குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற தண்டனை என்பது குற்றம் செய்தவரை தண்டிப்பதை மட்டும் நோக்காகக் கொண்டதல்ல.
மாறாக குற்றம் செய்தவர்களை தண்டிப்பதனூடாக பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுப்பதும் இதன் நோக்கம் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.
இதன் காரணமாக குற்றம் செய்தவருக்கு தண்டனை என்ற தகவல் வெறும் செய்தியாக பார்க்கப் படுகின்றதே தவிர அந்தச் செய்தி சமூகத்தை திருத்துவதாக அமையவில்லை என்பது உண்மை.
இப்போது வடபுலத்து நிலைமைகளைப் பார்க்கும்போது குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் நட ந்த வண்ணம் உள்ளன.
அதேநேரம் குற்றம் செய்தவர்களுக்கான தண்டனைகளும் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இருந்தும் இந்த தண்டனைகள் குற்றம் செய்தவருக்கு மட்டுமானது என்றே உணரப்படுகிறது.
இதன் காரணமாக குற்றச் செயல்கள் தொடர் பில் பயம் கொள்வதென்பது அறவே இல்லாமல் போய்விட்டது.
இந்த நிலைமை சமூகத்துக்கு தீங்கிழைக்கக் கூடிய சகல தளங்களிலும் பரவிக் கிடப்பதுதான் மிகப்பெரும் வேதனை.
நாளுக்கு நாள் வாகன விபத்துப் பற்றி அறிகின்றோம். விபத்தினால் ஏற்படுகின்ற மரணங்கள் எமக்கு வெறும் தகவலாக இருக்கலாம்.
ஆனால் உயிரிழப்பை சந்தித்த குடும்பத்தின் நிலைமையை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு கணப்பொழுதில் நடந்த விபத்து ஏற்படுத்திய உயிரிழப்பால் அந்தக் குடும்பம் நிர்க்கதியாகி விடுவதென்பது எத்துணை துன்பகரமானது.
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் சண்டித்தனப்போக்கில் நடந்து கொள்கின்ற சாரத்தியமே வட புலத்தில் நடக்கின்ற ஏகப்பட்ட விபத்துகளுக்கும் உயிரிழப்புக்களுக்கும் காரணமாகின் றது.
மற்றவர்கள் பற்றிய நினைப்பில்லாமல் வீதியில் வாகனத்தை கொண்டு வரும் சாரதிகள் எந்நேரமும் ஆபத்தானவர்கள். இதன் காரணமாகவே நம் மண்ணில் விபத்துக்களும் தாராளமாகி விடுகின்றன.
இத்தகைய சாரதிகளை சிறையில் அடைத்தால் கூட அவர்கள் திருந்துவார்கள் என்று சொல்வதற்கில்லை.
அவர்கள்தான் திருந்தவில்லை. அந்தச் சிறையடைப்பு ஏனைய சாரதிகளையாவது திருத்துகிறதா என்றால் அதுவும் இல்லை என்று கூறும் அளவில் எங்கள் சாரதிகள் பலரின் மனநிலை வக்கிரப்பட்டுப் போயுள்ளது.
எனவே இவை பற்றி ஓர் ஆராய்வு நடக்குமாயின் மனப்பாங்கு என்ற விடயத்தில் நாங்கள் மிகவும் பின்தங்கியிருப்பது தெரியவரும்.
ஆகவே, மனப்பாங்கு என்ற விடயம் கவனிக்கப்பட வேண்டும். வீதியில் குப்பையைக் கொட்டுவதென்பது மனப்பாங்கு சார்ந்த விடயமே.
வீதியில் குப்பைகளைக் கொட்டுவதால் மிகப் பெரிய அசெளகரியங்கள் ஏற்படும் என்ற அறிவு தெரிந்திருந்த போதிலும் அது குறித்த மனப்பாங்கு இன்மையால், அறிவையும் கடந்து அநீதியான வேலைகள் நடக்கின்றன.
ஆக, எங்கள் சமூகத்தில் மனப்பாங்கு குறித்த விடயப்பொருள் பரவலாகப் பேசப்படவும் அமுலாக் கப்படவும் வேண்டும். இல்லையேல் எல்லா அநியாயங்களும் சர்வசாதாரணமாகி விடும்.