் மீது அதிதீவிர கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும். குறைந்தது அவர்களின் கைகளில் கொடுக்கும் பணத்தினை குறைப்பதும், தேவையற்ற தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் சாலப்பொருந்தும்.
இவை செய்யத் தவறின் நமது அடுத்த தலைமுறையினர் போதைக்கு இரையாகிப்போன பரிதாபத்தைக் கண்டு கண்ணீர் வடிப்பதை தவிர வேறு ஒன்றும் நம்மால் செய்யமுடியாமல் போகும்..
இன விடுதலைக்காக போராடி வீர காவியமாகிய மாவீரர்களின் கல்லறைகள் முன் கண்ணீர்விட்டு அழுத நாம், போதையால் மடிந்து போகும் பிள்ளைகளைக் கண்டு வயிற்றில் அடித்து கதறவேண்டி வரும். கவனம்...